BusinessNews & AnalysisSri Lanka

வளரும் வடக்கு | யதுஷா குலேந்திரனின் ‘ஓலை’க்குடிசை

போர்ணியாவுக்கோ, நியூ யோர்குக்கோ, லண்டனுக்கோ, ரொறோண்டோவுக்கோ போகத் தேவையில்லை, நம்ம யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டே அனைத்தையும் சாதிக்க முடியும். வேண்டுமானால் யதுஷாவிடம் கேட்டுப்பாருங்கள்.

யதுஷா குலேந்திரன் வளரும் வடக்கின் ஒரு உதாரண மங்கை. இன்னும் திருமணமாகவில்லை ஆனால் வடக்கின் கற்பகதருவை மனதாரக் காதலிக்கிறார். 6 மாதங்கள் ஊக்கி நிறுவனத்தின் பயிற்சியின் பின் இப்போது அவர் ஒரு தொழிலதிபர்.

‘ஓலை’ என்ற அவரது நிறுவனம் பனம் பொருட்களிலிருந்து அழகான அன்றாடத் தவைகளுக்கான பொருட்களைத் தயாரிக்கிறது. Olai Shop (Pvt) Ltd. என்ற பெயரில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந் நிறுவனத்துக்கு அவர் முதன்மை நிர்வாகி (CEO). ஓலை தயாரிப்புகளை அவரது வர்த்தக நிலையங்களிலும், விநியோக முறையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Yarl IT Hub, Ukki Life ஆகிய நிறுவனங்களில் கல்வியையும், தொழிலூக்கத்தையும் பெற்ற யதுஷா இன்று உலகம் தெரிந்த ஒரு தொழில் முகவர்.

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மாணவியான அவர் வடக்கில் இளையோரின் தொடுவானமாக விளங்கும் Yarl IT Hub, Ukki Life போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில் கல்வியை முடித்தவர். ஊக்கி அவரை ஊக்குவித்ததன் பயனாக அவர் இன்று விருதுகள் பெற்ற வியாபாரியாக மிளிர்கிறார். இத்தனைக்கும் 2019 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆறு மாதங்களே அவர் ‘ஊக்கியில்’ பயிற்சி பெற்றார்.

தொழில் முயற்சிக்களுக்காக, Global Student Entrepreneur Award, Sri Lanka National Winner 2020 ஆகிய விருதுகளைப் பெற்ற யதுஷா இன்னமும் தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளான Yarl IT Hub, Ukki Life நிறுவனங்களில் தொண்டராகப் பணிபுரிகிறார். ‘ஆற்றல்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து சமகால வாழ்வின் மேம்பாட்டுக்காக டிஜிட்டல் வளங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என அடுத்த சந்ததியினருக்குப் போதகம் செய்து வருகிறார்.

போருக்குப் பின்னான வடக்கில் புதிய உலகைச் சமைத்து வரும் இளையோர்களில் யதுஷாவும் ஒருவர்.

களைத்துப்போன நேற்றய சந்ததி அவரின் ‘ஓலைக் குடிசையில்’ இளைப்பாறட்டும்.

-மாயமான்