ColumnsJekhan Aruliah

வளரும் வடக்கு | போர்க்காலம் கற்பித்த இயற்கை விவசாயம் அமைதிக் காலத்தில் பயன் தருகிறது

பெருமைக்குரிய தமிழர்கள்ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

சேதனப் பாவனையை நோக்கிய இலங்கையின் பயணம் வடக்கிலுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைத் தர முடியாது. போர்க்கால பொருளாதாரத் தடைகளும், கட்டுப்பாடுகளும் வடக்கு மக்களை, இறக்குமதியில் தங்கியிராது இயற்கையில் மட்டுமே நம்பியிருக்க எப்போதே பழக்கப்படுத்தி விட்டன. சில பொருட்கள் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தன, சில, கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்பட்டன. பெண்களின் சுகாதாரப் பொருட்கள், பற்றரி, பெற்றோல், சீமந்து, அசேதனப் பசளை, களைகொல்லி உட்படப் பல பொருட்கள் வடக்கில் காணாப் பொருட்களாகிவிட்டன. ஆடு, மாடு, கோழி ஆதியன வெறும் உணவை மட்டும் தரவில்லை; நிலத்துக்கான உரத்தையும், களை கொல்லியையும், ஏன் மக்களின் போக்குவரத்தையும் அவைகளே வழங்கின. இக்காலத்தில் வளர்ந்து மாற்றி யோசித்து விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு இளைஞனை அதிர்ஷ்டவசமாகச் சந்திக்க நேர்ந்தது

செல்வின் ரவீந்திரகுமார் என் மரத்தின் முன்பால்

2021 இன் ஆரம்பத்தில் நான் செல்வின் ரவீந்திரகுமாரைச் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் எனது வீட்டிலுள்ள அழகிய, நிழல் தரும் பாரிய மரமொன்றைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவைக்காக அவரை நான் அழைக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு வகை வெள்ளைப் பூஞ்சணத் தொற்றுக்குள்ளாகியிருந்த அம்மரம் ஒரு வருடமாகத் தன் செழிப்பை உதிர்த்துக்கொண்டது; ஒருகாலத்தில் என் வீட்டுக்கு வனப்பை அள்ளிச் சொரிந்த அது இப்போது பூப்பதில்லை. அது தப்பிவிடுமென்ற நம்பிக்கையில் நான் மடத்தனமாக நீண்ட காலத்தை வீணாக்கிவிட்டிருந்தேன். இரண்டாவது பருவத்தைத் தாண்டிய பின்னரும் அது துளிர்க்கவுமில்லை, பூக்கவுமில்லை. இனியும் தாமதிக்க முடியாது என்றுணர்ந்த நான் முகநூலில் உதவி கேட்டுப் பதிவொன்றை இட்டிருந்தேன். செல்வினோடு படித்த என் நண்பனொருவர் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒருவருக்கு யாரைத் தெரியும் என்பது முக்கியமல்ல அவருக்கு யாரைத் தெரியும் என்பதுகூட முக்கியம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்.

எனது மரத்தைப் பார்வையிட்ட செல்வின் என்னைப் பலாலி வீதியிலுள்ள திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அது எனது வீட்டிலிருந்து சில நிமிட வாகனப் பயணத்தில் இருந்தது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் உடனடியாகவே எனது வீட்டுக்கு வந்து எனது மரத்தைப் பரிசோதித்து அதற்கான பரிகாரத்தையும் கூறிச் சென்றார். அடுத்த சில நாட்களில் செல்வின் தானே வந்து அந்த மருந்தை மரத்திற்குப் பிரயோகித்தார். தாவரங்கள் மீதான அவரது பற்றுக் காரணமாக அதற்கான கட்டணத்தைக்கூட அவர் ஏற்க மறுத்துவிட்டார். அடுத்த சில வாரங்களில் மரம் துளிர்க்க ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், அது முதல் தடவையாக கண்ணைப் பறிக்கும் செம்மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்குகிறது.

