Dr.Kanaga Sena, MDHealth

வயது போனவர்களுக்கு மட்டும் | நோய் தவிர்க்கும் மருத்துவம்


Dr. Kanaga Sena, MD

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA
Dr. Kanaga Sena MD
Dr. Kanaga Sena MD

நாம் வயதில் முதிர்ச்சியெய்தும்போது எங்கள் உடல்களில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. உதாரணமாக, நோய்த் தொற்றுக்களை எதிர்ப்பதில் உடலின் வலு குறைந்து போகிறது. இதன் விளைவாக நாம் பல தடுப்பு மருந்துகளை எடுக்கவேண்டிய அவசியம் நேரிடுகிறது. அதே வேளை, வயது முதிரும் போது நாம் உட்கொள்ளும் மருந்துகளுக்கு எமது உடல் எதிர்வினையாற்றும் (response) முறைகளும் மாற்றமடைகின்றன. இதற்கு காரணம், இம் மருந்துகளைச் சமிபாடடையச் செய்யும் உறுப்புகளான ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள், நம் இளமைக் காலத்தில் போல, செவ்வனே செயற்படுவதில்லை. எனவே, வயது முதிரும்போது நாம் உட்கொள்ளும் மருந்துகளின் அளவும் குறைக்கப்படுதல் முக்கியமாகிறது.

வயது முதிரும்போது நோய்கள் பீடிப்பது அதிகரிப்பது ஒரு சாதாரண நிகழ்வு.. உதாரணத்திற்கு, பல வகையான புற்றுநோய்களும், இருதய வியாதி போன்றவையும், இளையவர்களை விட முதியவர்களையே அதிகம் தாக்குகின்றன. 

அதற்காக, வயது முதிர்வதால் நீஙகள் நோயாளியாக வேண்டுமென்றோ அல்லது நலிந்து போக வேண்டுமென்றோ நியதி எதுவும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் உடலில் ஏதாவது மாற்றங்களை அவதானித்தால் அல்லது ஆரோக்கியத்தில் குறைபாடு கண்டால் உங்கள் மருத்துவரைப் பார்ப்பது தான். இதன் மூலம், நீங்கள் அவதானிக்கும் அம் மாற்றங்கள் ஏதாவது நோய்களின் அறிகுறிகளா என்பதை அறிந்து தேவையானால் அதற்கான சிகிச்சையையும் உடனேயே ஆரம்பிக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்முறையைக் கைக்கொள்ளுங்கள்

வாழ்முறை மாற்றம் (lifestyle change) என்பது ஒரு “சிகிச்சை முறை” யென்பதை மக்கள் உணர்வதில்லை. உண்மையில், வாழ்முறை மாற்றம் என்பது நீஙகள் உட்கொள்ளும் மருந்தைப் போல் அல்லது, அதையும் விடத் திறமை மிக்க ஒரு நடைமுறையெனவும் கூறலாம். தினமும் 3 மைல்கள் விரைவாக நடப்பதனாலோ அல்லது அடிக்கடி உடற் பயிற்சி செய்வதாலோ, போஷாக்கு மிக்க சீரான உணவை உண்பதாலோ (வயது முதிர்ச்சியுடன் சமிபாட்டுக் குறைபாடும் கூடவே வருகிறது, எனவே உணவின் அளவைக் குறைப்பது அவசியம்), ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பதாலோ, கட்டுப்பாடான மது அருந்துதல் அல்லது மதுவை முற்றாகத் தவிர்ப்பதாலோ, புகைத்தலைத் தவிர்ப்பதாலோ பலவகையான நோய்கள் உங்களைப் பீடிப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். முறையான தடுப்பு மருந்துகளைத் தவறாது எடுத்துக்கொள்ளுங்கள்

பருவ மாற்றங்கள், அவ்வப்போது நடைமுறையிலிருக்கும் தொற்றுக்கள் (சுரம், நிமோனியா போன்றன), அரசின் ஆலோசனைகள் எனப் பல காரணங்களுக்காகப் பலவிதமான தடுப்பு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவரானால் நீங்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்:

