Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (9): ராசபக்சக்களின் பாசப் பிரிவினை

கிசு கிசு கிருஷ்ணாநந்தா

யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் ஓரம் இன்று கிட்டத்தட்ட வெறுமையெண்டு சொல்லல்லாம். இளசுகள் மோடார்சைக்கிள்களுக்குப் பெற்றோல் இல்லாமையால் வராமல் விட்டிருக்கலாம். ஆனால் வடிவேலர் மட்டும் சொன்ன நேரத்தில் சைக்கிளில் வந்திறங்கினார். எனக்கு ஷொக் ஆகிப் போய்விட்டது. முகத்தைச் சுற்றி ‘பண்டேஜ்’ .

“என்ன வடிவேலர், என்ன நடந்தது?”

“எல்லாம் இந்த அறுவாங்கள். நேற்று ஒரு பெற்றோள் ஸ்டேசனடியால போகேக்க ரெண்டு பெடியள் சண்டை பிடிச்சுக்கொண்டு நிண்டாங்கள். விலக்குப் பிடிக்கப் போய்ப் பார் என்ன நடந்திருக்குதெண்டு. இதுக்குத் தான் இயக்கம் வேணுமெண்டிறது”

“ம்..அது இருக்கேக்க துலைவாங்கள் எண்டு திட்டிறது, இல்லையேண்டா வேணுமெண்டிறது”

வடிவேலருக்கு சுட்டிருக்க வேணும். அல்லது பண்டேஜுக்குப் பின்னால் வலி அதிகமாகவிருந்திருக்க வேணும். கொஞ்சம் கடுப்பாகிப் போனார்.

“ஓம், ஓம். இன்னும் கொஞ்ச நாளில சிங்களவனே தலைவரை வைச்சுக் கும்பிடப் போறான் பார். யார் நினைச்சது கோதாகோகமவில முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் குடுப்பாங்கள் எண்டு?. எல்லாம் காலம் தான்”

“இஞ்ச பாருங்கோ வடிவேலர். கோதாகோகம பெடியள் எண்டாலும்சரி, அரசியல்வாதிகள் எண்டாலும்சரி எல்லாரும் கம்பியில நடந்துகொண்டிருக்கினம். ஆரு முதல்ல விழப் போகினமெண்டு தெரியாது. ராச்பக்சக்க சகோதரருக்குள்ள படு மோசமான சணடையாம். ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தப் பாக்கிறாங்களாம். இதுக்குக் காரணம் நம்ம நரியார் ரணி எண்டும் சொல்லுகினம்”

“எதை வச்சு அப்பிடிச் சொல்லிற”

“கோதா ஜனாதிபதியாகிற வரைக்கும் ராசபக்ச ராச்சியத்துக்கு மஹிந்த தான் சக்கரவர்த்தி. அவர் வைச்சதுதான் சட்டம். அவரின்ர நிழலுக்குள்ள ஒதுங்கினவனெல்லாம் பணக்காரராகிவிட்டாங்கள். 2019 இல கோதா ஜனாதிபதியாகினவுடனே சக்கரவர்த்தியின்ர பொட்டுக்கேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. கோதாவின்ர ஆலோசகர்கள் கோதாவுக்கு எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைத்தனர். இதனால கோதா முதல் செய்தது 20 ஆவதைக் கையிலெடுத்து மஹிந்தாவிட்டயிருந்து அதிகாரத்தைப் பறிச்சது. அதில இருந்து ஆரம்பிச்சது சகோதரப் பிரச்சினை”

“விளங்குது. ஆனா நாட்டின்ர பொருளாதாரப் பிரச்சினைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“நாட்டின்ர பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று வரியைக் குறைச்சது. இதனால கஜானா வத்தியது. சம்பளம் குடுக்கக் காசில்ல. பணத்தை அச்சடிச்சாங்கள். பணவீக்கம் அதிகரிச்சுது. இறக்குமதிகளைப் பதுக்கினாங்கள். சனம் றோட்டுக்கு வந்துது. இத்தனையையும் செய்தது மஹிந்தவின்ர ஆக்கள். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியான கோதாவாலயே இதைக் கட்டுப்படுத்த முடியேல்ல. காரணம் அவரின்ர எதிரி அண்ணன் மஹிந்த. தம்பியைப் பழிவாங்கத்தான் இதைச் செய்தாரோ எண்டு இப்ப சந்தேகமாக இருக்கு”

“அப்ப இந்த செயற்கை உரம் இறக்குமதிக் கட்டுப்பாடு எல்லாம் கோதாவின்ர தானே?”

“அதனால வந்த விளைவு இரண்டு. ஒன்று தேயிலை உற்பத்தி 50% மாகக் குறைந்தது. அடுத்தது நெல் விளைச்சல். அதன் பாதிப்பு இனிமேல்தான். இப்போது மக்களின் பிரச்சினை சமையல் வாயுவும், பெற்றோலும், பால் மாவும். இது நகரமக்களைத்தான் பாதிக்குது. அவைதான் இப்ப லைனில நிக்கினம். இதுக்கு முற்றிலும் காரணம் மஹிந்தவின்ர ஆக்கள். லிற்றோ காஸ் சேர்மன் மஹிந்தவின்ர ஆள். பெற்றோலியம் கோர்ப்பொறேசன் மஹிந்தவின்ர ஆள். கோதா என்ன செய்யிறது. ‘என்னட்ட அதிகாரம் இல்லை. எல்லாத்தையும் தம்பி பறிச்சுப் போட்டான்’ என மஹிந்த கையை விரிச்சிட்டுது. மாட்டினது கோதா தான்”

“அப்ப, அடுத்து வரப்போற உணவுப் பஞ்சத்தோட கோதாவும் அவுட் எண்டு சொல்லிற?”

