Articlesசிவதாசன்

வன்னியின் செல்வன் – அத்தியாயம் இரண்டு

மங்களரின் கனவு

அசை சிவதாசன்

ஏற்கெனவே அமளி துமளிப் பட்டுக்கொண்டிருந்த ரோஹண நாட்டின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப் போகின்றதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரித்திருந்தார்.

நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்குப் பலித்து விடுமோ, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.

இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டு ஓடிவந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி. தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்து வந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய் விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவிய மங்களரே இப்படியாகுவார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லைத் தான்.

‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்றும் கல்லா காலியாகியபோதெல்லாம் புத்தம் புதிதாகப் பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூர தேச யாத்திரைகள் போகும் போதெல்லாம் நூற்றுக் கணக்கில் அமைச்சர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறைக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே!’ என்று தலையிலடித்து மகிந்தர் புலம்பினார்.

இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னருக்கு மிக நெருக்கமானவர். தமிழரும் சிங்களவரும் ஓருடலும் ஈருயிருமாக வாழவேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கெனவே சிவந்து போயிருந்த அவரது முகத்தைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:

“மன்னாதி மன்னா!, இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆட்சியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்களும் உங்கள் பக்கம். போதாதாற்குத் தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினமும் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள் தான் என்று மக்கள் வேறு பேசிக்கொள்கிறார்கள்” என்றார் அமைச்சர்.

“உணமையாகவா அமைச்சரே?”

“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர் தான். எல்லாள அரசனின் மறு பிறப்பென்றூ மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தைக் கைப்பற்றிய பெருமை உங்களைத்தானே சாரும்”

“ஆமாம் அமைச்சரே…கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே! அந்தக் குப்பிக் காரனை அழைத்து வரச்சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே?”

“ஜலமே போது. மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது!”

மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு மட்டுமே தெரிந்த விடயம். இருவரும் ஜலதரங்கத்தில் களிப்போடு கழித்தார்கள்.

“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம்? ஏன் அவர் இப்படி நடந்து கொள்கிறார்? உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சியை அமைத்திருக்கவே முடியாது. சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்பொழுது அந்தக் கபடர் சூரியாச்சியரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் கடத்தி வெண் புரவிகளிற் கொண்டுபோய் துவம்சம் செய்து விடுவார். ஆனால்….” மகிந்தர் மீசையை முறுக்கிக் கொண்டார்.

“அரசே எனக்கு ஒரு சந்தேகம். மங்களரின் சதியின் பின்னால் வலுவான அன்னிய தேசங்கள் இருக்கலமென்று நான் கருதுகிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கு மட்டுமே உண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எவ்வித வெளி நாடுகளின் உதவிகளும் இல்லாமலேயே பாரிய படைக்கலங்களைக் கரிகாலன் உருவாக்கும் வல்லமை படைத்தவன் என்று வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்”

“அதற்கும் மங்களருக்கும் என்ன சம்பந்தம்?”

“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணையவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்  என்றும் வெளிநாட்டுப் பிரதானிகள் கருதுகிறார்கள். இக் காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளில் கொண்டுபோய் விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது”

“அப்படியா? இதற்கு மாற்று வழியேதுமிருக்கிறதா?”அப்போது வாயிற் காவற்காரன் மகிந்தரிடம் வந்து பணிவாகக் கூறினான் ” அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”

“வரச் சொல்…  அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆட்சேபணயும் இல்லையே? நீங்கள் இருவரும் ஒரு வகையில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…?”

“இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் இடையில் எதுவித பிரச்சினையும் இல்லை. தாராளமாகப் பேசுங்கள்”

அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.

“வணக்கம் மன்னர் பெருமானே!”

“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணர், பிள்ளையார் ஆகியோரிடையே இருந்த பிணக்குகளைத் தீர்த்து வைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காது விட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”

“ஆம் மன்னரே. மண்டலக் காரர்களை இவ் விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்.”

“அது சரி..வந்த விடயம்?”

“தலைநகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் கோதபாயர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”

“அதற்கு என்ன இப்போது? பிற தேசங்கள் எங்களை என்னதான் கடிந்துகொண்டுதான் இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லைத் தானே. ‘கவலை தெரிவிக்கிறோம்’ என்று சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தித் தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கூறினார்கள். நானாவது மன்னிப்புக் கேடபதாவது. அதுவும் தமிழரிடம். முதலமைச்சர் இரத்தினநாயக்கரை என் சார்பில் மன்னிப்புக் கோரும்படி பணித்திருக்கிறேன்.”

“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது தவறு. அப்படித் தொடர்ந்தும் செய்வோமானால் நாமே நமது அன்புக்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்”

அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.

“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும் தானே? கொஞ்சம் முற்கோபக் காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றவனில்லை. தமிழரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து தப்பியதிலிருந்து அவனுக்கு தமிழர் மீது அடங்காத கோபம்.  அது சரி….அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே?”“கேள்விப்பட்டேன் மன்னா! அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கிறார். சோமவன்சருடைய படை பலமும் விக்கிரமசிங்கருடைய படை பலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவில் முறியடிக்க முடியும்”

“எப்படி…எப்படி? சொல்லுங்கள் அமைச்சரே! இதற்காகத் தானே சிங்கள அரசர்கள் எப்போதும் தமிழர்களை ஆலோசகர்களாக வைத்திருந்தார்கள்”

“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்புச் செய்ய வேண்டும். தேசியத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது கிராமங்கள், பட்டி தொட்டியெங்கும் பறையடித்துச் செய்தி அனுப்பவேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது எனவும் அதே வேளை கிழக்கு மண்டலத்தைக் கைப்பற்றியதற்காக எமது படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பறை சாற்றுங்கள். மங்களர் தரப்பு தடுமாறப் போகிறார்கள்”

மன்னர் ஆச்சரியத்தில் அமைச்சர் தேவானந்தரைக் கட்டித் தழுவினார். அப்போது அரண்மனை உள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் கேட்டது…

தொடரும்..