சிரி லங்கா (12): ‘ஆதார் கார்ட்டுக்கு’ தயாராகும் யாழ்ப்பாணம்
கிசு கிசு கிருஷ்ணானந்தா
“புத்தாண்டு வாழ்த்துக்கள் கிருசு”
பரிச்சயமான குரலாகவிருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தால் வடிவேலர் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார். பாவம் முன் சில்லுக் காற்றுப் போயிருந்ததது.
“என்ன அண்ணே புது வருசமும் அதுகுமா சகுனம் சரியில்லைப் போல”
“இவங்கள் பெடியள்..தெரியாதா”
“நீங்களும் தேவையில்லாமல் யாழ்ப்பாணத்து அரசியலை எடுத்தியம்பியிருப்பீங்கள். நல்ல காலம் இயக்க காலம் எண்டா கம்பத்தில தூங்கியிருப்பீங்க. இப்ப வால்வுக் கட்டையோட நிண்டிட்டுது”.
வடிவேலர் நெளிந்தார்.
“அப்பிடி நானொண்டும் சொல்லேல்ல. மேயர் போட்டிக்கு மூண்டு பேர் இப்பவே போட்டிக்குத் தயாராம். நான் ஆரைப்பத்தியும் குறைவாகச் சொன்னதா ஞாபகம் இல்ல”
“அடி வாங்கியிருந்தா ஞாபகம் இருந்திருக்கும். பாத்தீங்களா. இதுதான் பிரச்சினை. இப்ப இது ‘ஜனநாயக இயக்கங்களின்’ காலம். துவக்குகள் கைகளில இல்லையே தவிர மிச்சம் எல்லாம் அப்பிடியேதான் இருக்கு. இதை விளங்கி ஒண்டில் நீன்க வாயைப் பொத்திக்கொண்டு போகவேணும். அல்லது பலமான பக்கத்தின்ர பொறுப்பாளர் மாதிரி உரத்துப் பேசிப்போட்டு வெளிக்கிட்டிட வேணும். விளங்குதோ?
அதுக்கு மேல பேசினால் வடிவேலர் அழுதுவிடுவார் போல் இருந்தது.
“ஓமடா கிருசு. ஆனா எனக்கென்ன தெரியும் இப்பத்தான் வித்தி வெளிக்கிட்டிருக்கு. மணிவண்ணன் விக்கியரோட மாரடிச்சுக்கொண்டு திரியுது. ஆணோல்ட் இறங்கிட்டுது. ஆனா ஒருவரும் பகிரங்கமா அறிவிக்கேல்ல. எல்லாரும் முணுமுணுக்கினம். யாருக்கெண்டு நான் கதைக்கிறது?”
“சரிதான் அண்ணே. நீங்க இப்போதைக்கு ‘ஸ்டாண்ட்’ எடுக்கவேணாம். இன்னும் எத்தினை பேர் அறிவிக்கப் போகினமோ தெரியாது. கொஞ்சம் வாயைப் பொத்திக்கொண்டு இருங்கோ”
“என்ன செய்யிறது உன்னையும் கனநாளாச் சந்திக்கேல்ல. கொழும்பு அரசியலைக் கதைக்கிறதுக்கும் வேற ஆள் அம்பிடுகுதில்லை. அது சரி ரணிலுக்கு சனங்கள் அந்தமாதிரி அலுப்புக்குடுத்துவிட்டுதுகள்”
“உண்மைதான் வடிவேலர். ஆனா அந்தாளும் என்ன செய்யிறது? கூட்டமைப்புக்காறர் மாதிரி அந்தாளுக்கும் இரண்டு பக்கமும் அடி. அவரும் கூட்டமைப்பு மாதிரி ரெண்டு பக்கமும் படம் காட்டவேண்டிய நிலை தான். “13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்” எண்டு அந்தாள் ‘பொங்கல் வாழ்த்துச்’ சொல்லிப்போட்டு கொழும்பு போய்ச் சேர்கிறதுக்கு முன்னமே வீரவன்ச கோஷ்டி அலறத் துடங்கிவிட்டுது, பாத்தீங்களா?”
