ColumnsJekhan Aruliah

வட மாகாணத்தில் நெகிழிக்கூடு (Polytunnel) விவசாயம்

ஜெகன் அருளையா

1990 இல் பிறந்த நிரோஜனது குடும்பம் பரம்பரை விவசாயிகள். கிளிநொச்சியிலுள்ள இரண்டு ஏக்கர் காணியில் அவரது பெற்றோர்கள் வாழை மற்றும் மிளகாய் போன்றவற்றைப் பயிரிட்டு வந்தார்கள். இலங்கையின் இனப்போரினால் துரத்தப்பட்டு தமது மண்ணிலேலேயே உள்ளக அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் அவர்களும் இணைந்தனர். முதலில் தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு இடைத்தங்கல் முகாம்களைத் தஞ்சமடைந்தனர். போர் தொடர்ந்தும் துரத்தியது. இரண்டு வருடங்கள் மல்லாவியையும் அடுத்த இரண்டு வருடங்கள் முல்லைத்தீவையும் தற்காலிக வாழ்விடங்களாகக் கொண்டதன் பின் 1998 முதல் 2012 வரை திருகோணமலையில் தங்கினர். அங்கு கிண்னியா வெந்நீரூற்று தண்னீரை எடுத்து பொது மக்களுக்கு விற்பதன் மூலம் ஒரு சிறு வியாபாரத்தை அவனது பெற்றோர்கள் ஆரம்பித்தனர். இராவணன் இந்நிலத்தைத் தனது வாளினால் துளைத்தபோது பீரிட்டெழுந்த வெந்நீரே இச்சுடுங்கிணற்றில் ஊற்றெடுப்பதாக வாய்வழிக்கதைகள் கூறுகின்றன. இதனால் இவ்வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நோய்கள் குணமாகின்றன என சிலர் நம்புகின்றனர். 15 வருட தொடரோட்டத்தின் பின்னர் நிரோஜன் குடும்பம் 2012 இல் கிளிநொச்சி திரும்புகின்றனர்.

Rahul Nirojan,
Northern Modern Irrigation Jaffna (Pvt) Ltd

நிரோஜன் தனது க.பொ.த. உயர்தரக் கல்வியை திருகோணமலையிலேயே படித்து முடித்த பின் வவுனியா விவசாயக் கல்லூரியில் உயர் தேசிய டிப்ளோமா (HND) பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து 2019 இல் யாழ்ப்பாணத்திலுள்ள வட இலங்கை IIT கல்லூரியில் தனது இளமானிப் பட்டப்படிப்பை (B.Sc. Agriculture) முடித்துக் கொண்டார். இப்பட்டப்படிப்பு ஒரு வெளியார் கல்வியாக இருந்ததனால் கல்வி கற்கும்போதே அவர் முழுநேர வேலையையும் செய்து வந்தார்.


2014 ஆம் ஆண்டிலேயே ஹேலீஸ் விவசாய (Hayleys Agriculture) நிறுவனத்தில் வெளிக்கள தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக (Field Technical Coordinator) ஆக நிரோஜன் தனது விவசாயம் தொடர்பான முழுநேரப் பணியை ஆரம்பித்திருந்தார். இதைத் தொடர்ந்து அரச நிறுவனமான தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்திலும் (National Aquaculture Development Authority) அதன் பின்னர் வடமாகாண விவசாயத் திணைக்களத்திலும் (Nothern Province Department of Agriculture) பணியாற்றினார். இங்கு அவர் பதவி உயர்வு பெற்று தேராவில், முல்லைத்தீவிலுள்ள 120 ஏக்கர் பண்ணைக்கு முகாமையாளரானார். இங்கு பாவனையிலீடுபடுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் நெல் வகைகள் பற்றிய துறைசார் விடயங்களைக் கற்று விபராதிகாரியாகவும் (Subject Matter Officer) பின்னர் கரவெட்டியிலுள்ள விவசாயக் கல்லூரியில் விவசாயப் போதனையாளராகவும் பணியாற்றினார். இத் தொழில்கள் மூலம் அவர் சிறந்த தொழில்சார் அனுபவங்களைப் பெற்றார்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயத்தில் பட்டக் கல்வியையும் பெற்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிவரும் நிரோஜனைப் பற்றி நீண்டதொரு அறிமுகத்தை நான் தருவதற்கு காரணமொன்றுண்டு. நிரோஜன் புத்தகங்களிலிருந்தோ அல்லது விற்பனை, சந்தைப்படுத்தல் போன்ற தொழில்கள் மூலமோ கல்வி கற்றவரல்ல. மாறாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் சேறு அவருக்கு சிறந்த அனுபவக் கல்வியைப் புகட்டியிருக்கிறது.

