வத்திக்கான் | பாப்பரசர் ஃபிரான்ஸிஸை அகற்றுவதற்குச் சதி முயற்சி

-இத்தாலிய பத்திரிகை லா ஸ்தாம்பா

பாப்பரசர் 16ம் பெனெடிக்ட்டின் மரணத்தைத் தொடர்ந்து தற்போதுள்ள பாப்பரசர் ஃபிரான்ஸிஸையும் பதவியிலிருந்து விலக்குவதற்கு வத்திக்கானிலுள்ள சில மதகுருக்கள் (கார்டினல்கள்) கூட்டுச்சதியொன்றை மேற்கொண்டுவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மதகுருவொருவர் குறிப்பிட்டதாக இத்தாலிய பத்திரிகையான லா ஸ்தாம்பா செய்தி வெளியிட்டுள்ளது. பல வழிகளிலும் கொடுக்கப்படும் அழுத்தங்களைத் தாங்க முடியாது பாப்பரசர் தனது பதவியைத் துறப்பார் என இச் சதியாளர் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட இத்தாலிய மதகுரு தெரிவித்திருக்கிறார்.

தற்போது சதியை முன்னெடுத்துவரும் மதகுருக்கள் குறைந்த எண்ணிக்கையினரே எனவும் காலம் செல்லச் செல்ல மேலும் மதகுருக்களை மனம் மாற்றித் தம்முடன் சேர்த்து இச் சதியை நிறைவேற்ற அவர்கள் காத்திருக்கிறார்கள் எனவும் அவர் கூரியிருக்கிறார்.

பாப்பரசர் ஃபிரான்ஸிஸின் தாராளவாத முற்போக்குக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பழமைவாத மதகுருக்களே இச்சதியை முன்னெடுத்து வருவதாகவும், ஒரினச் சேர்க்கை, கருத்தடை, மண முறிப்பு ஆகிய விடயங்களில் பாப்பரசர் ஃபிரான்ஸிஸ் எடுத்துவரும் நிலைப்பாட்டை இவர்கள் தீவிரமாக எதிர்ப்பவர்கள் எனவும் இம் மதகுரு தெரிவித்திருக்கிறார்.

86 வயதாகும் பாப்பரசர் ஃபிரான்ஸிஸ் சமீப காலங்களில் வெளியிட்டுவரும் கருத்துக்கள் வியப்பூட்டும் வகையில் இருப்பதையும் குறிப்பிட்டு அவரது கடந்த வருடம் அவர் பலவிதமான சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகி சக்கர நாற்காலியில் உலாவந்ததையும் சுட்டிக்காட்டி அவரது உடல் உள நலத்தைச் சந்தேகிக்கும் வகையிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அமெரிக்க ஜெசூட் சஞ்சிகை ஒன்றிற்கு பாப்பரசர் அளித்த பேட்டியின்போது செச்சென் முஸ்லிம்களும் (ரஸ்ய குடியரசு), சைபீரிய பேர்யாட் பெளத்தர்களும் ரஸ்யாவின் மிகவும் கொடுமையான மனிதர்கள் எனக் குறிப்பிட்டிருந்தமையைத் தொடர்ந்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் பாப்பரசரது இக்கூற்று விநோதமானதும் கிறித்துவத்தன்மை அற்றதும் என விமர்சித்திருந்தார். இதே போல யூக்கிரெய்ன் போரைப்பற்றிக் குறிப்பிடும்போது “இது ஒரு உலகப் போர்” எனவும் “சாம்ராஜ்யங்கள் பலவீனமடையும்போது இப்படியான போர்கள் ஆரம்பிக்கின்றன” எனவும் கடந்த மாதம் இன்னுமொரு ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார்.

வல்லரசுகள் வத்திக்கானைத் தமது அரசியல் நோக்கங்களுக்காப் பயன்படுத்துவதும் இதே போன்று வத்திக்கானும் இதர நாடுகளின் உள்ளக அரசியலில் தலையிடுவதும் புதிதான விடயமல்ல. வளைகுடாப் போரின்போது பாப்பரசர் ஜோன் பங்கு பற்றியும் பல செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் இதுவரை பதவியில் இருந்த பாப்பரசர்களில் ஃபிரான்ஸிஸ் மிகவும் தாராளவாத மனப்பான்மை கொண்டவர் என்பதால் கத்தோலிக்கர்களாலும் இதர மத சமூகங்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.