“ஓம் பாத்தனான். கெமுனு குமாரதுங்க, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர பாம்புகள் “விக்கிரமசிங்கவுக்கு அதைச் சொல்லிறதுக்கு அருகதையில்லை. அப்பிடி வேணுமெண்டா ஜனாதிபதி எலக்சனில நிண்டு வெண்டு போட்டுச் சொல்லவேணும்” எண்டு சொல்லியிருக்கிறாங்கள்””
“அது மட்டுமில்லை. “பயங்கரவாதிகளை ஆதரிச்ச கூட்டமைப்புக்கு எப்பிடி ஜனாதிபதி வாக்குறுதி குடுக்க ஏலும்” எண்ட மாதிரி வீரவன்ச கேட்டிருக்கிறார். இதில இருந்து ஒண்டு விளங்குது. ரணிலை ‘டம்ப்’ பண்ணிறதுக்கு ராஜபக்சக்கள் தயாராகினம். அவங்களின்ர ஊதுகுழல்களைப் பாவிச்சு கொஞ்சம் கொஞ்சமா சனத்தைத் திருப்பப் பாக்கிறாங்கள். வேணுமெண்டா இருந்து பாருங்க வடிவேலர், 13 A யையும் ரணிலையும் காட்டி இன்னும் கொஞ்ச நாட்களில உடைஞ்ச SLPP ஒண்டு சேர்ந்துவிடும். கம்மன்பில கோஷ்டியும் சேர்ந்து ஊளையிடத் தொடங்கிவிடும். அதைப் பாத்திட்டு ஜே.வி.பி., சரத் ஃபொன்சேகா, மைத்திரி எண்டு எல்லாரும் ‘புது அரசியலமைப்பு வேணும்’ எண்டு கத்திக்கொண்டு வருவினம். ரணில் பேசாம வாயை மூடிக்கொண்டுவிடும். ரணில் அடங்க கூட்டமைப்புக்குக்கும் வேற வழியில்லாம “இதைத் தானே நாங்க அப்ப இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்” எண்ட பொன்னம்பலம் கோஷ்டியின்ர திட்டுக்களை வாங்கிக்கொண்டு முக்காடுகளைப் போட்டுக்கொண்டு திரிவினம், பாருங்கோ”
“ராசா உனக்கு உடம்பெல்லாம் மூளை” வடிவேலர் சிரித்தார். “அப்ப இந்த உள்ளூராட்சித் தேர்தல்களில இவை எல்லாரும் என்ன செய்யப் போகினம்? வடிவேலர் கேட்டார்.
“அண்ணை, ரணிலும் லேசுப்பட்ட ஆளில்ல. ஒரு குள்ள நரி. உள்ளூராட்சித் தேர்தல்கள் பெப்ரவரியில நடத்தப்படவேணுமெண்டு சட்டம். ஆனால் அதை நடத்தினா அது ரணிலின்ர ஆட்சியைப் பத்தின கருத்துக் கணிப்பாகவே இருக்கும். பொருளாதாரம் இன்னும் சீராகவில்லை எண்ட படியால எதிர்க்கட்சிகளுக்கும் உடைஞ்ச SLPP க்கும் வாக்குகள் பிரியும். அதை ரணில் விரும்பமாட்டார். அதனால தேர்தல்களை அந்தாள் பின்னுக்குப் போடுமெண்டுதான் நான் நினைக்கிறன். இப்ப இருக்கிற பொருளாதாரப் பிரச்சினைதான் அந்தாளின்ர பலம். அதை நிமித்தி எடுக்காதவரை அந்தாள் மக்களிட்ட போகாது. IMF காசு குடுக்காதவரை அது நடக்காது. சீனாவின்ர கடனை restructure பண்ணாம அதுவும் நடக்கப்போறதில்ல்லை. சிங்கள மக்கள் பொங்கியெழ வேண்டுமெண்டுதான் ராஜபக்சக்கள் விரும்புவினம். அதை ரணில் விடாது. அந்தாளுக்கு இன்னும் 2 வருசம் இருக்குது. அது மட்டுக்கும் வச்சு இழுத்தடிக்கும் எண்டுதான் நான் நினைக்கிறன்”
“அப்ப இந்தியா என்ன செய்யுமெண்டு நினைக்கிற?”
“இந்தியாவுக்கு ரணில் இருக்கிறதுதான் விருப்பம். தன்னுடைய கடனை restructure பண்ணிறத்துக்குத் தயார் என அது ஏற்கெனவே அறிவித்து விட்டுது. இப்ப அது நல்ல பிள்ளை. அதே வேளை கொஞ்சம் கொஞ்சமா வடக்கிலை தன்ர ஈடுபாட்டை விருத்திசெய்ய அது முயற்சி செய்யும். பலாலி, காங்கேசந்துறை, மன்னார் ஆகிய இடங்களில அதுக்குக் கண்ணிருக்கு. இலங்கை திரும்பவும் ராஜபக்சக்கள் கையில போகுமெண்டா வடக்கை அபகரிக்க அது முயலலாம். அதுக்குப் பிறகு சேதுசமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களைப் பிச்சை எடுக்க வைக்கலாம். இதுதான் என்ர கணிப்பு”
“அப்ப நான் இப்பவே ‘ஆதார்க் கார்ட்டுக்கு’ அப்பிளை பண்ணவோ” கேட்டுக்கொண்டே வடிவேலர் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார்.