செல்வின் 1992 இல் அரியாலை, யாழ்ப்பாணத்தில் பிறந்து போர்க்காலத்தில் வளர்ந்தவர். யாழ் கச்சேரியில் பணி புரிந்த தந்தைக்கும், யாழ்ப்பாணத்தின் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் கற்பித்த ஆசிரியை ஒருவருக்கும் பிறந்த ஒற்றைக் குழந்தை அவர். பேராதனைப் பல்கலைக் கழகத்த்தில் மருத்துவக் கல்விக்குத் தெரிவாகியிருந்தும், ஒற்றைக் குழந்தை என்ற காரணத்திற்காகவும், போர்க்கால இடர்களை அனுசரித்தும் செல்வினின் தாயாரை பேராதனைக்கு அனுப்ப அவரது தந்தை மறுத்துவிட்டார். அதனால் அவர் ஊரிலேயே தங்கி ஆசிரியைப் பணியை எடுத்துக்கொண்டார்.சிறு பராயத்திலிருக்கும்போதே செல்வினுக்கு விவசாயத்தில் அலாதியான விருப்பிருந்தது. தாயாருடன் வீட்டுத் தோட்டத்தில் உதவிகளைச் செய்துவந்தார். மூலிகைகள் முதல், ஆடுகள் மாடுகள் என்று பலவும் அவரது செல்லப் பிள்ளைகளாகின. 1998 முதல் 2002 வரை, போர் உக்கிரமாக இருந்த காலத்தில் செல்வின் உடுவிலில் இருந்த அவரது அத்தையுடன் வசித்துவந்தார். பாடசாலைக்குப் போவதற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து நெல் வயல்களுக்குச் சென்று வந்த அவரது அனுபவம் அவருக்கும் பூமிக்குமான நெருக்கத்தை மேலும் அதிகரித்திருந்தது.

யாழ் புனித பத்திராசிரியர் கல்லூரியில் தன் உயர்தரக் கல்வியை முடித்த செல்வின், விவசாயத்தில் NVQ, நான்காம் தரத் தகமையைப் பெற்று திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதங்கள் பணி புரிந்தார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இணந்தார். இக் கட்டுரையை எழுதும்போது அவர் விவசாய இளங்கலைப் பட்டக் கல்வியின் நான்காம் வருடத்தில் இருக்கிறார்.

மீண்டும் பழம் காலத்திற்கு

போர்க்காலத் தடைகளோடு வாழ்ந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் அணுகுமுறைகளும் மீண்டும் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்கிறார் செல்வின். போர்க் காலத்தில் நெல் அறுவடையாகியதும் வயல்களில் சணல் (Sun Hemp) என்னும் ஒருவகைப் புல் பயிரிடப்படும். அவை வளரும்போது மாடுகள் அங்கு மேய விடப்படும். இதனால் புற்களும் களைகளும் மாடுகளுக்குத் தீனியாக, அவை தரும் சாணம் மண்ணுக்கு உரமாக இயற்கையின் சமரசத்துடன் சமநிலையும் பேணப்பட்டது. இப்படி உரமேற்றிய வயல்களில் விவசாயிகள் உழுந்து, கடலை, பாசிப் பயிறு போன்ற பயிர்களை விதைத்தார்கள். மனிதருக்கு ஊட்டச் சத்துள்ள உணவைத் தந்த பூமிக்கு இத்தாவரங்கள் மீண்டும் இரையாகி, நைதரசன் போன்ற, தாவரங்களுக்குத் தேவையான போஷாக்கை, மீண்டும் மண்ணுக்கே திருப்பித் தந்தன. அடுத்த போகத்தில் நெல் விதைக்கும்போது அவற்றுக்கு மிகவும் வளமான மண் கிடைத்திருக்கும். இச் சுழற்சி முறை விவசாயம் மண்ணை சேதம் விளைவிக்கும் அசேதனப் பொருட்களினின்றும் பாதுகாத்தது.