2023 இல் நிரோஜன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5-வருட சம்பளமற்ற விடுமுறையைச் சாதகமாகக் கையகப்படுத்திக்கொள்கிறார். பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கத் திறைசேரியில் போதிய பணம் இல்லாமையால் அப்போதைய இலங்கை அரசு தனது பணியாளருக்கு 5 வருட சம்பளமில்லா விடுமுறையை வழங்கியிருந்தது. வட நவீன நீர்ப்பாசனம் – யாழ்ப்பாணம் (பிரைவேட்) லிமிட் (Nothern Modern Irrigation Jaffna (Pvt) Ltd.) என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் நிரோஜன் சொட்டு நீர்ப்பாசனம் (Drip Irrigation) மற்றும் ‘பொலிரணல்’ (Polytunnel) எனப்படும் நெகிழிக்கூடுகளில் தாவர வளர்ப்பு போன்ற விடயங்களில் ஆலோசனைகளையும் அதே வேளை அவற்றுக்கான உபகரணங்களையும் வழங்க ஆரம்பித்தார். சிறிய (மைக்கிரோ) நீர் விசிறிகளையும் அதே வேளை பெரிய மழை தூவிகளையும் (rain guns) வழங்குவதுடன் அவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்க ஆரம்பித்தார்.

அது மட்டுமல்லாது பாரிய அளவில் பண்ணைகளை நிர்மாணிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் தேவையான சகல ஆலோசனைகளையும் நிரோஜன் வழங்குகிறார். உகந்த நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றின் மண்ணைப் பரிசோதித்து அங்குள்ள நிலக்கீழ் நீரூற்று வாய்ப்புகள் பற்றியும் அறிந்து சொல்கிறார். மின்சாரம் முதல் பணியாளர் வரை ஒரு பண்ணைக்குத் தேவையான அத்தியாவசிய விடயங்கள் அவற்றின் செலவீனங்கள் என ஒரு பண்ணையை நிர்வகிப்பதற்கான சகல விடயங்களையும் அவர் வழங்குகிறார். அது மட்டுமல்லாது அந்தந்த நிலங்களுக்கேற்ப குறும்போக விளைவுகளைத் தரக்கூடிய (உ+ம் மிளகாய்) பயிர்களையும் நெடும்போக விளைவுகளைத் தரக்கூடிய (உ+ம்: மாதுளங்கனி, முந்திரிப் பருப்பு, மாங்கனி, தென்னை) போன்ற தாவரங்களையும் அவ்வவ் நிலங்களுக்கேற்ப நிரோஜன் பரிந்துரைக்கிறார்.

என்னால் முடிந்தளவுக்கு, கடுமையான கேள்வியென நான் நினைத்த ஒன்றை, நிரோஜனிடம் கேட்டேன்: “குரங்குகளிடமிருந்து அறுவடைகளை எப்படிப் பாதுகாப்பது?”. “அந்தக் குறும்புக்காரப் பயல்களிடமிருந்து எதையும் முற்றாகப் பாதுகாத்துவிட முடியாது. கணிசமான பாதுகாப்பை பெற வேண்டுமானால் மின் வேலிகளிலிருந்து சுமார் 20 அடி தூரத்திற்கு நிலங்கள் சுத்தம் செய்யப்படவேண்டும். இரு பக்கமும் 40 அடி தூர இடைவெளியை மரங்களிலிருக்கும் குரங்குகள் தாண்ட முடியாது. இதனால் அவை வேறு எங்காவது இலகுவான திருட்டு வசதியுள்ள இடங்களை நாடிப் போய்விடும்” என்றார் நிரோஜன்.

“நான் ஒரு புகலிடத் தமிழன். சுமார் 10 மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்யத் தயாராக உள்ளேன். இதற்கு எந்தவகையான முதலீட்டைச் செய்ய முடியும்?” என நிரோஜனைக் கேட்டேன். “A9 வீதியை முன்னரங்கமாகக் கொண்ட காணி எதுவும் மிகவும் பெறுமதியானவை. உபகரணங்களைக் கொண்டுவருதல் முதல் அவற்றைச் சுத்திகரித்து பயிரிடும் வரை மிகுந்த செலவாகும். ஆனால் A9 இலிருந்து சில நிமிட தூரத்தில் 2-3 ஏக்கர் காணியில் சுமார் 4,000 சது அடி பரப்பளவில் குறு நீர்ப்பாசனத்துடன் கூடிய (micro irrigation) நெகிழிக்கூடுகளுடனான (polytunnel) ஒரு தோட்டத்தை என்னால் அமைத்துத தர முடியும். அதைத் தொடர்ந்து உயர் பெறுமதியான பயிகளைப் பயிரிடலாம். இம்முயற்சிக்கான ஆரம்ப முதலீடாக 10 இலட்சம் ரூபாக்கள் போதுமானதாக இருக்கும். இதன் பிறகு இப்பண்ணையின் வருமானமே அதனை நிர்வகிக்கப் போதுமானதாக இருக்கும்” என்கிறார் நிரோஜன்.

