News & AnalysisSri Lankaஜெகன் அருளையா

வளரும் வடக்கு | நான்காம் வருடத்தைப் பூர்த்திசெய்யும் வட தொழில்நுட்ப நிறுவனம் (Northern Technical Institute)

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

இலங்கை பூராவும் உள்ள இளைய தலைமுறையினர் உகந்த நல்ல வேலைகளைப் பெற்றுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி, 15 முதல் 19 வயதுவரையுள்ள இளையவர்களில் 4 பேர்களில் ஒருவர் வேலை பெறமுடியாது அவஸ்தைப்படுகின்றனர். 20 முதல் 29 வயதுள்ளவர்களில் 7பேர்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது அரிது. ஒருவர் வேலை தேடி, அது கிடைக்காதபோது அவர் வேலையற்றவர் (unemployed) என்ற அந்தஸ்தைப் பெறுகிறார் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். வேலை தேடுவதில் அக்கறையில்லாது உறவினர்களின் பணத்தில் ஒய்யாரமாகச் சீவிக்கின்றவர்களை நாம் இப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவில்லை.

கோபிநாத் அமரசிங்கம்

நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடையாமல் இருப்பதனால் இளைய தலைமுறை தமக்குகந்த வேலைகளைப் பெறமுடியாதுள்ளனர் என்பது உண்மை. மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்களோடு ஒப்பிடும்போது 30 வயதுக்குட்பட்டவர்களிடையே வேலையற்றோர் வீதம் அதிகமாகவிருப்பது தெரிகிறது. இதற்குக் காரணம் இந்த இளம் தலைமுறையினர் தமக்குத் திருப்தி தரும் வேலைகள் கிடைக்காதபோது மனம் தளர்ந்து விரக்தியில் வேலை தேடுவதைப் பின்போட்டுவிடுகிறார்கள். வயது முதிரும்போது இவர்கள் தமக்கு கிடைக்கும் தரம் குறைந்த வேலைகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து தமக்குப் பிடித்தமான வேலைகளைத் தேடுவதை நிறுத்திவிடுகிறார்கள் எனவும் கருத இடமுண்டு.

நமது இளையோரின் இந்த இக்கட்டான நிலையைப் போக்க இரு தமிழர்கள் தீர்மானம் எடுத்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர், சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய ‘கோபி’ என அழைக்கப்படும் கோபிநாத் அமரசிங்கம்; மற்றவர் இலங்கையில் வை.எம்.சீ.ஏ. அமைப்பின் தேசிய கவுன்சிலின் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற விஜே குலசிங்கம். இளையவர்கள் தமக்குப் பிடித்தமான வேலைகளைப் பெறுவதற்குச் சிரமமாக இருப்பதற்கு காரணம் எமது நாட்டின் கல்வி முறைமையே என இவ்விரிவரும் தீர்மானித்தார்கள். பாடசாலை, பல்கலைக் கழகம் என்ற இரண்டு நிறுவனங்களால் மாணவர்களை அவர்கள் மநதுக்குகந்த வேலைகளைப் பெறுவதற்காகத் தயாரிக்க முடியவில்லை. மிகத் திறமையான பட்டங்களைப் பெற்றுக்கொண்ட பட்டதாரிகள் கூட வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது நேர்முகப் பரீட்சைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். கல்வியின் தராதரத்துக்கும் வேலைகளைப் பெறுவதற்கான தராதரத்துக்குமிடையில் பாரிய இடைவெளிகளோடு இவர்கள் வெளியேறுகிறார்கள் என்பது இந்த இரட்டையரின் கணிப்பு.

கோபிநாத்தின் தந்தையார் பரி.யோவான் கல்லூரியில் பல வருடங்கள் உதவி அதிபராகக் கடமையாற்றியவர். கோபி, இலங்கையில் B.Com.படிப்பையும், அதைத் தொடர்ந்து London CIMA படிப்பையும் முடித்துக்கொண்டு 1987 இல் அமெரிக்கா சென்று அங்கு MBA படிப்பை முடித்தவர். இதைத் தொடர்ந்து அவர் வங்கித் துறையில் நீண்டகாலம் பணியாற்றியதுடன் தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி கண்டவர்.

YMCA தேசிய கவுன்சில் பணிப்பாளராகவிருந்து ஓய்வு பெற்றதும் விஜே ஏஞ்செல் சர்வதேச பாடசாலை மற்றும் யாழ் பரி.யோவான் கல்லூரி ஆகியவற்றில் நிர்வாகப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தார்.

