வட மாகாண வருகை | ‘இதுவே ஆரம்பம் மட்டுமே!’ – இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை?

டிச்மபர் 17 அன்று வடமாகாணத்துக்குத் தனது மூன்று நாள் நல்லெண்ணப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சீனாவின் இலங்கைக்கான தூதுவரிடம் ‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ ஊடகம் அவரது ப்யண அனுபவம் பற்றிக் கேட்டபோது ” இது எனது பயணத்தின் முடிவாக இருப்பினும் இது ஒரு ஆரம்பம் மட்டுமென்றே எடுத்துக்க்கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கோவிலில் யாழ். நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் சீனத்தூதுவர் குழு (படம்: தமிழ் கார்டியன்)

இலங்கையின் வடபகுதியிலுள்ள இராமர் பாலத்தைப் (Adam’s Bridge) பார்வையிட்டுத் திரும்பியபோது தூதுவர் கீ ஜென்ஹொங் “இது என்பயணத்தின் முடிவானது அதே வேளை இதுவே ஆரம்பமும்கூட” எனத் தெரிவித்துள்ளார்.



இலங்கை-இந்திய உறவுக்கான வரலாற்றுப் பிரசித்திபெற்ற இராமர் பாலத்தில் வைத்து அவர் கூறிய இவ்விடயம் இந்தியாவின் தரையில் வைத்துக்கூறியதற்குச் சமன் என்றே பார்க்கவேண்டும். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளுக்கு மின்சாரம் வழங்கும் சீனாவின் திட்டங்களை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளமை தொடர்பாக சீனா மிகவும் ஆத்திரமடைந்துள்ள நிலையில் தூதுவரின் இந்த வரவும், அறிக்கையும் அரசியல் ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனத் தூதுவரின் இந்த வருகைக்கான ஒழுங்குகளையும் அவருக்கான பாதுகாப்பையும் இலங்கையின் இரானுவம், கடற்படை ஆகியன வழங்கியுள்ளதன் மூலம் அதற்கு இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இலங்கை அரசு மறைக்க முயலவில்லை. பொதுவாக வட கிழக்குக்கு இந்திய, மேற்கு நாடுகளின் வருகைதரும்போது அவர்களுக்கு இப்படியான பாதுகாப்பு ஒழுங்குகள் வழங்கப்படுவதில்லை.

இலங்கையின் வடமேற்கு பகுதியில் மன்னாரை அண்டி இருக்கும் தொடர்ச்சியான தீவுகள் இந்தியாவவின் ராமேஸ்வரத்துக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றன. இரண்டு நாடுகளையும் பாக்குநீரிணை 30 மைல்கள் (48 கி.மீ.) அகலமானது. மன்னாரிலிருந்து 17 கடல் மைல்கள் தூரத்தில் இருக்கும் தீவொன்றுக்கு சீன தூதுவர் சென்று மீண்டிருந்தார். இந்தியாவிலிருந்து பார்க்கப்படக்கூடிய இத் தீவிற்கு இலங்கையின் இலங்கையின் இரு கடற்படைப்படகுகள் மூலம் பல சிரமங்களையும் தாண்டி சீன தூதுவர் பயணித்து மீண்டிருக்கிறார்.

மன்னார் கரையில் இந்தியாவின் அதானி குழுமம், US$ 1 பில்லியன் செலவில், 1000 MW மின்நிலையமொன்றை நிறுவதற்கான கள ஆய்வைச் சமீபத்தில் செய்திருந்ததைத் தொடர்ந்து சீன தூதுவரின் இந்த வரவு நடைபெற்றுள்ளது.



இவ்வரவின்போது சீனத் தூதுவர் யாழ். நல்லூர் ஆலயத்தில் வழிபாடு மற்றும் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்து அதற்கு 5 மடிக்கணனிகள் அன்பளிப்பு ஆகியவற்றையும் செய்திருக்கிறார். அத்தோடு பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தனது ட்றோண் மூலம் இலங்கை-இந்திய கடலெல்லையைப் படமெடுத்திருந்தார் எனவும் இத் தகவல்களை ‘நியூஸ் பெஸ்ட்’ என்னும் ஊடகம் வெளியிட்டது என்றும் ‘ரைம்ஸ் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தூதுவரின் வருகையின்போது அவர் யாழ். நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஆகியோரையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். வடமாகாண மக்களுடன் நெருக்கமான உறவை அபிவிருத்தி செய்துகொள்வதுதான் தமது நோக்கம் என சீனத் தூதுவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Video: Courtesy: News First