Spread the love

கொறோனாவைரஸ் அமளி துமளியில் அகப்படாது கழுதை தனது லீலா விநோதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. குதிரையோடு அதன் சமாச்சாரம் வெளிவந்தபோது இயற்கை அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, குழந்தைக்குக் கோவேறு கழுதை எனப் பெயரிட்டு மகிழ்ந்திருந்தது. இப்போ மீண்டும் புதிய சமாச்சாரம்.

கென்யாவிலுள்ள சையிலு தேசியப் பூங்காவில் இப் புதிய சமாச்சாரம் நிகழ்ந்தேறியிருக்கிறது. தந்தை கழுதை இனம், தாய் வரிக்குதிரையினம். காந்தர்வ முறைப்படி நடந்த திருமணத்தில் ஒரு கலப்புக் குழந்தை பிறந்திருக்கிறது. ஆங்கிலத்தில் zonkey எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. தமிழில் வரிக்கழுதை என அழைக்கலாமென ‘மறுமொழி’ யின் பிறப்புப் பதிவுத் திணைக்களம் முடிவு செய்திருக்கிறது.

“பிள்ளை ஆரைப் போல” என்ற கிசு கிசுக்களுக்கு இடம் வைக்காமல் பூங்கா நிர்வாகம் படத்தையே வெளியிட்டு விட்டது. ‘உயரம் தகப்பனைப் போல, நிறமும் அப்பிடித்தான். தாயின்ர வரியள் கொஞ்சம் இருக்குது’ என்று யாரும் சொன்னால் நம்புங்கள்.

ஷெல்ட்றிக் வன விலங்கு பாதுகாப்பு அமைப்பு (Sheldrick Wildlife Trust) இதன் பராமரிப்பு உரிமத்தைப் பெற்றிருக்கிறது. ‘வன விலங்குகள் என்று வரும்போது எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும்’ என அவ்வமைப்பு நாணத்துடன் கூறுகிறது.

அம்மா வரிக்குதிரையையும், குழந்தையையும், தற்போது கென்யா சாவோ கிழக்கு தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அது பெரும்பாலும் கழுதைகளும் இதர கால்நடைகளும் உள்ள ‘ஊர்’. தாயையும் குழந்தையையும் அவை ஏற்றுக்கொண்டு விட்டதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வன விலங்குகளிடையே கைவிடப்பட்ட குழந்தை குட்டிகளைப் பாதுகாத்து, பராமரித்து மீண்டும் வனங்களில் விடுகிறது இந்த அமைப்பு. அம்மா கருத்தரித்திருப்பது தெரிந்தவுடன் அதை சயூலு தேசியப் பூங்காவுக்கு கொண்டுவந்து பராமரித்தார்கள். வரிக்குதிரையின் பிரசவம் 1 வருடம் வரை எடுக்கிறது.

இது எப்படி நடந்திருக்கிறது என்பதை அமைப்பு கண்டுபிடித்துவிட்டது. முதல் வருடம் ‘அம்மா வரிக்குதிரை சாவோ பூங்காவில் சில கழுதைகள் உள்ளடங்கிய கூட்டத்தோடு மேயப் போவது வழக்கம். அக்கூட்டத்தில் உள்ள ஒரு விரகமிக்க கழுதையிடம் இடக்கு மடக்காக மாட்டிக்கொண்டது’ என்று மெல்லுகிறது அமைப்பு.

வரிக்கழுதை திடகாத்திரமான உடலைக் கொண்ட அழகான பிராணியாகவிருந்தாலும், கோவேறு கழுதையைப் போல (கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்தது) அதற்கும் கடவுள் ஒரு சாபம் விதித்துவிட்டார். வரிக்கழுதை (mule) ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் ஆனால் அவற்றால் இனவிருத்தி செய்ய முடியாது. அது கடவுளின் தண்டனை.

தாயின் ‘குடும்பத்தவர்’ ஏற்றுக்கொள்ளும்வரை அவையிரண்டுக்கும் இங்குதான் குடித்தனம் என்கிறது அமைப்பு. (மூலம்: சீ.என்.என்.)

Print Friendly, PDF & Email
Related:  சீன-இந்திய மோதல்: ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளைச் சீன இராணுவம் பாவித்திருக்கிறதா?