கோபி, விஜே இருவரது சிந்தனையில் உதித்தது தான் வட தொழில்நுட்ப நிறுவனம் (Northern Technical Institute (NTI)). வடக்கு இளைஞர்களை காத்திரமான மனதுக்குகந்த வேலைகளைப் பெறுவதற்குத் தகுந்தவகையில் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டு இருவரும் இந் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

விஜே தனது தொடர்புகளைப் பாவித்து, யாழ். கச்சேரிக்கு அருகில் இருக்கும் வை.எம்.சீ.ஏ. கட்டிடத்தில் மாதம் 10,000 ரூபா வாடகைக்கு நிறுவனத்துக்குத் தேவையான இடத்தைப் பெற்றுக் கொண்டார். தேசிய தொண்டு நிறுவனங்கள், நண்பர்கள், அமெரிக்காவில் கோபி முன்னர் தலைவராகப் பணிபுரிந்த International Sustainable Livelihood Foundation (ISLF) அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் தொழில்நுட்ப நிறுவனத்துக்குத் தேவையான கணனிகள், உபகரணங்கள் மற்றும் நிதி போன்றவற்றைப் பெற்றுக்கொண்டனர். முகநூல் மற்றும் வாய்வழிச் செய்திகள் மூலமும், துண்டுப்பிரசுரங்கள் மூலமும் நிறுவனம் தன் இருப்பையும் நோக்கத்தையும் பறைசாற்றிக் கொண்டது.

2016 இல் கதவுகளைத் திறந்த இந்த நிறுவனம் இம் மாதம் தனது நான்கு வருடங்களை நிறைவு செய்கிறது. இதுவரை 160 பட்டதாரிகளை உருவாக்கித் தந்திருக்கிறது. கட்டுமானப் பணியாளர், மரவேலைப் பணியாளர், உருக்கு / ஒட்டுத் தொழில் பணியாளர், விவசாயிகள் போன்ற பல தொழில்ப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களிலுமிருந்து வந்த மாணவர்கள், பாடசாலையில் கல்வி கற்க முடியாமல் வெளியேறியவர்கள், பட்டதாரிகள் எனப் பலதரப்பட்டவர்களையும் மாணவர்களாக உள்வாங்கியிருந்தது வட தொழில்நுட்ப நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் க.பொ.த. உயர்தரம் முடித்தவர்களும், பட்டதாரிகளுமாவர். மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இளம் பெண்கள். சிலர் ஏற்கெனவே தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பகுதிநேரமாகக் கடமையாற்றுபவர்கள். சிலர் தமது சுய தொழில்நுட்ப தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். வட தொழில்நுட்ப நிறுவனம் இவர்களுக்கு தொழிற்கல்வியை மாத்திரமல்ல நவீன வியாபார அபிவிருத்தி உத்திகளையும் கற்பிக்கிறது. இங்கு பட்டம் பெற்ற சிலர் சுய தொழில்களை ஆரம்பித்து ஏனையவர்களுக்கும் வேலைகளை வழங்கிவருகிறார்கள். ஒருவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்துள்ளார். சிலர் வெதுப்பகத் தொழில்களையும், ஆபரண உற்பத்தி, ஆடைகள் தயாரித்தல் போன்ற தொழில்களையும் ஸ்தாபித்திருக்கிறார்கள்.

வை.எம் சீ.ஏ. மண்டபம் இன் நிறுவனத்துக்கு நல்ல இருப்பிடமாக இருப்பதோடு, மாணவர்கள் பொதுப் போக்குவரத்தின் மூலம் பயணம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. இருப்பினும் கிராமப் புறங்களிலிருந்து நெடுநேரம் பயணம் செய்யவேண்டியிருப்பதால், தற்போது இன் நிறுவனம் யாழ் குடாநாடு முழுவதும் கிளைகளைத் திறந்துள்ளது. இதன் பொருட்டு பல சமூக அமைப்புக்களும் அவ்வமைப்புகளின் வரவேற்பு மண்டபங்களில் தற்காலிகமாக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளன. இதன் பிரகாரம் வகுப்புக்கள் விரைவில் 9 இடங்களில் நடைபெறவுள்ளது. அவையாவன:

  1. தலைமையகம் (வை.எம்.சீ.ஏ. யாழ்ப்பாணம்)
  2. கலைவாணி சனசமூக நிலையம் – தொல்புரம், சுழிபுரம்
  3. ஆரவெளி சனசமூக நிலையம் – நுணாவில், சாவகச்சேரி
  4. சனசமூக நிலையம் – பாண்டவேட்டை, சுழிபுரம்
  5. வை.எம்.சீ.ஏ. – நவாலி
  6. சனசமூக நிலையம் – கைதடி
  7. சனசமூக நிலையம் – பெரியபளை
  8. சனசமூக நிலையம் – உரும்பிராய்
  9. Refuge Tabernacle தேவாலயம் – மூளாய்

யாழ் தலைமையகத்தில் கல்வி கற்பவர்களில் பெரும்பாலோர் உயர்தரம் அல்லது சாதாரண தரக் கல்வியை முடித்துக்கொண்டவர்களாக இருப்பினும், கிராமப்புறங்களிலிருந்து வருபவர்களில் பலர் சாதாரண தரக் கல்வியில் சித்திபெறாதவர்களாகவே உள்ளனர். இதனால் இம் மாணவ்ர்களை சாதாரண தரக் கல்வியைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மீண்டும் பரீட்சை எடுப்பதற்கு உதவிசெய்வதையும் NTI நிறுவனம் தன் பணிகளிலொன்றாக எடுத்துள்ளது.