தனது வாடிக்கையாளர் ஒருவரது பண்ணைக்கு நிரோஜன் என்னை அழைத்துச் சென்றிருந்தார். நோர்வேயில் வசிக்கும் தீபன் அவ்வேளை, தற்செயலாக, யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரது பண்ணையைப் பார்வையிடுவதற்காக வருடத்தில் சில தடவைகள் தீபன் யாழ்ப்பாணம் வரும்போது இரண்டு வாரங்கள் தங்கிப் போவார். போரின் பாதிப்புகள் காரணமாக1996 இல், தீபன் தனது 10 ஆவது வயதில் நோர்வே சென்றிருந்தார். நோர்வேயில் வளர்ந்த அவர் நோர்வேஜியப் பெண்ணை மணந்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். நோர்வேயில் தான் இரண்டு வேலைகளைச் செய்வதாக தீபன் கூறுகிறார். பகலில், அவரது பிரதான வேலையாக ஒரு மின்வலு நிலையத்தில் பொறியியலாளராகப் பணிபுரிவதன் மூலம் தன் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் அதே வேளை இரவில் ஒரு எலெக்ட்றீஷியனாக பணியாற்றுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தனது பூர்வீக நிலத்திலுள்ள் குடும்பப் பண்ணையை நிர்வகிக்கவும் முடிகிறது எனக் கூறுகிறார். நிரோஜனின் பணிகள் பற்றி ஒரு யூ-டியூப் காணொளி மூலம் தீபன் அறிந்திருந்தார். நிரோஜனின் உதவியுடன் தனது பண்ணையில் 4,000 சதுர அடியிலும், 3,000 சதுர அடியிலும் இரண்டு நெகிழிக்கூடுகளை (பொலிரணல்) தீபன் நிறுவிக்கொண்டார். இக்கூடுகளுக்கு வெளியே உள்ள நிலத்தில் ட்றாகன் பழம் உட்படப் பல வெளிப்பயிர்களை தீபன் நாட்டியிருக்கிறார். அவை என்னை உண்மையில் மலைக்க வைத்து விட்டன.

“எல்லாம் சரியாக நடந்தால்…” என்ற பதத்தை இங்கு மறந்துவிடக்கூடாது. வெற்றியென்பது உறுத்திப்படுத்தப்பட ஒரு விடயமல்ல. எதிர்பார்ப்புகளையும் எதிர்பாராதவைகளையும் கொண்டிருக்கக்கூடிய சிறிய பணியாளர் குழுவைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யக்கூடிய ஒரு பண்ணை முகாமையாளரே இங்கு அதி முக்கியமானவர். சந்தை விலைகளையும் நுகர்வோர் தேவைகளையும் அத்தோடு ‘கடவுள் செயல்கள்’ எனக்கூறப்படும் நவம்பர் 2025 இல் வந்த சூறாவளி, பெருவெள்ளம் போன்ற அனர்த்தங்களின் வருகைகளையும் தீர்மானிக்கும் தகமை முகாமையாளரின் கட்டுப்பாட்டிலில்லை என்பதையும் இங்கு மறக்கலாகாது.

