Post Views: 639

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது.
அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன.
இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.
மக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் “We came, we saw and we killed him” என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று என்று.
அளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை.
துரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும் தான் இருக்கிறார். புழுங்குகிறார்கள் சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை.
பெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை.
துரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர் வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம்.
அவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள், பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர்.
துரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக் காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை. அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும்.
சமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம் நடக்கிறது.
Relax and enjoy!