EnvironmentSri Lanka

வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்

சிறப்பு உரையாடல்

இலங்கையின் வட-கிழக்கில் வீட்டுத் தோட்ட முயற்சிகள் பற்றி, அதனை முன்னெடுத்துவரும் அமைப்புக்களில் ஒன்றான வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் (North East Economic Development Centre (NEED)) பணிப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான செல்வின் இரெனூஸ் மரியாம்பிள்ளை அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.


செல்வின் பற்றி..

செல்வின் இரென்யூஸ் மரியாம்பிள்ளை

வட-கிழக்கு அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வின், தேசிய மற்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், சமூகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், அபிவிருத்தி, சமாதானம் மற்றும் முரண் தவிர்ப்பு துறைகளில், கல்வி, தொழில்முறை தொடர்பான பட்டக் கல்வியைப் பெற்றவர். அத்தோடு, அவர் சிறிலங்கா நிர்வாக சேவைக்குத் தெரிவாகி, இரண்டு தசாப்தங்களாகப், பல்வேறு மாகாண அமைச்சுகள், மத்திய அரசின் திணைக்களங்கள், சட்டவாக்க சபைகள் ஆகியவற்றில் பல பதவிகளிலும் நிலைகளிலும் பணி புரிந்தவர். வருகை விரிவுரையாளர், ஆலோசகர், ஆய்வாளர், பணிப்பாளர், செயலாளர் என்னும் பல பாத்திரங்களை வகித்து வருபவர். மோதலுக்குப் பின்னான அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, இளையோர் மேம்பாடு, தொழில்துறை / தொழில்முனைவு அபிவிருத்தி, பிராந்திய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி ஆகியன அவருக்கு மிகவும் ஆர்வமான துறைகள். 


காலக் குறிப்புகளை ஒழுங்கமைக்க வரலாற்றாசிரியர்கள் பாவித்து வரும் கிறிஸ்து, திருவள்ளுவர் ஆண்டுகளைத் தள்ளிவிட்டு கோ.மு., கோ.பி. என்று கோவிட்டை வைத்துக் கால நிர்ணயம் செய்துகொள்ளும் நிலைவந்தால் ஆச்சரியப்படவேண்டாம். இப்படியான கோ.பி. ஆண்டொன்றில் மனித குலம் தம் சுய உணவுத் தேவைகளுக்காக வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்துவைக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது. அதற்கான தயாரிப்புகள் உலகெங்கும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. நம்மூரிலும்தான். இது ஒன்றும் புதிதல்ல. தலைக்குமேல் கூரை என்று ஒன்று வந்ததிலிருந்து மனித குலம் கடைப்பிடித்துவந்து பின்னர் மறந்துபோன வீட்டுத் தோட்டம் மீண்டும் உங்கள் கதவுகளைத் தட்டுகிறது.

கோவிட்ட்டுக்குப் பின்னான உலகம் இப்போதுதான் விடிந்திருக்கிறது. தாமே உலகத்தின் மீட்பர்களாக வலம் வந்த மேற்குலகம் ஒரு அரக்கு மாளிகை என கோவிட் வைரஸ் புட்டுக்காட்டிவிட்டது. இதன் பிரமைகளில் சொக்கிப்போயிருந்து நமது கீழுலகம் விழித்துக்கொண்டு விட்டது. தன் கையே தனக்குதவி என்பதை வைரஸ் எங்களுக்கு அறைந்து சொல்லியிருக்கிறது. வயிற்றை நிரப்புவதே எமது வாழ்வின் முதற்பணி. இங்குதான் ஆரம்பிக்கிறது எமது உரையாடல்.


புலம்பெயர் தழிழ்ச்சமூகம் முதலில் தனது கடந்தகாலத்தின் வெறுமையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடவேண்டும். குழுநிலைகளும் முரண்பாடுகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எவ்வித பயனும் தரப்போவதில்லை என்ற உண்மையின் அடிப்படையில் தாயகமக்களை தந்திரோபாய அடிப்படையில் வலுவூட்டி கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

அவர்களது ஆர்வம் அனுபவம் அறிவு ஆற்றல் புலம்பெயர்தேசங்களில் பெற்றுள்ள நன்மதிப்பும் செல்வாக்கும் என பலபரிமாணங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையில் பங்களிக்க முன்வரவேண்டும்.

செல்வின் இரெனேயுஸ்
1. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் யாது?

