Science & Technology

வட்ஸப்பிற்கு அரட்டை வைத்த ஆப்பு?

இதுவரை உலகில் பிரபலமாகவுள்ள அரட்டைத் தளங்களில் வாட்ஸப் முக்கியமானது. எழுத்தில் மட்டுமல்லாது பேச்சிலும் இலவசமாக கட்டற்ற, இலவச தகவற் பரிமாற்றத்தை வழங்கிக்கொண்டிருக்கும் தளங்களில் வட்ஸப் பிரபலமானது. சுமார் 500 மில்லியன் மக்கள் இத்தளத்தைப் பாவித்து வருகிறார்கள். இதற்குப் போட்டியாக இப்போது வந்து குதித்திருக்கிறது தமிழர் ஒருவர் உருவாக்கிய, தமிழில் பெயர் சூட்டப்பட்ட, தமிழகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘அரட்டை’. தமிழின் முதல் எழுத்தாம் ‘அகரத்தை’க் குறியீடாகக் கொண்டு உலவ வந்திருக்கும் இத்தளம் உலகத் தமிழர்கள் மத்தியில் சூறாவளியாகப் பரவி வருகிறது.

தமிழ் நாட்டின் தென் காசியைச் சேர்ந்த முனைவர் சிறீதர் வேம்பு அவர்களின் நிறுவனமான ‘ஸோஹோ’ (ZOHO) தமிழ்நாட்டின் கிராமத்து இளம் தொழில்நுட்ப மூளைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட இத்தளம் இந்தியாவின் தேசியத் தீயிற்கு மீண்டும் எண்ணை ஊற்றியிருக்கிறது.


2021 இல் ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாது தலையை நீட்டிய இத் தளம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. அமெரிக்க நாட்டாண்மை ட்றம்ப் இறக்குமதித் தீர்வை என்ற போர்வையில் தனது இனவெறியைக் காட்டியதுமல்லாது இனச்சுத்திகரிப்பு என்னும் பெயரில் இந்தியரையும் இந்தியாவையும் அவமதித்த காரணத்தால் எழுந்த இந்திய தேசிய (தொழில்நுட்பப்) போராட்டம் காட்டுத் தீ போல் பரவி வருவது ஆச்சரியமான ஒரு விடயமல்ல. “இந்தியா இனிமேல் வெளிநாடுகளின் தயவில் வாழப் போவதில்லை” என்ற ஒரு வெறித் தீயை ட்றம்ப் போன்றோர் பற்றவைத்து விட்டதன் விளைவு ஸோஹோ போன்ற பல இந்திய நிறுவனங்களின் படைப்புகளுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு. அது மட்டுமல்லாது ட்றம்பினால் மிக மோசமாக அவமதிக்கப்பட்ட இந்தியப் பிரதமர் மோடியின் அறைகூவலான “Make in India and Spend in India” டாக்டர் சிறீதர் போன்ற இந்திய தேசியவாதிகளை மேலும் உசுப்பேற்றி விட்டிருக்கிறது.

இதன் விளைவாக ‘அரட்டையின்’ பாவனை திடீரென்று அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இச்செயலியின் தரவிறக்கம் 10,000 த்தைத் தாண்டியிருக்கிறது. நாளொன்றுக்கு 3,000 தரவிறக்கம் என்ற நிலையிலிருந்து கடந்த சில நாட்களில் மட்டும் நாளொன்றுக்கு 350,000 த்தைத் தாண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மெற்றா நிறுவனத்தின் வட்ஸப் தளத்தின் பாவனையாளரின் எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க முடியாவிட்டாலும் இந்தியாவின் சனத்தொகை இச்சாதனையை விரைவில் முறியடித்துவிடுமென நம்பலாம்.

வட்ஸப் போன்ற இலவச தளங்கள் பாவனையாளரின் ஆசைகள், அபிலாட்சைகள் மற்றும் வாழ்வியல் போன்ற விடயங்களைத் திருடி இதர வணிக நிறுவனங்களுக்கு விற்பதாலேயே தமது வருமானத்தை ஈட்டுகின்றன, ‘அரட்டை’த் தளம் இப்படியான திருட்டு வேலைகளைச் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. இது உண்மையானால் ‘அரட்டை’யின் செல்வாக்கு இந்திய எல்லைகளையும் தாண்டி உலகின் பல மூலைகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாது வட்ஸப்பைப் போலல்லாது பழைய வீச்செல்லை குறந்த ஃபோன்களிலும், இணையத் தொடர்பு பலவீனமான இடங்களிலும் ‘அரட்டை’ பெரிதாகப் பிகு பண்ணாது வேலை செய்கிறது எனப்படுகிறது.

இதே வேளை கூகிள் போன்ற உலவு தளங்களும் பாவனையாளர்களின் பிரத்தியேக தகவல்களை உருவியெடுத்து வெளியாருக்கு விற்றுப் பிழைக்கின்றன. கூகிள் உலவு தளத்தின் முதன்மை நிர்வாகியும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்ற தமிழ்ர் தான். இப்போது அவருக்குப் போட்டியாக சிறீதரின் ஸோஹோ இன்னுமொரு உலாவியையும் சந்தையில் உலவ விட்டிருக்கிறார்கள். அதன் பெயரும் ‘உலா’ என்ற சுத்த தமிழாக இருப்பது மகிழ்வைத் தருகிறது.

2020 இல் சீனத் தயாரிப்பான Tik Tok ஐ இந்தியா தடை செய்தபோது சில இந்திய நிறுவனங்கள் X (ருவிட்டர்), Tik Tok போன்ற தளங்களுக்கு நிகராக Koo மற்றும் Moj போன்ற மாற்றுத் தளங்களை உருவாக்கியிருந்தாலும் அவை பிரபலமாகவில்லை. ஆனால் ஸோஹோவின் ‘அரட்டை’ பல நிபுணர்களால் சிலாகிக்கப்பட்டிருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் மெற்றா போன்ற அதி பணக்கார, பணக்கார வர்க்கத்தினதும், அதிகார வர்க்கத்தினதும் ஆதரவுள்ள நிறுவனங்களின் மத்தியில் சட்டம் , ஒழுங்குகளை மதிக்காத அரசுகள் மத்தியில் ‘அரட்டை’ எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பது இந்தியர்களிலும், தமிழர்களிலும் மட்டுமே தங்கியிருக்கிறது.

இத்தனைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் சிறீதர் வேம்பு அமெரிக்காவில் தனது கல்வியைக் கற்றுவிட்டு தன் கிராமத்திற்கே மீண்டு அங்கு மிகவும் எளிமையான கிராமிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது. தமிழின் மீதும் தமிழ்க் கிராமிய கலாச்சாரத்தின் மீதும் அதீத பற்றுக்கொண்ட டாக்டர் சிறீதருக்கு பணத்திலும் புகழிலும் அதிக ஆசையில்லை. தான் வளர்ந்த கிராமத்தின் வசதி குறைந்த பிள்ளைகளின் கல்வியிலும் எதிர்காலத்திலுமே அவரது குறி. இதனால் ‘அரட்டையையும்’, ‘உலா’ வையும் தூக்கி உச்ச்சத்தில் வைப்பது தமிழரிலும், இந்தியாவிலும் மட்டுமே தங்கியிருக்கிறது.