  • வருடத்துக்கொரு முறை சுரத்துக்கான (flu) தடுப்பு மருந்து – முடியுமானால், உயர் அளவு (high dose) மருந்தைத் தரும்படி கேளுங்கள். வயது முதிர்ந்தவர்களில் உயர் அளவு மருந்து, சாதாரண அளவை விடச் சிறப்பாகச் செயற்படுகிறது. சாதாரண அளவும் பரவாயில்லை.
  • நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து. சிலருக்கு இது இரட்டிப்பாகத் தேவைப்படலாம்.
  • ‘சிங்கிள்ஸ்’ தடுப்பு மருந்த  (shingles vaccine) – ஒரு தடவை மட்டும்
  • ஏர்ப்புத் தடுப்பு ஊக்கி மருந்து (tetanus vaccine booster) – 10 வருடங்களுக்கு ஒரு முறை. (ஊக்கி தடுப்பு மருந்து என்பது நீங்கள் முன்னர் எடுத்த தடுப்பு மருந்துகளை உங்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு மீண்டும் ‘ஞாபகப்படுத்துவதற்காக’ கொடுக்கப்படுது. சில நிபுணர்கள் இந்த ‘ஊக்கி மருந்துகளை அட்டிக்கடி பாவிக்க விரும்புவதில்லை) 

கிரமமான உடற் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

உடற் பரிசோதனை (screening) எனபது ‘வருமுன் காக்கும்’ ஒரு நடைமுறை. குடும்பத்தில் வேறு சிலருக்கு நோய்கள் (பரம்பரை) இருப்பவர்கள்  காலக் கிரமமாகச் சில உடற் பரிசோதனைகளைச் செய்யும்படி குடும்ப மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  இதன் மூலம் புற்றுநோய் போன்ற பல நோய்களை அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளலாம்.

  • 65 வயதுதுக்கு மேற்பட்டவர்கள், தத்தமக்கு எவ்வகையான புற்றுநோய் உடற் பரிசோதனைகள் செய்யப்படவேண்டுமென்பதை அவரவர் குடும்ப மருத்துவரிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டும். பெண்களில் கருப்பைப் பரிசோதனை (pap test), மார்பகப் பரிசோதனை (mammogram), இரு பாலாரிலும் பெருங்குடற் பரிசோதனை (colon cancer test) போன்ற பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சில மருத்துவர்கள் “உங்களுக்கு இப் பரிசோதனைகள் தேவையில்லை” எனச் சொன்னால், “உங்களுக்கு வயது போய்விட்டது, இப் பரிசோதனைகள் தேவையில்லை என அவர்கள் கருதுகிறார்கள்” என நீங்கள் நினைக்கலாம். மாறாக, பல புற்றுநோய்கள் உருவாகி வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். வயது முதிர்ந்த நிலையில் உங்களுக்கு அப் பரிசோதனைகளைச் செய்வதோ, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதோ சில வேளைகளில் தேவையற்ற உபாதைகளையும், உயிராபத்தையும் ஏற்படுத்தலாம். சில வளர்ச்சிகள் (புற்றுக்கள்) ஆபத்தை விளைவிப்பதில்லை அதனால் அவற்றுக்குச் சிகிச்சை செய்வது மேலும் ஆபத்தை உருவாக்கலாம். ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ‘ஒஸ்ரியோபொறோசிஸ்’ (osteoporosis) என்னும் எலும்பு பலவீனத்தை அறியும் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.