இரு மாணவர்கள்

அத்தோடு, தேசிய தொழிற்கல்வித் தராதரத்துக்காக (National Vocational Qualification (NVQ)) தனது மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும் இந் நிறுவனம் இறங்கியுள்ளது. இக் கல்வியைப் பெற்றுத் தொழில் முனைவர்களாக வர விரும்புபவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் தொடர்புகளையும் இந் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கோவிட் தொற்று ஊர்முடக்கத்தின்போது, இக் கிராமங்களிலிருக்கும் மக்களுக்கு நல்மனம் கொண்டவர்களின் உதவிகளோடு உணவுப் பொதிகளை இன் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்காகப் பலரும் உதவிகளை வழங்கியிருந்தாலும் ஒரு தாயார் மிகப் பெரிய நிதியுதவியைத் தந்துதவியதைக் கூறிக்கொள்ள வேண்டும். அவரது ஒரே மகனான கீரன், அவரது 11 வது வயதில் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து இத் தாயார் தன் மகனின் நினைவாக இப் பண உதவியைச் செய்திருந்தார்.

வட தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் சிறப்பான எதிர்காலமொன்றிற்கான பாதையை வகுத்து வருகிறார்கள். இதில் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் பலர் யாழ், மொறட்டுவ மற்றும் இதர பல்கலைக்கழகங்களில் பட்டதாரிக் கல்வியைத் தொடரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். சிலர் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் தாதிப் பயிற்சிகளைப் பெறுவதற்கான கல்வியை மேற்கொள்கிறார்கள். பலர் தொழிற்கல்வி பயிற்சி நிர்வாகத்தாலும், தொழில்நுட்பக் கல்லூரிகளாலும் அநுமதி வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

மார்ச் 2020 முதல், கோவிட் ஊர்முடக்கக் காலத்தில் நிறுவனத்திந் 50 மணவர்களும் அவர்களது குடும்பங்களுமிணைந்து வீட்டுத் தோட்டத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார்கள். இதைவிட, இதர தொழில் முயற்சித் திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சாம்பிராணிக் குச்சி, மெழுகுதிரி, வாயு அடுப்பு, உணவு தயாரிப்பு உபகரணம் மற்றும் பல வீட்டுத் தேவைகள், உலருணவுத் தயாரிப்புகளை இலகுவாக்கும் உபரணங்கள் தயாரிப்பு முயற்சிகளில் மணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்களுக்கு வழிகாட்டல் செய்வதற்கென கற்றோரை ஒழுங்கு செய்யும் முயற்சிகளில் சமீபத்தில் இந் நிறுவனம் ஈடுபட்டு வருகிந்றது. இதன் பிரகாரம் நிறுவனத்தின் வெவ்வேறு நிலையங்களிலுள்ள 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அமெரிக்காவிலுள்ள 15 நிபுணர்கள் வழிகாட்டிகளாகச் செயற்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் ரோய் எஸ்.கங்கராஜ் பணியாற்றுகிறார்.

அமெரிக்காவிலுள்ள ISLF USA, கொழும்பிலுள்ள ComeShare Foundation மற்றும் நிதி, வள உதவிகளை வழங்கிவரும் பல தனியான ஆதரவாளர்கள் அனைவருக்கும் NTI நிறுவனம் தனது உளமார்ந்த நந்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. வட தொழில்நுட்ப நிறுவனத்தைப்பற்றி மேலதிக விபரங்களை அறிய விரும்பின் கோபிநாத் அமரசிங்கம் அவர்களை 0094 (0) 76 602 2126 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது nygobi@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பை செய்ய விரும்புபவர்களுக்கான தகவல்:
Company Reg No: PVT 121637 Face book: ntijaffna Web; ntijaffna.com
Email: svijayakulasingam@yahoo.com ntijaffna@gmail.com
Bank HNB. Jaffna branch, AC Name; Northern Technical Institute, AC Number; 219020001106
Swift code: HBLILKLX

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து வடக்கின் சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலைமைகள் பற்றி எழுதி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன்)