வரலாற்றுக்கு குற்ற உணர்வென்று ஏதுமில்லை! -

வரலாற்றுக்கு குற்ற உணர்வென்று ஏதுமில்லை!

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
[மீள் பிரசுரம் : நன்றி: மனுஷ்யபுத்திரன்]

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ
அவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள்
அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால்
நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள்
அது ஒரு எளிய சமாதானம்
அதுகூட கிட்டவில்லை

வரலாற்றிற்கு
குற்ற உணர்வென்று ஏதுமில்லை

படுகொலைக் குருதியில் நீராடியவர்கள்
வெற்றிப் பதாகைகளுடன்
அரியாசனம் நோக்கிச் செல்கிறார்கள்
அவர்கள் கொய்த தலைகளில்
இன்னும் ரத்தப் பெருக்கு நிற்கவில்லை
அதற்குள் வந்துவிட்டன
அவர்கள் தலைகளுக்கு கிரீடங்கள்

வரலாற்றிற்கு
நாண உணர்வென்று ஏதுமில்லை

மக்கள் தீர்ப்பென்பது
மக்களின் கூட்டுப்புதைகுழிகளிலிருந்து  துவங்குகிறது

மக்களின் தீர்ப்பென்பது
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர் கைகளில் ஏந்திய புகைப்படங்களை
எள்ளி நகையாடுவதிலிருந்து  துவங்குகிறது

வரலாற்றிற்கு
நீதி உணர்வென்று ஏதுமில்லை

இவர்கள்மேல்தான்
சர்வதேச விசாரணைகள் நடக்குமென்று
நம்பவைக்கப்பட்டீர்கள்

இவர்கள்தான் போர்க்குற்றவாளியாக்கப்படவேண்டும் என
உலக நாடுகளின் தலை நகரங்களில்
ஊர்வலம் போனீர்கள்

இப்போது எங்கும் சூழ்கிறது
இருளின் ஒரு கனத்த மெளனம்

வரலாற்றிற்கு
அறமென்று ஏதுமில்லை

குற்றங்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
பின்புறம் கைகள் கட்டப்பட்ட
பிணங்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
நிர்வாணமாக்கப்பட்ட உடல்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
அகதிகளின் முடிவற்ற கதைகளின் மேல் பிறக்கும் அதிகாரம்

இது வரலாறே அல்ல
வெள்ளை வேன்களின்
வெற்றி ஊர்வலம்

17.11.2019
மாலை 5.11
மனுஷ்ய புத்திரன்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)