2016 ஆம் ஆண்டு முதலே நிரோஜன் முகநூல் மூலம் தனது பண்ணை உபகரணங்களை விற்கும் தொழிலை ஆரம்பித்திருந்தார். 2019 பிற்பகுதியில் அவர் தனது தந்தை மற்றும் சகோதரரையும் இணைத்து தனது தொழிலை ஒரு நிறுவனமாகப் பதிவு செய்தார். ஆனால் அவரது சகோதரர் இத் தொழிலை விட்டுவிட்டு இப்போது ‘மிதுஸ் ட்றவெல்ஸ்’ (Mithus Travels) என்னும் பெயரில் பயண நிறுவனங்களுக்கு வாகனங்களையும் வழிகாட்டிகளையும் வழங்கும் நிறுவனத்தை இப்போது நிர்வகித்து வருகிறார். 2023 இல் நிரோஜன் தனது நிறுவனத்தின் பெயரை ‘Nothern Modern Irrigation (Pvt) Ltd.’ என மாற்றிக்கொண்டார். நிரோஜனது நண்பரும், கிராமிய சமூகங்கள் மத்தியில் பணியாற்றிவரும் ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூத்த அதிகாரியுமான ஜெயராஜன் நடராஜன் பல வருடங்களாக உத்தியோகப்பற்றற்ற வகையில் நிரோஜனுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வடக்கில் நெகிழிக்கூடுகளின் பாவனையும் அதனால் ஈட்டக்கூடிய பல நன்மைகள் பற்றியும் இவ்விருவரும் இந்த நேர்காணலுக்கான பல தகவல்களைத் தந்துள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளிலும் நெகிழிக்கூடுகளின் பாவனை பரவலாக இருந்த போதிலும் வடக்கின் வரண்ட சுவாத்தியத்திற்கு இதன் பாவனை சாத்தியமற்றது எனக் கருதப்பட்டதால் வடக்கில் இந்நடைமுறை அதிகளவு பாவனைக்கு வரவில்லை. மலையகத்தில், குறிப்பாக கண்டி, நுவரேலியா போன்ற இடங்களில் இதன் பாவனை பரவலாக இருக்கிறது. ஸ்ட்றோபெரி பழங்கள், மலர்ச் செண்டுகள், கீரைகள் போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன. நெகிழிக்கூட்டு விவசாயத்தைத் தவற விடுவதனால் வடக்கு மிகவும் பொன்னான சந்தர்ப்பத்தை இழக்கிறது எனவே கூறமுடியும். ஏற்றுமதி தரத்திலான பயிர்களையும் அத்தோடு திறந்த வெளியில் பயிர் செய்யப்பட முடியாத பெறுமதியான பல பயிர்களையும் இங்கு வளர்க்க முடியும். செடிப் பைகள் (Grow-bags), தெங்கு நார்க்கழிவு (Cocopeat) மற்றும் மண்புழு உரம் (vermicompost) போன்ற பயிர் வளர்ப்பு முறைகள் நெகிழிக்கூடுகளில் தாவர வளர்ப்பிற்கு உகந்தவை மட்டுமல்ல மிகவும் மலிவான விலைகளிலும் கிடைக்கின்றன. சாதிக்காய் (nutmeg), வனிலா காய்கள் (vanilla pods), நெல்லிக் காய்கள் (gooseberries) மற்றும் ஸ்ட்றோபெரிப் பழங்கள் போன்ற பெறுமதியுள்ள பயிர்களியும் இங்கு இலகுவாக வளர்த்துப் பலன்பெற முடியும். பாதுகாப்பான சூழலில், விரும்பிய அளவு, சுவையுடன் கறைகளற்ற வகையில் ஏற்றுமதித் தரத்தில் பயிர்களை வளர்த்துப் பலன்பெற நெகிழிக்கூட்டு விவசாயம் உதவியாகவுள்ளது.

அரை ஏக்கர் (21,780 சதுர அடி) நிலத்தில் இந்நெகிழிக்கூட்டு விவசாயத்தை உருவாக்கிக் கொள்ளலாம். கன மழை, உயர் வெப்பம் ஆகியன ஒரு கணப் பொழுதிலேயே பெறுமதி வாய்ந்த விவசாயத்தை அழித்துவிடக்கூடியன. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்வதன் மூலம் ஒரு 4.000 சதுர அடி நெகிழிக்கூட்டு விவசாயத்தைப் பலன் தரும் தொழிலாக்கிக்கொள்ள முடியும்.

அறுவடைகளைப் பதம் பண்ணும் மற்றும் துணை வசதிகள் வடக்கில் அரிதாகவுள்ளன எனக் கூறுகிறார் ஜெயராஜன். அறுவடைகளைப் பதமாக வைத்திருக்கக் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள், கூழாக்கும் (pulping) உபகரணங்கள், திடீர் உறைவு (flash freeze) மற்றும் பொதி செய்யும் (packaging) உபகரணங்கள் ஆகியவற்றில் முதலீடுகள் அவசியம். தற்போது தடைசெய்யப்பட்டுள்ள USAID போன்ற நிறுவனங்கள் ஒரு காலத்தில் இப்படியான தேவைகளுக்கு முதலீடுகளைச் செய்து வந்தன. மேலும் பல சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களும் தற்போது தமது உதவிகளைக் குறைத்துக் கொண்டன.

தனியார் முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களும், தேவைகளும் இப்போதுதான் அதிகமாகவிருக்கின்றன.

நிரோஜனுடன் தொடர்பு கொள்ள: +94 76 323 4503 அல்லது email jaffmicroirrigation@gmail.com, https://www.northernjaffnamicroirrigation.com/

இக்கட்டுரை லங்கா பிசினெஸ் ஒன்லைன் பத்திரிகையில் பிரசுரமானது

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன் tam@veedu.com)