வடக்கின் வயல்கள்

இதை விடவும் பஞ்சகெளவ்யம் எனப்படும் இயற்கை உரப் பாவனையும் அப்போது பாவனையில் இருந்தது. மட் பாண்டங்களில் தயாரிக்கப்பட்ட தயிர், பால், கருப்பட்டி மற்றும் பசுவின் சிறுநீர் ஆகியவற்றின் கலவையில் ஒரு வகை இலைகள் ஊறவைக்கப்படும். 21-30 நாட்களுக்குப் புளிக்கவைக்கப்பட்ட பின்னர் இக்கலவை மண்ணில் தெளிக்கப்படும். வேப்பம் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கிருமிகள் கொல்லப்பட்டன. வேம்பு பல அற்புதமான குணாதிசயங்களைக் கொண்டது. விவசாயத்தில் மட்டுமல்ல மருந்து மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பிலும் அது பயன்படுகிறது. வேப்பம் இலைகளை அரைத்துப் பசையாக்கி வெட்டுக் காயங்களில் தடவ காயங்கள் விரைவில் குணமாகிவிடும். வேப்பம் நிழல், இதர மரங்களை விட அதிகம் குளிர்மையையும், சுகந்தத்தையும் தருவது. எனது வீட்டு வளவில் பல வேப்ப மரங்கள் நிற்கின்றன. சுட்டெரிக்கும் மத்தியான வெயிலின் போதும் ஆச்சரியம் தரும் வகையில் அவற்றின் நிழல் மிகவும் குளிர்மையாக இருக்கிறது. அக்குளிர்மைக்கு வேம்புதான் காரணமா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.யாழ்ப்பாணத்தின் பரந்த விவசாய நிலத்தில் பலரும் தமக்கான சிறிய காணிகளுக்கு உரிமையானவர்கள். அவற்றில் அங்குமிங்குமாக வெவ்வேறு பயிர்களை நாட்டிப் பலன் பெறுகிறார்கள். அயலிலுள்ள விவசாயிகள் எல்லோரும் ஒரே பயிரைச் செய்யாமல் தமக்குள்ளே காணப்படும் இணக்கத்துடன் வெவ்வேறு பயிர்களை, வெவ்வேறு போகங்களில் மாற்றி மாற்றிச் செய்துகொள்கிறார்கள். இதனால் பயிர்களிடையே நோய் பரவுவது குறைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மிளகாய்ச் செடியைப் பாதிக்கும் நோய் அயல் தோட்டத்திலுள்ள கத்தரிச் செடியைப் பாதிக்காது; பரவலான நோய்த் தொற்றும் தவிர்க்கப்படுகிறது. தத்தமது தோட்டங்களின் எல்லைகளில் விவசாயிகள் செவ்வந்திச் செடிகளை நாட்டுவதன் மூலம் தத்தம் காணித்துண்டுகளை வரையறை செய்துகொள்கிறார்கள். இச் செவ்வந்திச் செடிகள் சில வகையான பூச்சிகளின் பரம்பலைத் தடுக்க வல்லன. இதனால் பூச்சிகள் வரப்புகளைத் தாண்டிச் சென்று அயலவரின் பயிர்களைத் தாக்குவது தடுக்கப்படுகிறது.

பரம்பரை பரம்பரையாகப் பெற்ற அறிவினையும், நீண்டகால அனுபவத்தையும் கொண்டு, எந்த நிலத்தில் திராட்சைகளைப் பயிரிட வேண்டும், எந்த நிலம் புகையிலைக்கு உகந்தது, எந்த நிலத்தில் மிளகாய், ராசவள்ளி, தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, எள்ளு உள்ளிட்ட பலவகைப் பயிர்களையும் பயிரிடலாம் என வடக்கிலுள்ள விவசாயிகள் அறிந்து அவற்றுக்கான தெளிவான முறைகளைப் பின்பற்றுகின்றனர். செயற்கை உரங்களைப் பாவிக்காது எப்படிச் சிறந்த, ஆரோக்கியமான அறுவடைகளைப் பெற்ருக்கொள்ளமுடியுமெனப் போர்க்காலத் தடைகளும் தட்டுப்பாடுகளும் அவர்களுக்கு, கற்றுத் தந்திருக்கிறது.

