Sri Lanka

வளரும் வடக்கு: யாழ்ப்பாணத்தில் சவர்க்கார வாசம்…

வடக்கின் வளர்ச்சியை உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டுவரும் நண்பர் ஜெகன் அருளையாவின் பல ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை மறுமொழி இணையத்தளம் மற்றும் எழுநா சஞ்சிகை, இணையம் மூலமாகப் பலரும் வாசித்திருப்பீர்கள். இரண்டு வயதில் பெற்றோருடன் இங்கிலாந்தில் குடிபுகுந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளின் பின்னர் மீண்டும் பிறந்த மண்ணிற்குத் திரும்பி வடக்கில் வளங்கள் அரிதேயாயினும் அங்கு வாழ்ந்தே தீருவொம் என்று அடம்பிடிக்கும் மக்களையும் பார்த்து, சந்தித்து, உரையாடி அவர்களின் கதைகளை உலகுக்குச் சொல்பவர் ஜெகன். அவரது இன்றைய முகநூல் பதிவொன்று அவரைப் போலவே இன்னுமொரு ‘அடங்காத்’ தமிழரின் கதையைக் கூறியிருந்தது. ஜெகனின் அனுமதியுடன் அந்த ஆங்கில மூலப் பதிவைத் தமிழாக்கம் செய்து கொஞ்சம் ஆலாபரணங்களுடன் இங்கு தருகிறேன்.

சந்திரிகா ஆட்சியின்போது யாழ்ப்பாணம் பொருளாதாரத் தடையால் மிகவும் வாடிப்போயிருந்த காலம். சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்குத் தடை. ஆடைகளைத் துவைப்பதற்கு சவர்க்காரத்திற்குப் பதிலாக அப்போ எம்மக்கள் கையாண்ட உத்தி பனம் பழச்சாறு.

இக்காலத்தில், மண்ணை விட்டு வெளிக்கிடமாட்டேன் என்று அடம்பிடித்த என் எழுதிய கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“முந்தியண்டா பனம் பழம் விழுந்தவுடன் அவற்றை மாடுகள் தேடி ஓடும். அவற்றைத் துரத்திவிட்டு நாங்கள் பனம்பழங்களைப் பொறுக்குவோம். இப்போ நாங்கள் உடுக்கும் ஆடைகளுக்காக மாடுகள் எங்களைத் துரத்துகின்றன. பனம் பழத்தின் மணம் தான் அதுக்குக் காரணம்”

யாழ்ப்பாணத்தின் மணம் மாடுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. வெளி நாட்டில் தன் வாழ்வில் பெரும்பங்கைச் செலவழித்த தமிழர் ஒருவருக்கும் அது தெரிந்திருக்கிறது. வாசியுங்கள்.

****

இப்போது சந்திரிகா காலம் இல்லை. யாழ்ப்பாணத்தில் பனைகள் புதிய மிடுக்குடன் நிற்கின்றன. வெளிநாட்டு மணங்களினால் ஈர்க்கப்பட்டு ஓடித்தப்பும் மனிதரை விட எஞ்சியவர்களும் அதே மிடுக்குடன் வாழத் தலைப்படுகிறார்கள்.

ஜெகன் அருளையா கூறும் இந்த சவர்க்காரக் கதை இன்னும் சுவாரசியமானது.

“யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலில் சவர்க்காரம் செய்யும் ஒருவரைப் பற்றி எனது நண்பர் ஒருவர் சாவகாசமாகக் கூறினார். ஆட்டின் பாலாடை (goat cheese) மீது எனக்கு அலாதிப் பிரியம். மூக்கைத் துளைக்கும் அதன் மணம் ஒரு காரணமாக இருக்கலாம். பாலாடை போலவே சவர்க்காரத்திற்கும் விற்பனைக்கான மவுசு இருக்குமா என்பது குறித்து அறிய நான் ஆவலாகவிருந்தமையால் இச்சவர்க்காரத்தின் தயாரிப்பாளரைச் சந்திக்க விரும்பினேன். அப்படி இல்லாதபோதும் சவர்க்காரத்தின் மணம் மூக்கைத் துளைத்தது உண்மை.

