Spread the love

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு கோவிட்-19 உணவு நிவாரண உதவி கோருதல்

கொரோனா வைரஸ் (COVID-19) கொள்ளை நோய் உலகமெங்கும் மக்களை பெருந்துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒப்பீட்டளவில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, கோவிட்-19 பரம்பலைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, மற்றும் நாடு தழுவியரீதியிலான நடமாட்டத்தடை ஆகியவற்றினால், வடக்கு-கிழக்கு வாழ் தமிழ்மக்கள் தமது இருப்புக் குறித்துப் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

வாழ்வாதாரத்தையும், வருமானமீட்டலையும் அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான, இலங்கையின் வட -கிழக்குத் தமிழர்களை 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 1. அரச ஊழியர்கள்
 2. விவசாயிகள்
 3. மீனவர்கள்
 4. சமுர்த்தி உதவி பெறுவோர்
 5. தினக்கூலி பெறுவோர்

இலங்கையில் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டத்தடையின் போது (தினஊரடங்கு), முதல் நான்கு வகையினரும் தமது அடிப்படைத் தேவைகளைச் சமாளித்துக் கொள்ள முடிகிறது. ஆனாலும், தினக்கூலிக்குச் செல்பவர்களால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையுள்ளது. நாளாந்த உணவுக்கும், இதர தேவைகளுக்கும் அவர்கள் தமது தினச்சம்பளத்தையே நம்பியிருப்பவர்கள். இலங்கை அரசாங்கம், இப்படியான மக்களுக்கு எதுவித ஆதரவையும் கொடுக்கவில்லை. போரின் காரணமாக, வடக்கு-கிழக்கு வாழ் தமிழ்மக்களிடையே பெருமளவு உடல் ஊனமுற்றோரும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளனர். அவர்களிடையே பெருமளவு வேலையற்றோரும், வறுமையும், போஷாக்கு குறைந்தோரும் இருப்பதால் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு அவர்கள் இலகுவாக ஆளாகிவிட முடியும்.

வருமானமின்மையும், அரச ஆதரவின்மையும் காரணமாக, இச்சமூகம் பட்டினியின் விளிம்பில் இருக்கிறது. மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் நடமாட்டத்தடையும், ஊரடங்கும் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்பதால், நாளாந்த வருமானம் ஏதுமின்றி, வரும் வாரங்களில் இம்மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.

உள்ளுர்த் தொண்டு நிறுவனங்களும், சமூகத் தலைவர்களும், இம்மக்களின் துயர் துடைக்கவென, உடனடி உதவிகளை வேண்டி, சர்வதேச சமூகத்திடமும், புலம்பெயர்தமிழ்ச் சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். சர்வதேச சமூகம் தனது உள்ளார்ந்த கோவிட்-19 சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில், வடக்கு-கிழக்கில் அவலத்துக்குள்ளாகியிருக்கும் நலிவடைந்த தமிழ்மக்களுக்கு, புலம்பெயர்தமிழ்ச் சமூகத்தின் (அவர்களும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொண்டு) இக்காலத்தின் அவசரத்தேவை கருதிய பங்களிப்பு அவசியமாகிறது.

வடக்கு-கிழக்கிலுள்ள இத்தகைய அவலமுறும் மக்களின் துயர் துடைக்கவென, அங்குள்ள நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புக்களுடன் இணைந்து, கனடியத் தமிழர் பேரவை உணவு நிவாரண முயற்சியொன்றை முன்னெடுக்கிறது.

அங்குள்ள கிராமசேவகர்கள், பிரதேச செயலகங்கள் வாயிலாக பயன்பெறும் குடும்பங்களை முறையாக அடையாளம் கண்டு இவ்உதவிகளைச் செய்வதன் மூலம், தகுதியுடையவர்கள் மட்டுமே இவ்வுதவிக்கு உரித்துடையவர்கள் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளமுடியும்.

Related:  ரொறோண்டோ | வீட்டு உரிமையாளருக்கு $55,000 வாடகை பாக்கி!

தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்துக்கும், 1000 ரூபாய்கள் பெறுமதியான உலருணவுப்பொதியொன்று வழங்கப்படும். இப்பொதியில் 5 கிலோ அரிசி, 3 கிலோ மாவு, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனி, இரண்டு சவற்காரக்கட்டிகள் ஆகியன அடங்கும். சராசரியான ஒரு குடும்பத்தின் ஒருவார உணவுத் தேவையைச் சமாளிக்க இப்பொதி போதுமானது.

ஆரம்பத்தில், உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கென, இலங்கையின் வட-கிழக்கிலுள்ள நான்கு மாவட்டங்களை நாங்கள் தெரிவு செய்கிறோம். உங்கள் மனமார்ந்த உதவிகளுடன், இனிவரும் நாட்களில், வாரங்களில் இவ்வுதவியை எஞ்சிய மாவட்டங்கள் அனைத்துக்கும் விரிவுபடுத்தவுள்ளோம்.

தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களினதும், அம்மாவட்டங்களில் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவுள்ள அமைப்புகளினதும் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள், நம்பகத்தன்மை வாய்ந்ததும், கொடுக்கப்பட்ட பணிகளைத் திறம்படச் செய்யக்கூடியனவுமாகும்.

 • வவுனியா மாவட்டம் – வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (North & East Economic Development (NEED) Centre)
 • திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை மாவட்ட நலன் புரிச்சங்கம் (Trincomalee District Welfare Association)
 • முல்லைத்தீவு மாவட்டம் – ஒளிரும் வாழ்வு அமைப்பு (OlirumValvu Organization)
 • கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை (Kilinochchi Education Development Trust (KEDT))

நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு கனடிய $7.50 பங்களிப்பும், ஒரு அவலப்படும் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கு உணவளிக்கப் போதுமானது.

உங்கள் மனமுவந்த பங்களிப்பை, இக்குடும்பங்களின் சார்பில் வேண்டி நிற்கிறோம்.

பின்வரும் தேர்வுகளின் மூலம், நீங்கள் உங்கள் பங்களிப்புகளைச் செய்யமுடியும்.

 • Gofundme இணையத்தளம் வழியாக:
வட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி - கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்! 1
 • நேரடியாகப் பங்களிப்பை செலுத்த விரும்பினால், அதை நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள ஆவன செய்யப்படும்.
 • காசோலை மூலம் பங்களிக்க விரும்புபவர்கள் பின்வரும் வகையில் அதை எழுதி கீழுள்ள விலாசத்துக்கு அனுப்பி வையுங்கள்.

Make a cheque payable to Canadian Tamil Congress (with a memo: COVID-19 Food Relief Sri Lanka.) and mail it to:

Canadian Tamil Congress
10 Milner Business Court, Suite 513
Toronto, Ontario M1B 3C6

இது குறித்து ஏதாவது கேள்விகள் இருப்பின் அல்லது விளக்கங்கள் தேவைப்படின், பின்வரும் இலக்கத்தில் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது மின்முகவரி மூலம் தொடர்பு கொண்டோ அவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

தொலைபேசிஎண்: 647-300-1973

மின்னஞ்சல்முகவரி: dantont@canadiantamilcongress.ca

உங்கள் தாராள உதவிக்கு எமது மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

canadiantamilcongress.ca/donation/(opens in a new tab)

Our Donation Page Link

Print Friendly, PDF & Email
வட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி – கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்!

வட-கிழக்கு மக்களுக்கு கோவிட்-19 நிவாரண உதவி – கனடிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள்!