வட-கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும் – பிரித்தானியா
முல்லைத்தீவில் மட்டும் சுமார் 17,000 ஏக்கர் நிலம் இராணுவ வசம்
வட-கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட தனியார் நிலங்கள் தொடர்பாகவும் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் விடயம் தொடர்பாகவும் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டுமென ஐ.நா. வின் பிரித்தானிய நிரந்தரப் பிரதிநிதி சைமன் மான்லி கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற 42 ஆவது உலகளாவிய மனித உரிமைகள் மீளாய்வு சந்திப்பின்போது அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
செப்டம்பர் 2020 இல் உண்மை, நீதி , பரிகாரம் மற்றும் மீள் நிகழாமை உத்தரவாதம் ஆகியவற்றுக்கான ஐ.நா.வின் விசேட தூதுவர் பப்லோ டி கிரீவ் வெளியிட்ட அறிக்கையில் போரில் மொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இறந்தோரை நினைவுகூரும் விடயங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மக்களை மீளதிர்ச்சிக்கு உள்ளாக்குவதோடு அவர்களை மேலும் அந்நியப்படுத்தி உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகும் எனத் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு படைகளின் அச்சுறுத்தல் காரணமாக இறந்த உறவினர்களின் படங்களைப் புதைத்து வைக்கவோ அல்லது எரித்துவிடவோ வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்படுவதாக கொல்லப்பட்டோரின் உறவினர் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக இலங்கை அரசு போரில் கொல்லப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூருவதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவேண்டுமென நிரந்தரப் பிரதிநிதி மான்லி கூறியிருக்கிறார்.
வட-கிழக்கில் தொல்லியல் திணைக்களமுட்பட்ட பல அரசாங்க திணைக்களங்கள் தனியார் நிலங்களைப் பலவந்தமாக அபகரிப்பது அவற்றுக்குள் மக்கள் செல்வதைத் தடுப்பது ஆகியவை தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தவேண்டுமெனவும் மான்லி கேட்டுள்ளார்.
மார்ச் 2021 இல் ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையின்படி முல்லைத்தீவில் மட்டும் 16,910 ஏக்கர் தனியார் நிலத்தை இராணுவம் அபகரித்திருக்கிறது. அலம்பில் கிராமத்திலிருந்து 15 கி.மீ. தொடக்கம் கொக்கிளாய் வரைக்கும் இருக்கும் அபகரிக்கப்பட்ட நிலத்தில் 7 முகாம்களை இராணுவம் நிறுவியிருக்கிறது.
இலங்கை இராணுவம் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினால் தமிழரது காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்கள் நீண்ட காலமாகத் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளும் இவ்விடயம் தொடர்பாகத் தமது கண்டனங்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.