ஒழுங்காக மருத்துவரைக் பாருங்கள்

உங்கள் ஆரோக்கியம் பற்றிய வரலாறு உங்கள் மருத்துவரிடம் இருக்கிறது. உங்களுக்கு    எப்போது, எப்படியான பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமென்பதை அவர் அவதானித்து கிரமமாகச் செய்யப் பரிந்துரைப்பார். உதாரணமாக, உங்கள் இரத்த அழுத்தம், உடல் எடை, மன நிலை (mood) போன்றன இரத்த அழுத்தம் இருதய வியாதி, பக்க வாதம் ஆகியவற்றுக்க வழி வகுக்கிறது. எனவே அவற்றால் உங்கள் இரத்தக் குழாய்கள் பழுதடையாமல் பாதுகாக்க,  உடனடியாகச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். முதியவர்களில் உளச்சோர்வு உரிய காலத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. மருத்துவர்கள் உங்கள் இரத்தத்திலுள்ள ‘கொலெஸ்ரெறோல்’ அளவையும் கிரமமாகப் பரிசோதித்துக் கொள்வார்கள். இரத்தத்தில்  கொலெஸ்ரெறோல் அளவு அதிகமாக இருப்பதும் மாரடைப்பு, பக்க வாதம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், ‘ஸ்ரற்றின்’ (statin) மருந்துகளால் இலகுவாகச் சிகிச்சை செய்து கொள்ளலாம். அத்தோடு நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளையும் உங்கள் மருத்துவர் கிரமாக அவதானித்து அவற்றில் மாற்றங்கள் தேவைப்பட்டாலோ அல்லது நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அதை அவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். சில மருந்துகள் வயது முதிரும்போது தேவையற்ற பக்க விளைவுகளுக்கும் காரணமாகின்றன.

நோய்த் தவிர்ப்புக்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள்

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளைத் தடுப்பதற்கான சில உப மருந்துகளை (supplements) உட்கொள்ளுதல் பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக, வயது முதிர்ச்சியுடன் வரும் எலும்பு முறிவுகளைத் தவிர்க்க கல்சியம், வைட்டமின் D போன்றன மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

நிலைதடுமாறி வீழ்தலைத் தவிர்க்கக் கவனமெடுங்கள்

நிலை தடுமாறி வீழ்தல், வயது முதிர்ந்தவர்களுக்கு வரக்கூடிய பாரிய பிரச்சினை.  இதைத் தவிர்க்கப் பின்வரும் வழிகளைக் கையாளலாம்:

  • வீட்டிலிருக்கும் நடைபாதைகள் அனைத்தும் நன்றாக ஒளியூட்டப்பட்டதாகவும், தேவையற்ற பொருட்கள் இடைஞ்சலாக இல்லாமலும், மின்சார இணைப்புகள் குறுக்கே போகாமலும், கம்பள விரிப்புகள் வழுக்கி விடாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். 
  • உறுதியான, வசதியான பாதணிகளை அணிந்து கொள்ளுங்கள்.
  • எப்போதும் சுறு சுறுபாக இருக்க முயற்சி செய்யுங்கள். இலகுவான உடற்பயிற்சிகளைத் தினமும் செய்துவருவர்களும், எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பவர்களும் தடுமாறி வீழ்வது குறைவு. 
  • நீங்கள் எடுக்கும் மருந்துகளைப் பற்றி உங்கள் மருத்துவருடன் மீளாய்வு செய்யுங்கள். வயது மூப்படைய, தூக்க மாத்திரைகள் போன்ற சில மருந்துகள் நிலை தடுமாறச் செய்கின்றன. இரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளும் மருந்து கூடுதலாக எடுக்கப்பட்டால் அது இரத்த அழுத்தத்தை ஆபத்தான அளவுக்குக் குறைத்துவிடுகிறது. இதனால் பலர் மயக்கமுற்று வீழ்ந்துவிடுகின்றனர். 


வாகனமோட்டுபவர்கள், மருத்துவருடன் ஆலோசனை செய்யுங்கள்

இது ஒரு சிரமம்தரும் கேள்வி. ஆனால் முக்கியமான ஒன்று. வயது முதிர்ச்சியடையும்போது நமது செவிப் புலன்களும், விழிப் புலன்களும் குறைவடைகின்றன. அத்தோடு இப் புலன்கள் பார்ப்பதைக், கேட்பதை, மூளை அலசி முடிவுகளை எட்டுவது தாமதமாகிறது. இதனால் பல வாகன விபத்துக்கள் நிகழ்கின்றன.

