Sri LankaVolunteer Orgs.

வட-கிழக்கு மீள்குடியேற்றவாசிகளுக்கு புலம்பெயர் அமைப்புகள் மீன்பிடி உபகரணங்கள் உதவி!

பெப்ரவரி 1, 2020

போரினாற் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த பல கரையோரக் குடும்பங்கள் தமது பாரம்பரிய கடற்தொழிலைத் தொடர்வதற்கு, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ‘புனர்வாழ்வும் புதுவாழ்வும்’ (AssistRR) என்னும் தொண்டு நிறுவனம் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO), மலேசிய தமிழர் அமைப்பு (Tamil Forum Malaysia) மற்றும் CHRF (UK) போன்ற அமைப்புகளின் உதவியுடன் மீன்பிடி உபகரணங்களை வழங்கி வருகிறது.

Mr.Penney of AssistRR with donated fishing equipment

ஒரு படகு, அதற்கான இயந்திரம், வலைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரூ.600,000 தேவைப்படுவதால், இக் கரையோரக் கிராமத்தவர்கள் அத் தொழிலைச் செய்யமுடியாது, தமது வாழ்வாதாரத்துக்காக கூலி வேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலைமை இருந்தது.

இந்த நிலைமையை அறிந்த AssistRR நிறுவனம் சம்பூரில் 50 குடும்பங்களுக்கு படகுகள் (50), இயந்திரங்கள் (50), குடும்பத்துக்குப் 10 வலைகள் (500) ஆகியவற்றை உபயமாக வழங்கியிருந்தது. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ஆரம்பித்த இத் திட்டம் வெற்றியளித்ததைத் தொடர்ந்து, AssistRR , அமெரிக்காவிலுள்ள அனைத்துலக மருத்துவ நல அமைப்பிடம் (IMHO USA) உதவி கோரியதைத் தொடர்ந்து அது மேலும் பல படகுகளை வாங்குவதற்கு நிதியுதவி செய்ய முன்வந்திருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள சொலிஹல் பாடசாலையின் தலைமை ஆசிரியரான திரு மார்க் பென்னியம் அவரது துணைவியார் திருமதி டொனா பென்னியும் இது திட்டத்துக்குப் பணம் சேர்ப்பதற்காக பிரித்தானியாவில் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று 55 கி.மீ . தூரம் நடைபவனி சென்றிருந்தார்கள். இதன்போது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமார் 50,000 பவுண்டுகள் சேர்க்கப்பட்டது.

இப்பணத்துடன், AssistRR ஒழுங்குசெய்த இராப் போசன விருந்துகள் மூலம் கிடைத்த பணத்தையும் சேர்த்து மேலும் 28 செட்டுகள் மீன்பிடி உபகரணங்களை AssistRR வழங்கியிருக்கிறது. இதைவிட IMHO USA -10, TFM -5, CHRF UK -2 என 17 செட்டுகளுமாக மொத்தம் 45 செட்டுகளை 225 குடும்பங்கள் பாவித்துப் பலனடைகின்றன.

புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பின் பலனாக, ஒவ்வொரு குடும்பமும் நாளொன்றுக்கு ரூ. 3000 முதல் 4000 வரையில் சம்பாதிக்கக்கூடியதாக உள்ளதையிட்டு இக் குடும்பங்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர் என AssistRR தெரிவிக்கிறது. குறிப்பாக, திரு, திருமதி பென்னி ஆகியோர் தமது கடுமையான உழைப்பினால் இப் பெருந்தொகை பணத்தைச் (50,000 பவுண்டுகள்) சேர்த்துக் கொடுத்தமைக்காக அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

திரு, திருமதி பென்னி இலங்கைக்கு அக்டோபர் 2019 இல், நேரடியாக வந்து வட கிழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு 14 செட்டுகள் உபகரணங்களை வழங்கியிருந்தனர்.