வருக மனித இனம்!

வருக மனித இனம்!

தலையங்கம்

நம்பிக்கையே வாழ்க்கை என்பதை ஒரு உலக சுலோகமாக்கிப் பிரார்த்தனை செய்யும்படி பணித்திருக்கும் வைரஸ் அம்மாளின் தாளடி பணிந்து உங்களெல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தலைப்பு ஒரு விதமாக இருக்கிறது என யோசிக்கிறீர்கள்.

உண்மை தான். இதுவரை மனித இனம் தான் புத்தாண்டை வரவேற்றுக்கொண்டு வந்தது. இந்தத் தடவை புத்தாண்டு மனித இனத்தை வரவேற்கிறது என்பதே அதன் பொருள். அதற்குக் காரணமும் இருக்கிறது.

Taken for granted அல்லது ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை போல் நடந்துகொண்டமையால், எமது இருப்பை நாம் துர்ப்பிரயோகம் செய்தமைக்கான பரிசை இந்த உலகம் கடந்த வருடம் தந்திருக்கிறது. புதிய உலகு அதை அனுமதிக்கப்போவதில்லை. அது சொல்லும் இடத்தில் நம்மை முடக்கி வைக்க அது திட்டமிட்டு வெற்றியும் பெற்று வருகிறது.

எவ்வளவுதான் தொழில்நுட்பத்தால் நாம் உலகையும், காலத்தையும் வென்றுவிட்டோமென்று இறுமாப்புக் கொண்டாலும் நம்மை எமது இடத்தில் இருத்திவிட்டிருக்கிறது ஒரு நுண் கிருமி.

இதுவரை மனித சமுதாயம் தனக்கிடையேயுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து சமத்துவமான, சமதர்மத்தைப் போதிக்கும் ஒரு உலகை உருவாக்கப் போராடி வந்திருக்கிறது. இது பொருட்டுத் தம்மை அர்ப்பணித்தவர்களும், பிறரால் பலிகொடுக்கப்பட்டவர்களும் எனப் பலகோடி மக்கள் அந்த சமதர்ம உலகைக் காணாமலேயே காலமாகி விட்டார்கள். மனித இனத்தின் மகத்தான தோல்விகளில் அதுவும் ஒன்று.

இனி அந்தப் போர் சகல உயிர்களின் சமத்துவத்துக்காகவே எனக்கூறிப் போராட்டத்தைத் தன் கையில் எடுத்திருக்கிறது இந்த நுண் கிருமி.

மனிதக் கிருமிகளை வீடுகளில் முடக்கிப் போட்டு பிற உயிர்கள் தமது உலகத்தில் வாழ்வாங்கு வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறது. ஒளிந்து போயிருந்த பறவையினங்கள் துணிச்சலோடு முற்றத்திலமர்ந்து கீதமிசைக்கின்றன. வன விலங்குகள் தெருக்களில் வந்து நீண்ட தூக்கம் கொள்கின்றன. தாவரங்கள் செழிப்பாகவும், உற்சாகமாகவும் ஒளிக் கடவுளை நோக்கி ஓங்கி வளர்கின்றன. இந்த சமத்துவத்தை ஏற்படுத்தியது நமது கண்களால் பார்க்க முடியாத ஒரு நுண் கிருமி!

இப்போது நாம் அடியெடுத்து வைக்கும் புத்தாண்டு எம்முடையதல்ல, எல்லா உயிர்களுக்குமானது. இந்த நிபந்தனைக்கு இசைபட்டால் மட்டுமே எமது வாழ்வு வளம் பெறும்.

இந்த புதிய கிருமிகளின் உலகில் வாழ்வதற்கு நாம் தான் இசைவடைந்தாக வேண்டும். இதற்கு இணங்கினால் மட்டுமே வாருங்கள் என்கிறது புதிய உலகம். எனவே தான் அந்தத் தலைப்பு.

வருக மனித இனம்!

மனமே உடல் என வாழ்ந்து காட்டிய சாந்தி அம்மா மறைவு!