வனுஷி வால்ட்டர்ஸ் | நியூசீலந்தின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்

வனுஷி வால்ட்டர்ஸ் | நியூசீலந்தின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்

Spread the love

இன்று (சனி) நடந்து முடிந்த நியூசீலந்து பொதுத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வனுஷி ராஜநாயகம் – வால்ட்டர்ஸ், ஓக்லண்ட் மாகாணத்தின் அப்பர் ஹார்பர் (Upper Harbour) தொகுதியின் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், பிரதம் ஜசிந்தா ஆர்டெனின் தொழிற்கட்சி 49.1% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை ஈட்டியுள்ளது. இதன் பிரகாரம் அக்கட்சிக்கு 64 ஆசனங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க் கட்சியான தேசியக் கட்சி 26.8% வாக்குகளைப் பெற்றிருக்கிறது (35 ஆசனங்கள்). மொத்தம் 120 ஆசனங்கள் உள்ளன.

நியூசீலந்து மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த முகாமைத்துவ பதவியை வகித்துவரும் வனுஷி தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாவார். பிரத்தியேகமாகவும், பொதுப்பணித் துறையிலும், தொண்டுநிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவங்கள் அவருக்குண்டு. தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையின் நிர்வாகசபை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

வனுஷியின் பாட்டியாரான லூயிசா நேய்சம் சரவணமுத்து 1947 வரை, இலங்கை சட்ட சபையில் கொழும்பு வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். நேய்சமின் கணவர் சேர் ரட்ணசோதி சரவணமுத்து, கொழும்பு நகரசபையின் முதலாவது நகரபிதாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.


இலங்கையில் பிறந்த வனுஷி, 5 வயதாகவிருக்கும்போது அவரது தந்தையார், மறைந்த ஜனா ராஜநாயகம், தாயார் பிரிதிவா ஆகியோருடன் நியூசீலந்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். தற்போது கணவர் றைஸ் வால்ட்டர்ஸ் மற்றும் மூன்று இளம் ஆண் பிள்ளைகளுடன் மேற்கு ஓக்லாண்ட்டில் வாழ்ந்து வருகிறார்.

Print Friendly, PDF & Email