கொரோனா தொற்று அபாயத்தினைத் தொடர்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் அல்லது மாற்றமடையப்போகும் உலகந்தழுவிய புதிய பொருளாதார மற்றும் சர்வதேச அரசியல் ஒழுங்கினால் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி, பொருளாதார நெருக்கடி நோய்த்தொற்றின் வீரியம் மிக்க தாக்கம் ஆகியவற்றில் இருந்து ஏற்கனவே யுத்தத்தால் நலிவடைந்து போயுள்ள மக்களை காப்பாற்றுதலும் அவர்களது வலுவான இருப்பினை அவர்கள் வாழுமிடங்களிலேயே உறுதிப்படுத்துதலும்.

2. இதேபோன்ற முன்முனைப்புகள் அரசாங்கத்தாலும் வேறு நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படுகின்றனவா?

ஆம் இலங்கை அரசினாலும் வீட்டுத்தோட்டம் என்ற திட்டம் தீவடங்கிலும் அரசாங்க திணைக்களங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கில் முன்மொழிந்துள்ள திட்டம் இதிலிருந்து வேறுபட்டது. வடக்கு கிழக்கில் தற்போது பல்வேறு இளைஞர் குழுக்கள் புலம்பெயர் மக்களின் ஊர்ச்சங்கங்கள் உள்ளுர் செயற்பாட்டாளர்கள் ஆகியோராலும் வீட்டுத்தோட்டங்களுக்கான ஆரம்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு விதைகள் சேகரிப்பு விநியோகம் ஆகியவை நடைபெறுகின்றது
நாங்கள் எங்களது வீட்டுத்தோட்ட முன்மொழிவினை மிகவும் வேறுபட்ட கோணத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அ. பாரம்பரிய உள்ளுர் இனப்பயிர்கள் மற்றும் தாவரங்கள்
ஆ. இயற்கை விவசாய முறைகள்
இ.குடும்ப உழைப்பு
ஈ.ஆரோக்கியமான உணவு.
உ. பேண்தகு உணவுப்பாதுகாப்பு முறைமை
ஊ. கிராமங்களின் கூட்டுமுயற்சி
எ. பயன்படுத்தாத அயல்நிலங்களையும் பயன்படுத்துதல்
ஏ. கிராமங்களுடன் மக்களின் இணைப்பினைப் பலப்படுத்துதல்3. நீங்கள் இத்திட்டத்தை ஒரு இடத்தில் அல்லது மாவட்டத்தில் முதலில் ஆரம்பித்துவிட்டு பின்பு படிப்படியாக வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்போகின்றீர்களா? (ஒரு மாவட்டமும் தங்களை புறக்கணித்ததாக கருதக்கூடாது)

இல்லை. சமகாலத்தில் வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். சிலவேளைகளில் முதல் தரப்பில் ஐந்து மாவட்டங்களில் தலா 200 குடுமபங்களை தெரிவு செய்து ஆரம்பிக்கும் அதேவேளை கிடைக்கும் உதவிகளின் பரிமாணத்தைப்பொறுத்து விடுபட்ட மாவட்டத்திற்கும் புதிய கிராமங்களுக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
சுமகாலத்தில் திட்டத்தை விரிவாக்கமுடியாமைக்கு இரண்டு சவால்கள் உள்ளன.
அ. கிடைக்கக்கூடிய வள ஆதரவு பற்றி இதுவரை கணிப்பிடமுடியவில்லை.
ஆ. உள்ளுர் இன விதைகளைப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பெறுவதில் காணப்படும் மட்டுப்பாடுகள்

4. எத்தனை பயனாளிகள் அல்லது குடும்பங்களை இலக்கு வைத்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றீர்கள்? திட்டத்தை ஆரம்பிக்க தேவைப்படும் உத்தேச முதலீடு எவ்வளவாக இருக்கும்?

முதற்கட்டமாக மாவட்டத்திற்கு 200 பயனாளிகளை உள்ளடக்கிய இரண்டு கிராமங்கள் வீதம் 10 கிராமங்களில் மொத்தம் 1000 குடும்பங்கள். உத்தேசமாக ஒரு குடும்பத்திற்கு இலங்கை ரூபாவில் 2000.00 தேவைப்படும். இத்தொகையினுள் விதைகள் நாற்றுக்கள் சிறு வீட்டுத்தோட்ட உபகரணங்கள் ஆகியவற்றின் பெறுமதியியுடன் தொடர்ச்சியாக மூன்று மாதத்திற்கு திட்டத்தை கண்காணித்து ஒருங்கிணைக்கப்போகும் இணைப்பாளருக்கான கொடுப்பனவும் உள்ளடங்கும்.

5. வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் தனக்கென வீட்டுத்தோட்டம் செய்வதற்கான காணித்துண்டினைக்கொண்டிராத பட்சத்தில் எவ்வாறு அந்தக்குடும்பத்தையும் உங்கள் திட்டத்தில் உள்வாங்கப்போகின்றீர்கள்?

தனது குடியிருப்புக்காணியினுள் வீட்டுத்தொட்டத்தை செய்யமுடியாத குடும்பங்கள் விடயத்தில் அவர்கள் குடியிருப்பக்கப் பக்கத்திலுள்ள பயன்படுத்தப்படாத தனியார்காணியினை பெற்று பயன்படுத்துவதற்கு உள்ளுர் நிர்வாக பொறிமுறையின் ஆதரவுடன் முயற்சி எடுக்கப்படும். இல்லையேல் அவர்களது வீட்டின் அமைப்பு காணியின் அளவு ஆகியவற்றைக்கணக்கில் கொண்டு அடுக்குத்தோட்டம், தொங்குதோட்டம் வேலித்தோட்டம் போன்ற மாற்றுத்தெரிவுகள் ஊக்குவிக்கப்படும் : Watch Video

6. இத்திட்டத்தின் நோக்கத்திற்காக சமகாலத்தில் பயன்படுத்தப்படாத காணிகளுக்கு உரிமையாளர்களாக இருக்கும் புலமபெயர் தேசத்தவர் உட்பட அனைவரிடமும் தற்காலிக அடிப்படையிலாவது காணிகளை உணவு உற்பத்திக்காக பயன்படுத்தவதற்கு கோரும் முனைப்புகள் உண்டா?

ஆம் நிச்சயமாக. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் குடியிருக்காத பயன்படுத்தாத காணிகளின் விபரங்களை அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக சேகரிக்கத்தொடங்கிவிட்டனர்.
நாங்கள் இத்தகைய நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு விரும்புகின்றோம். புலம்பெயர்குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது குடும்பஉறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருக்கு தங்களது காணிகளை தற்காலிக அடிப்படையில் உணவுப்பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்வரலாம்.7. இத்தகைய புலம்பெயர் மக்களின் காணிகளை தற்காலிகமாகப் பெற்று பயன்படுத்தும் திட்டத்தைக்கொண்டுள்ள வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய திட்டங்கள் தங்களிடம் உண்டா? எவ்வாறு?

ஆர்வமுள்ள பல அமைப்புக்கள் இத்தகைய முயற்சிகளை சிலவருடங்களாக முன்னெடுத்து வருகின்றன. எனினும் வெற்றியின் அளவு குறைவாகவே உள்ளது. சிலநேரங்களில் உள்ளுர் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமலேயே அதிகூடிய பணத்திற்கு ஆசைப்பட்டு வேற்று ஆட்களுக்கு தங்கள் காணிகளை புலம்பெயர் உரிமையாளர்கள் விற்பனை செய்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு இன மத சமுக முரண்பாடுகளும் சமுக அமைதியின்மையும் கூட கடந்தகாலத்தில் தோன்றியுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என கருதுகின்றேன்.

8. தேசத்தில் வளமற்றதும் நீர்ப்பாசன வசதிகளற்றதும் புதர் மண்டிய காடுகளாகவும் காணப்படும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத காணிகள் அதிகளவில் காணப்படும் கிராமங்களுக்கு தங்களது ஆலோசனை எதுவாக இருக்கும்?

உலகத்தில் பயிர் நடமுடியாத நிலம் என்று ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய நிலத்திற்கும் அச்சூழலுக்கும் பொருத்தமான பயிர் எதுவெனக் கண்டுபிடித்து பயிரிடுவதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது. சிறிது முயற்சியும் கூடிய ஈடுபாடும் தேவை. Watch Video

9. இவ்விடயத்தில் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் பாத்திரம் எதுவாக இருக்கும்?

வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் சகல சாத்தியமான வழிகளையும் கண்டறிவதற்காக விரிவானதும் பரந்ததுமான சிந்தனைக்குழாம் ஒன்றினை நட்புரீதியாக கொண்டுள்ளது. அதனூடாக சாத்தியமான வழிகளைக்கண்டறிந்து மக்களுக்கு வழங்கும். எனினும் தற்போதுவரைக்கும் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் செயற்படு மூலதனமும் நிதிவளமும் மிகவும் பலவீனமாகவே உள்ளது. அதனைப் பலப்படுத்தும் வாய்ப்பகள் கிடைக்குமாயின் எமது நடுவம் பல பரிமாணங்களில் தந்திரோபாய தலைமைத்துவத்தை வழங்கும்10. இத்தகைய விடயங்களுக்கு அரசாங்கத்தினது அல்லது வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களது ஆதரவினைப்பெற விரும்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. வடக்கு கிழக்கு மக்களின் மீளெழுச்சி என்பது இதுவரை உலகில் அறியப்படாத ஒரு முன்னுதாரணமாகவே அமையும். ஒரு நாட்டின் ஒரு பகுதிக்குள் முடக்கப்பட்ட ஒடுக்குமுறை, யுத்தம் பொருளாதார தடை, நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்ட நிறுவனரீதியான வன்முறைகள் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாண்மைகொண்ட ஆட்சியாளர்களின் வெற்றிமமதைக்கு கீழ் ஆளப்படும்போது அம்மக்களின் மீளெழுச்சிக்கான திட்டங்கள் என்பது தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கும்கருவிகளாகவே இருக்கும்.
சனநாயக வாக்குப்பலத்தால் ஆட்சிமன்றம் உருவாக்கப்படும்போது அவ்வாட்சியில் எண்ணிக்கையில் சிறுதொகையினரான மக்களும் பங்குபற்றவாய்ப்பு வேண்டுமானால் அவர்களது பேரம்பேசும் பலம் அவர்களது சனத்தொகை எண்ணிக்கைக்கும் அப்பால் மாற்றுத்தளங்களில் கட்டியெழுப்பப்படவேண்டும். அவர்களது அறிவுசார் பொருளாதாரம், முதலீட்டுவளமும், தொழிலாண்மையும், மொத்த தேசிய உற்பத்தியில் அவர்கள் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடு, தொழில்நுட்பம் ஆராய்ச்சி போன்ற துறைகளில் காட்டும் தலைமைத்துவம் என்பன அவர்களது சமுகம் சார்ந்த பேரம்பேசும் திறனை அதிகரிக்கும். அதனால் அவர்களும் அந்த நாட்டின சனநாயக அரசியல்கட்டமைப்பில் சம செல்வாக்கு கொண்ட இனக்குழுமமாக ஏனைய இனங்களுக்கு சமமாக மேலெழமுடியும். இத்தகைய ஆளுமை வலுவூட்டல் முயற்சிகளுக்கு பலரின் உதவிகள் தேவை.

11. குழரய்க்கிணறு சூழலுக்கு பாதுகாப்பானதல்ல என கருதுகின்ற நிலையில் வீட்டுத்தோட்டங்களுக்காக குழாய்க்கிணற்றினை கிண்டிப் பயன்படுத்துவதனை ஆதரிப்பீர்களா?

வீட்டுத்தோட்டம் என்பது உற்பத்தி வர்த்தகம் ஆகியவற்றினை இலக்காக கொண்ட விவசாயத்திலிருந்து வேறுபட்டது. வீட்டின் நாளாந்த பாவனைக்குரிய நீரின் இரண்டாம் நிலைப் பயன்பாடே வீட்டுத்தோட்டத்திற்கான நீராகும். எனவே குறைந்தளவு வீட்டுப்பாவனை நீருடன் வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பது சிறப்பானது. வீட்டிற்கு அண்மையில் உள்ள துரவுகள் திறந்த கிணறுகள் ஆகியவற்றின் நீரினையும் சாத்தியமானவிடத்து சேகரிக்கப்பட்ட மழைநீரினை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

12. உங்கள் வீட்டுத்தோட்ட முன்னெடுப்பகளில் சிறப்பான அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்காக பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மற்றும் ஊரில் வாழும் மூத்தோர்களின் அறிவினையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டா?

ஆம் நிச்சயமாக. இவ் வீட்டுத்தோட்டத் திட்டத்தின் முதன்மை நோக்கம் பேண்தகு தன்மை கொண்ட உணவுப்பாதுகாப்புத்திட்டம். இங்கு பேண்தகு தன்மை என்பது உள்ளுர் இயற்கைச்சூழல் பண்பாடு அறிவும் அனுபவமும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியதே.

13. பழங்கள் மரக்கறிகளுடன் மருத்துவ மூலிகைகளையும் வீட்டுத்தோட்டங்களில் பயிரிட்டால் போசாக்கு சமனிலையான உணவுடன் சிறிது வருமானமும் கிடைக்கலாம். இவ்விடயத்தை எவ்வாறு மக்களுக்கு அறிவூட்டப்போகின்றீர்கள்?

