வளரும் வடக்கு: பெண் தொழில் முனைவோருக்கு ஐ.நா.உதவி

முல்லைத்தீவு, இலங்கை: ஐ.நா. பெண்கள் மற்றும் கிறிசாலிஸ் ஆகிய அமைப்புகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுமார் 13.4 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள், வளங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

இம் மாவட்டங்களில் மீள் குடியமரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பாரிய திட்டமொன்றின் முதல் அங்கமாக இம் முயற்சி முந்நெடுக்கப்படுகிறது.

சிறிய வியாபாரங்களுக்குச் சொந்தக்காரர்கள், குறிப்பாக தொழில் முனைப்புகளைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அவைகளுக்குப் போதுமான வருவாயை ஈட்ட வல்ல நீண்டகால சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டத்தின் முதல் அங்கமாக 100 தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வியாபார அபிவிருத்தி, கணக்காளல் கல்வி, தொழில்நுட்பப் பாவனை ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஐ.நா. பெண்களும் கிறிசாலிஸ் என்ற அமைப்பும் ஒழுங்குசெய்த இந்த பயிற்சி நிகழ்வில் பங்குகொண்ட எஸ்.ராதிகா என்பவர் இதுபற்றிக் குறிப்பிடும்போது “இப் பயிற்சிக்குப் பின்னர் நான் எநது தொழிலில் மிகவும் நம்பிக்கையோடு ஈடுபடக்கூடியதாகவுள்ளது. எனக்குத் தரப்பட்ட நான்கு வகையான தொழில் திறமை அபிவிருத்திப் பயிற்சிகளினால் இப்போது எனது தொழில் திறமை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு பண்டத்தின் விலையைத் தீர்மானிப்பதிலோ அல்லது வளங்களைச் சிக்கனமாகப் பாவிப்பதிலோ எனக்குப் பயிற்சிகள் இருக்கவில்லை. பணியாளர்களை நிர்வகிக்கும் எனது திறன் மிகவும் மோசமாக இருந்தது. இப் பயிற்சிகளின் பின்னர் எனது திறமைகள் பல முன்னேற்றம் கண்டுள்ளன. கிடைக்கும் வளங்களைத் திறனோடு பாவிக்கவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் நான் கற்றுக்கொண்டுவிட்டேன்”

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தொழில் வாய்ப்பின்மை ஆகியன அதிகரித்துவரும் சூழலில் இப்படியான ஆதரவு வழங்கப்படுவது வரவேற்கத் தக்கது.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கே. விமலநாதனின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

sharethis sharing button