World

வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் உடல்நிலை மோசம் என்பதை நம்பமுடியாது – தென் கொரியா

வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங் உன் உயிராபத்தில் இருப்பதாகவும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க ஊடகமான சீ.என்.என். சற்று முன்னர் பரபரப்பான செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான வருடாந்த நிகழ்வொன்றில் கிம் காணப்படாததையும், சமீபத்தில் அவர் இருதய அறுவச் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பதையும் இணைத்து ஒரு இப்படி ஒரு செய்தியை சீ.என்.என். வெளியிட்டிருக்கலாம்.

இது பற்றி தென் கொரிய அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின்படி, வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் அவர்களது உடல் நிலை மோசம்டைந்தது பற்றி எதுவித அறிகுறிகளும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அவர் இருதய அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்திருந்தார் எனவும் அறியப்படுகிறது.

வட கொரியாவிற்கு வெளியே வாழும் அதிருப்தியாளர்கள் நடத்தும் Daily NK என்ற இணையத்தளம் செவ்வாயன்று (இன்று) வெளியிட்ட செய்தியில், ஏப்ரல் 12 ம் திகதி நடைபெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அதிபர் கிம், மவுண்ட் கும்காங் என்னுமிடத்திலுள்ள விடுமுறை வீடொன்றில் தங்கியிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளது.

தென் கொரிய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சிலரது கருத்துக்களை மேற்கோள்காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளின்படி, ‘கிம்மின் உடல்நிலை மிக மோசமான நிலையிலுள்ளது’ என்ற தகவகளில் உண்மையில்லை எனவும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி வட கொரியாவிலிருந்து அசாதாரண செய்திகள் எதுவும் வரவில்லை எனவும் அறியப்படுகிறது.

கிம் ஜொங் உன்னின் தாத்தாவும், வட கொரியாவின் உருவாக்கத்துக்க் காரணமானவருமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆகும். அந் நாளைத் தேசிய விடுமுறை நாளாக அந் நாட்டு மக்கள் கொண்டாடுவது வழக்கம். அக் கொண்டாட்டங்களில் போது எடுக்கப்பட்ட அரசின் உத்தியோகபூர்வ படங்களில் கிம் ஜொங் உன்னின் பிரசன்னம் இருக்கவில்லை என்பது கூர்மையாக அவதானிக்கப்பட்டிருந்தது.

வட கொரியாவுக்கு உள்ளிருந்து தகவல்களைப் பெறுவதென்பது, முக்கியமாக அதன் தலைவைரைப் பற்றிய தகவல்களைப் பெறுவது, இயலாத காரியம்.

கிம் ஜொங் உன்னின் உடல் நலம் பற்றிப் பல வதந்திகள் ஏற்கெனவே வந்திருந்த நிலையில், தற்போதைய தகவலையும் அப்படித்தான் பார்க்க வேண்டுமென NK Pro, NK News போன்ற ஊடகங்களை நடத்திவரும் Korea Risk Group என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாட் ஓகரோல் தனது ருவீட் மூலம் தெரிவித்துள்ளார்.