இவ்விடயம் தொடர்பாக இத்துறையில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்டவர்களின் உதவியுடன் ஒரு கைநூல் ஒன்றினைத் தயாரிக்கும் திட்டமும் உண்டு.14. உங்களுடைய குறுங்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் யாது?

பட்டினித்தவிர்ப்பு என்பதிலிருந்து குடும்பங்கள் சார்ந்த உணவுப்பாதுகாப்பு என்ற நிலைக்கு நகருவதே இவ்வீட்டுத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
இதன்தொடர்ச்சியாக உள்ளுரின் விவசாயத்தையும் உற்பத்திகளையும் வலுவூட்டவேண்டியுள்ளது. வடக்கு கிழக்கின் விவசாயிகள் சந்தையின் விலைத்தளம்பல்காளலும் இடைத்தரகர்களின் சுரண்டலினாலும் போதிய களஞ்சியப்படுத்தபபடுத்தல் மற்றும் பதனிடல் வசதிகள் இன்மையாலும் மிகவும் பாதிக்கப்பட்டு களைப்படைந்து விவசாயத்துறையினைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. எனவே வடக்கு கிழக்கு விவசாயத்தினை பெறுமதிசார் விவசாயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ்மக்களின் கல்வியறிவு வீதம் உயர்நிலையில் காணப்படுவதாக அறிக்கைகள்ட குறிப்பிட்டாலும் தமிழ்மக்களின் பொருளாதாரம் அறிவு சார் பொருளாதாரமாக மாற்றம் பெறவில்லை. அதிகளவு வீதத்திலான பட்டதாரிகளும் கற்றோரும் நிரந்தர மாதாந்ந ஊதியம் தரும் இளைப்பாற்றுச்சம்பளத்துடன் கூடிய அரசாங்க உத்தியோகங்களே தங்கள் வாழ்நாள் தஞ்சமாக அடிமைப்பட்டுள்ளனர்.

இவர்களது உழைப்பினால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியோ வருமானமோ அதிகரிக்கப்படப்போவதில்லை. அவர்களது அறிவுக்கு எந்தவித பேரம்பேசல் பெறுமதியும் கிடைக்கப்போவதில்லை.

தமிழ்மக்களின் அறிவுசார் பொருளாதாரத்தையும் தொழிலாண்மையினையும் மூலதனவாக்கத்தினையும் தொழில்நுட்பதுறையின் தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பி நாம் வாழும் தேசத்தின் தவிர்க்கமுடியாத பலமான தந்திரோபாய காரணிகளாக தமிழ்மக்களை கட்டியெழுப்பவேண்டும்.

வெறுமனே கல்வியும் தொழிற்றினனும் கொண்ட உழைக்கும் படையினரில் ஒருவனாகவோ ஒருத்தியாகவோ அல்லது ஒரு குடும்ப அலகாகவோ இல்லாமல் பலமான சமூகத்தின் திரண்ட சக்தியின் ஒரு கூறாகஇலங்கைத் தீவின் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனையும் பலம் பெறச்செய்யவேண்டும்.

15. உங்கள் முன்மொழிவினை நிறைவேற்றும் திட்டங்களில் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் உள்ளுர் வளங்களை பயன்படுத்துவதில் புத்தாக்கத்தையும் காட்டும் பங்காளிகளை பாராட்டி ஊக்குவிப்பதற்கு தங்களிடம் சிறப்பான முன்மொழிவுகள் யாதும் உண்டா?

அத்தகைய சிந்தனை உண்டு. பொருத்தமான ஆலோசனைகளும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.

16. தங்களது குறுங்கால மற்றும் நீண்டகால திட்டங்களில் புலம்பெயர் தமிழ்ச்சமுகம் எத்தகைய பங்களிப்பினைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

புலம்பெயர் தழிழ்ச்சமூகம் முதலில் தனது கடந்தகாலத்தின் வெறுமையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடவேண்டும். குழுநிலைகளும் முரண்பாடுகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எவ்வித பயனும் தரப்போவதில்லை என்ற உண்மையின் அடிப்படையில் தாயகமக்களை தந்திரோபாய அடிப்படையில் வலுவூட்டி கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.
அவர்களது ஆர்வம் அனுபவம் அறிவு ஆற்றல் புலம்பெயர்தேசங்களில் பெற்றுள்ள நன்மதிப்பும் செல்வாக்கும் என பலபரிமாணங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையில் பங்களிக்க முன்வரவேண்டும்.

“We can’t stop the waves: but we can learn to surf.” -Jon Kabat Zinn

நேர்காணல்: சிவதாசன்