உண்மையில் ஆட்டுச் சவர்க்காரம் அவரது பல தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே. தேங்காய் , ஒலிவ், ஆமணக்கு, கடுகு, எள்ளு ஆகிய விதகளிலிருந்து பிழியப்பட்ட எண்ணைகளில் அவர் பல சவர்க்காரங்களைத் தயாரிக்கிறார். எல்லாமே அழகாகக் கைகளினால் செய்யப்பட்டவை. பார்த்து, தொட்டு, முகர்ந்து பார்க்கலாம்.

இவற்றைத் தயாரிக்கும் கைவினைஞரான தர்ஷனின் கதை கூட ஒரு வகையில் தனித்துவமானது.

ஆறு வயாதவிருக்கும்போது அவர் இலங்கையை விட்டுப் போனவர். நெதர்லாந்தைச் சேர்ந்த வெள்ளைக்கார மருத்துவர் ஒருவரும் அவரது மனைவியும் தர்ஷனைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். இத்தம்பதிகளின் வளர்ப்பில் அவர் நெதர்லாந்தில் கல்வி கற்று பட்டப்படிப்பும் கூடவே MBA பட்டமும் பெற்றார். இதன் பிறகு அவர் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த அவரது பிறப்புத் தாயாருடன் வாழ்வதற்கெனச் சென்னை வந்தார்.

சென்னையில் வாழும்போதுதான் அவர் இந்த இயற்கைவழி சவர்க்காரத் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். அத்தோடு வெங்காயம், வெண்ணெய்ப்பழம் ( avocado), மாதுளம் பழம், செங்கிழங்கு (beetroot) போன்ற மரக்கறி வகைகளிலிருந்து பெறப்படும் சாயங்களைக் கொண்டு ஆடைத்துணிகளைச் சாயப்படுத்தினார். இப்படியான துணிவகைகளைக் கொண்டு நாகரீக ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்தார். அப்போது இவரது நிறுவனம் 16 பேர்களுக்கு வேலைகளை வழங்கியது. 2021 இல் அவரது தாயார் இலங்கைக்குத் திரும்ப விரும்பினார். அவருடன் தர்ஷனும் தன் பிறந்த மண்ணுக்குத் திரும்பினார்.தர்ஷனின் கதையில் ஒரு பகுதி மட்டுமே இது. அவரைப் பற்றி இன்னும் விரிவாக ஒருநாள் எழுதலாமென்றிருக்கிறேன்.

நான் இதில் நிபுணனாக இல்லாவிடினும் எனக்குத் தெரிந்தவரை அவரது தயாரிப்புகள் இலங்கையில் தயாரிக்கப்படும் / இறக்குமதி செய்யப்படும் Spa Ceylon நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இணையாக இருப்பதாகவே எண்ணுகிறேன். அவரது தயாரிப்புகளை நான் பாவித்திருக்கிறேன். வாசம் பொருந்தியவையாகவும் நல்லுணர்வு தருவனவாகவும் உள்ளன. மேலும் முதலீடுகளுடனும், தகுதியான பங்காளியொருவரின் உதவியுடனும் அவரது தொழில் முயற்சி மேலும் வெற்றிகளைத் தரக்கூடிய வாய்ப்புகளுண்டு.

யாழ்ப்பாணத்தின் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை அண்டி வாழும் தர்ஷன் Siloam of Ceylon என்ற பெயருடைய அவரது நிறுவனத்தின் மூலம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறார்.”

மாடுகளின் தொல்லை காரணமாகவோ என்னவோ தர்ஷன் இதுவரை பனம் பழச் சவர்க்காரத்தைத் தயாரிக்கவில்லை. பார்ப்போம்.

****