மல, சலத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவிருந்தால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவியுங்கள்

உடல் தனது மலம், சலம் போன்ற  கழிவுகளைச சேகரித்து சுய கட்டுப்பாட்டுடன் வெளியேற்ற வழிசெய்துள்ளது. வயது முதிரும்போது இக் கட்டுப்பாடு சீராக நடைபெறுவதில்லை. இதை இசைவற்ற வெளியேற்றம் (incontinent) என்பார்கள். இது ஒரு அவமானம் தரும் நிகழ்வென நினைத்துப் பலர் தமது மருத்துவரிடம் சொல்வதில்லை. இது இயற்கையான செயற்பாடு. உங்களுக்கு இப்படியான அனுபவம் இருந்தாக் தயங்காமல் மருத்துவரிடம் பேசுங்கள். 

ஆண்களில், முதிர்சியுடன் வரும் இன்னுமொரு வியாதி விந்துச் சுரப்பியுடன் (prostate) தொடர்புடையது. இதன் வீக்கத்தாலோ அல்லது வளர்ச்சியாலோ சலம் கழிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி வருகிறது. இது மருந்துகளினாலோ அல்லது அறுவைச் சிகிச்சையினாலோ இலகுவாகத் தீர்க்கக்கூடிய ஒரு விடயம்.  மலச் சிக்கல் (constipation) இன்னுமொரு முக்கிய பிரச்சினை. தினமும் 7-8 கிண்ணங்கள் தண்ணீர் அருந்துதல், போதுமான மரக்கறிகள், பழங்கள், தேவையானால் ஒரு தேக்கரண்டி மெற்றாமூசில் (Metamucil) ஆகியன மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும்.

எப்போதுமே சரியான மருந்துப் பட்டியலை வைத்திருங்கள்

நீங்கள் தற்போது எடுக்கும் மருந்துகளின் பட்டியலை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். மருத்துவரையோ அல்லது தாதியையோ பார்க்கும்போது அவர்களுக்கு உடனடியாக நிலைமைகளை ஊகித்து முடிவுகளை எடுக்க உதவியாகவிருக்கும்

தவறாது சமூக ஊடாடல்களைப் பேணிக்கொள்ளுங்கள்

ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சமூக ஊடாடல் மிக அவசியம். புதிய நட்புகளைத் தேடிக்கொள்வதும், புதிய செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். கோவில்கள், நூலகங்கள்,  றோட்டறி, லயன்ஸ் போன்ற கழகங்கள், சங்கங்கள், தர்ம ஸ்தாபனங்களில் தொண்டுகள் புரிதல் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தனிமையில் வசிக்கும் வேறு முதியவர்களின் இல்லங்களுக்கு விஜயம் செய்து அவர்களுடன் அளவளாவுங்கள். புதிதாக எதியாவது கற்றுக்கொள்ளுங்கள். சீட்டாட்டமோ, குறுக்கெழுத்து போன்ற புதிர்களோ மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எப்போதும் தொலைக்காட்சியைப் பார்ப்பது எந்தவிதத்திலும் நன்மையைத் தரமாட்டாது.

உளச்சோர்வு முதியவர்களில் ஒரு மிக முக்கிய பிரச்சினை. இது பல்வேறு நோய்களின் வடிவங்களில் தோற்றமளிக்கக்கூடியது. இதனால் பலர் இதை உரிய நேரத்தில் உரிய முறையில் இனம்கண்டுகொள்வதில்லை. ஆனால் இது இலகுவாகச் சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு வியாதி.

முடிவாக, வயது முதிர்ச்சி இயற்கையானது. அதை இலகுவாக்கவும் வலிகளைத் தவிர்க்கவும் இயற்கையே வழிகளையும் தந்திருக்கிறது. முடிந்தவரை இய்ற்கையோடு இசைந்து வாழுங்கள். இயலாதபோது செயற்கையாக மருத்துவமும் இருக்கிறது. மருத்துவர்கள் சொல்வது போல், ‘உடல் சொல்வதைக் கேளுங்கள் (listen to your body)’.