கல்விக்கான அவசியம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்த இலங்கையின் இதர பாகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் செல்வின், பலர் தமது பாரம்பரிய நடைமுறைகளைக் கைவிட்டுவிட்டனர் எனக்கூறுகிறார். வயல் விவசாயங்கள் வேண்டாம், வீட்டுத் தோட்ட அனுபவங்கள் கூடப் பலருக்கு இல்லை. விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் பலர் இரசாயன (அசேதன) உரங்களுக்கு அப்பால் வேறு எதையும் அறிந்தவர்களாக இல்லை. 1962 முதல் அரசாங்கம் இந்த அசேதன உரங்களை மலிவு விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. 2019 ஜனாதிபதிக்கு பதவிக்குப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் விவசாயிகளுக்கு உரத்தின் விலையில் 100% தள்ளுபடியைத் தருவதாக உறுதி கூறியிருந்தார்கள்; ஆனால் அது நிறைவேறவில்லை. மலிவான உரம் தமக்கு நன்மையைத் தருமெனச் சில விவசாயிகள் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. விரும்பப்படாத பசளையைப் பயிர்கள் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் அவை அனைத்தும் மண்ணிற்குள்ளேயே விடப்பட்டு நிலக்கீழ் நீரோடு சேர்ந்து மக்களின் குடிநீரை விஷமாக்கி விடுகிறது என்கிறார் செல்வின்.

சானென் ரக ஆடுகள்

செல்வின் எதையுமே முழுமையாகப் பார்ப்பவர். நிலத்தில் தொடங்கி, சமையலறை, மனித குணாம்சம் ஆகியவற்றை ஊடறுத்துச் செல்வது உணவு வட்டமென்ற விரிந்த பார்வை அவருடையது. பண்ணை விவசாயிகள் முதல் குடும்ப பாவனையாளர்கள் வரை இவ்விடயத்தில் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள் என்கிறார். தமது பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் சிறுவயதிலிருந்து கற்க ஆரம்பிக்க வேண்டும். பசளைகளையும், களை கொல்லிகளையும் இயற்கை முறைகளில், வீடுகளிலே செய்யக்கூடிய முறைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நைதரசனை வளியிலிருந்து பெற்று நிலத்துக்குள் புதைக்கும், மண்ணை மீள் வளப்படுத்தும் தாவரங்கள் மற்றும் சாணம், இயற்கை உரங்கள் ஆகியவற்றைக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும். கடைகளில் வாங்கும் விலங்குணவுகளைத் தவிர்த்து, அதிகப் புரதச் சத்துக்களைக் கொண்ட அசோலா (Azolla), டக்வீட் (Duckweed) போன்ற தாவரங்களை வளர்த்து பண்ணை விலங்குகளுக்கு ஊட்ட வேண்டும். செயற்கை மருந்துகளிலும், ஊட்டச் சத்துகளிலும் தங்கியிராது அதிக நோயெதிர்ப்பைக் கொண்ட, அதிக பலனைத் தரும், ‘நேக்கெட் நெக்’ கோழிகளையும் ( Naked Neck chicken), ‘ஜம்னாபரி’ மற்றும் ‘சானென்’ஆடுகளையும் (Jamnapari and Saanen ) தேர்வுசெய்யப் பழகிக்கொள்ளவேண்டும்.

5 இலட்சம் ரூபாய்களுடன், 20 பரப்புக் காணியில் (எட்டில் ஒரு பங்கு ஏக்கர்) ஒரு மூலிகைத் தோட்டம், சில கோழிகள் மற்றும் இரண்டு ஆடுகளையும் வளர்க்கக்கூடிய கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் செல்வின். உணவுக் கழிவுகளைக் கொண்டே தமது மிருகங்களுக்கும், பயிர்களுக்கும் தீனளிப்பதால் பெறக்கூடிய நன்மை பற்றி, தமது சொந்த உற்பத்தியான பால், முட்டை மற்றும் மரக்கறி வகைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் சிறிய பண்ணைகளின் சொந்தக்காரர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (According to a 2021 report by the FAO (UN’s Food and Agriculture Organisation)) 2021 ஆம் ஆண்டு அறிக்கைப்படி, கொழும்பு மாநகரசபையின் 706 தொன் குப்பைக் கழிவில் 50% (353 தொன்) உணவுக் கழிவாகும் எனக் கூறப்படுகிறது. குப்பைக் கிடங்குகளில் கிடந்து அழுகி துர் நாற்றத்தைப் பிறப்பிப்பதைவிட இதை மீள்சுழற்சிக்குள்ளாக்கி பெருமளவு பயனைப் பெறமுடியும்.தொழில்துறைக்கான சந்தர்ப்பம்

