வரலாறு படைக்கும் தமிழ்த் திரையுலகின் ‘டிஜிட்டல் நாயகன்’ தனுஷ்

பல்முகத் திறன்களைக் கொண்ட நடிகர் தனுஷ் தொடர்ந்தும் வரலாறு படைக்கும் நாயகனாக மிளிர்ந்துவருகிறார்.

“ஏனிந்த கொலை வெறி டி”, “ரெளடி பேபி” ஆகிய பாடல்கள் மூலம் இந்தியத் திரையுலகில் சிகரத்தைத் தொட்ட தனுஷ், றூசோ சகோதரர்கள் இயக்கும் “த கிரே மான்” (The Gray Man) எந்ற திரைப்படத்தின் மூலம் ஹொலிவூட் திரையுலகில் முழுமையான பாத்திரமொன்றில் நடித்த முதல் தமிழ்த் திரைப்பட நாயகன் என்ற பெருமையையும் பெறுகிறார்.

சிறந்த நடிகரென இரண்டு தடவைகள் இந்திய தேசிய விருதைப் பெற்ற அவர் டிஜிட்டல் பிரபஞ்சத்திலும் தன் பாய்ச்சலை நிறுத்தவில்லை. தனுஷை ருவிட்டர் மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, நேற்று (ஜூலை 18) முதல், 1 கோடியைத் (10 மில்லியன்கள்) தாண்டி விட்டது. தமிழ்த் திரை நாயகர்களில் இச் சாதனையைப் படைத்தவர் தனுஷ் மட்டுமே. உலகநாயகன் கமல், சூர்யா ஆகியோரின் ருவிட்டர் பின்னோடிகளின் எண்ணிக்கை தலா 68 இலட்சம் மட்டுமே. 59 இலட்ஷம் பின்னோடிகளுடன் அவர்களுக்கு அடுத்ததாக வரிசையில் நிற்பது தனுஷின் மாமனார் ‘சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். தளபதி விஜயை 32 இலட்ஷம் ரசிகர்கள் ருவிட்டரில் பின்தொடர்கிறார்கள்.

தனுஷின் இந்த சாதனையை உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இக் கொண்டாட்டம் இப்போது ருவிட்டரின் முதலாம் பேசுபொருளாக (trending) வந்திருக்கிறது.

தற்போது, பெயரிடப்படாத படமொன்றில் மாலவிகா மோஹனனுடன் ஐதரபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் தனுஷ். அதன் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ‘ராயன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். அத்தோடு ‘அற்றாங்கி ரே’ என்ற இந்திப்படம், சேகர் கம்முலா மற்றும் வெங்கி இயக்கும் இரு தெலுங்குப் படங்கள் எனப் பரந்த இந்திய திரைவானில் பிரகாசிக்கும் தமிழ் நடிகர் என்ற பெருமையும் அவரைச் சேர்கிறது.