இவ் விடயத்தில் தொழில்துறையொன்றை உருவாக்கக்கூடிய யோசனை ஒன்றைச் சொல்லும்படி நான் செல்வினைக் கேட்டேன். அதற்கு அவர், விலங்குணவு தயாரிக்கும் தொழிலொன்றை ஆரம்பிக்கலாம் எனக்கூறினார். சுழற்சி முறைப் பயிர்களான பயிறு வகைகள், சோளம், CO2/CO3 மற்றும் ‘சுப்பர் நேப்பியர் புல்’ ((Super Napier Grass) ஆகியன சில வாரங்களுக்கொருமுறை பயிரிடப்படும். இரண்டு ஏக்கர் நிலத்தில், வருடத்தில் பல தடவைகள், வித்தியாசமான காலக்கிரமங்களில், இம் மாற்றுப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டால் ஆடு, மாடுகளுக்கு, வருடம் முழுவதுக்கும் தேவையான ஊட்டச்சத்துள்ள போதியளவு உணவைத் தயாரிக்க முடியும். இவ் விலங்குகளிலிருந்து பெறப்படும் சாணம் திரும்பவும் அதே நிலங்களில் விளையும் புல்லிற்குப் பசளையாகி விடுகிறது. புற்களுக்கு அதிகம் நீர் தேவைப்படுவதில்லை எனவே சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் (drip irrigation) வடக்கின் பல் மாதக் கொடுமையான வெயிலையும் சமாளித்து, இப்புற்களைச் செழிப்பாக வளர்த்துக்கொள்ள முடியும். இவ் விலங்குணவுக்கு நிறையத் தேவை இருக்கிறது எனவே இத் தொழில இலாபகரமானதாகவும், நீண்டகாலத்துக்கு பலன் தரக்கூடியதாகவும் இருக்கும்.

போரும் சமாதானமும்

சமாதான காலத்தில் வாழ்பவர்களைப் போலல்லாது போர்க்கால நுகர்வோர் வித்தியாசமானவர்கள். போர்ப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் உணவுத் தயாரிப்பிலும், பாவனையிலும் அசாதாரண செயற்திறன்களைக் கொண்டிருந்தார்கள். சமையல் செய்யும்போதோ அல்லது உண்ணும் போதோ மிகக்குறைந்த உணவையே அவர்கள் கழிவாக்கினார்கள். இதனால் மிதமான உணவுற்பத்திக்கான அவசியமும் இருக்கவில்லை. தேசிய ரீதியில், திட்டமிடப்படாத உணவுத் தயாரிப்பும், கவனமற்ற உணவுக் கழிவும் முக்கியமானவை. பண்ணைகளிலிருந்து கனரக வண்டிகளில் நசுக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, நீணட தூர பயணத்தின் பின்னர், மொத்த வியாபாரிகளையும், அவர்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளையும், இறுதியில் நுகர்வோரையும் அடையும்போது தயாரிப்புகளின் கணிசமான பகுதி பழுதடைந்து குப்பைக் கிடங்குகளில் வீசப்பட்டுவிடுகிறது. கிட்டங்கிகளில் சேமிக்கப்படுவது முதல், கடைகளின் காட்சித் தட்டுகள், நுகர்வோரின் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் அடுக்கப்படுவது வரை இவ்வுணவுப் பொருட்களின் ஆயுள் குறைக்கப்பட்டு விடுகிறது. இதனால் மக்களின் பாவனையை விட பலமடங்கு உணவுற்பத்தியை நாடு மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.

போர்க்காலத் தீர்வுகள் எப்போதுமே அமைதிக் காலத்திற்கான விடைகளாக இருக்கமுடியுமென எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதிக செயற்திறன் கொண்ட, அதிக பலன் தரும், சிரமமான போர்க்கால நடைமுறைகள் அமைதிக் காலத்தின் இலகு வாழ்வுக்கான சில வழிகாட்டல்களைத் தந்துதவ முடியும்.

செல்வினோடு தொடர்புகொள்ள விரும்புபவர்கள் பின் வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியும்: selvinansteen@gmail.com

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன்)

[This article originally appeared on the Nov 22, 2021 issue of Lanka Business Online, and the translated version is published here with the author’s consent – Marumoli.com]