“இதுக்காகத்தான் கோதா மஹிந்தவை றிசைன் பண்ணச்சொல்லி எத்தனையோ நாளாக் கேட்டுக்கொண்டு வந்தது. ஆனாலும் மஹிந்த முரண்பட்டுக்கொண்டு நிண்டது. அவரால பிரயோசனம் எடுத்த அத்தனை ஊழல் பேர்வழியளும் அரசியல்வாதியளும் அவருக்குப் பின்னாலதான் நிண்டவை. அவையள நம்பித்தான் மே 9ம் திகதி அலரி மாளிகையில மஹிந்த தனது புரட்சிப் போரை அறிவிச்சவர். அது மிஸ்ஃபையராகப் போயிட்டுது. கிட்டத்தட்ட அது மஹிந்த தன்னைத் தானே சுட்டுக்கொண்டது போலத்தான்”

“சரி மஹிந்தவிர ஆட்களை பேரா ஏரிக்குள்ள முக்கி எடுத்தது ஆர் எண்டு நினைக்கிற?”

“அது முன்னிலை சோசலிசக் கட்சிப் பெடியள் (FLSP) எண்டு நினைக்கிறன். யூனிவேர்சிட்டிப் பெடியளும் அவ்ங்களின்ர கட்டுப்பாட்டில இருக்கிறதாகத் தான் நான் கேள்விப்படுகிறன்”

“அப்ப அவங்கள் ஜே.வி.பி. இல்லையா?”
“ஜே.வி.பி. யில இருந்து பிரிஞ்சவங்கள் தான் இந்த FLSP. கொஞ்சம் ஹார்ட்லைன் ஆக்கள். கோதாகோகம அமைப்பளரும் இவங்கள் தான்”

“இவங்கள் தானா எம்.பி. மாரின்ர வீடுகளை எரிச்சதும்?”

“அதில எனக்குச் சந்தேகம். மே 09 சம்பவம் சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட முறையில நடந்தது. பாருங்க வடிவேலர், ஒரு நாளைக்குள்ள 50 எம்.பி.க்களின்ர வீடுகள் எரிக்கப்பட்டிருக்கு. இந்த 50 பேரின்ர வீடுகளிலையும் ஒருவரும் இருக்கேல்ல. அவை ஒண்டுக்கும் பாதுகாப்பு வழஙகப்படேல்ல. ஆனா, இதுதான் உங்கட தலையைச் சுத்தப் போகுது; அந்த 50 எம்.பி.க்களும் மஹிந்தவின்ர ஆதரவாளர். இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“எட கிருசு, நீ சீ.ஐ.ஏ. க்கு வேலை செய்ய வேண்டிய ஆளடா. அதுதானே பாத்தன் ஏன் இந்த நாமல் குட்டி ‘நட்ட ஈடு’ பத்திக் குலைச்சுக்கொண்டு நிக்குதெண்டு. அதுசரி ஏன் ஆமிக்காரர் இதத் தடுத்து நிறுத்தேல்ல எண்டு நினைக்கிற?”

“உங்களுக்குத் தெரியுமோ தெரியேல்ல, இரண்டு நாளைக்கு முதல்ல மஹிந்தவின்ர மச்சான் உதயங்கா வீரதுங்க எண்டவர் “கோதா வேண்டுமெண்டே ராசபக்ச குடும்பத்தைக் கைய விட்டிட்டேர். ஆமியை அனுப்பாம வேண்டுமெண்டே டிலே பண்ணிப் போட்டார்” எண்டு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அத்தோட மஹிந்த 2015 இலேயே ஓய்வெடுத்திருக்கவேணும் என அண்ணன் சமால் சொல்லியிருக்கிறார். ராசபக்ச குடும்பத்துக்குள்ள குத்துவெட்டு ஆரம்பிச்சிட்டுது”

“ஓ…ஐ.சீ. இப்ப விளங்குது. இஞ்ச தான் ரணில் வாறார்”

“மே 9 ஓட, மஹிந்தவிட்ட இருந்த வடையக் கோதா பறிச்சுப் போட்டார். அதுவரை வளைஞ்சுகொண்டு வீணி வடிச்சுக்கொண்டு திரிஞ்ச நரி ரணில் ‘இலங்கைத் தேசியம்’ எண்ட சட்டையைப் போட்டுக்கொண்டு கோதாவை நெருங்கி ஆசைவார்த்தை சொல்லி வடையைப் பறிச்சுப் போட்டுது. உண்மையில பறிச்சதெண்டதை விட, கோதாவுக்கும் வேற வழியில்ல. அதுக்கு வடையின்ர ரேஸ்ட்டும் தெரியாது. சாப்பிடவும் தெரியாது. நண்பன் ரணிலுக்குக் கொடுத்துவிட்டுது எண்டுதான் சொல்ல வேணும்”

“இனி என்ன நடக்கப் போகுது?”

“இப்ப நடக்கிறது களை பிடுங்கலும், நாற்று நடுகிறதும். இந்த விசயத்தில நரி படு சுட்டி. அது ஒரு கல்லில பல மாங்காய்களை உடைக்கக்கூடினது. சேர்ச்சில் மாதிரிப் பிரித்தாளும் தந்திரம் அந்தாளிட்ட நிரம்ப இருக்கு. பாத்தீங்களா எப்படி சஜித்தின்ர கட்சியை உடைச்சுதெண்டு?”

“தெரியாமத்தான் கேக்கிறன். ஏன் மஹிந்தவுக்குப் பின்னால இவ்வளவு எம்பிமார் நிக்கினம். அவையளை கோதா ஏன் தன்ரபக்கம் எடுக்க ஏலாமல் இருக்கு?”

“காசு அடிக்க வேணுமெண்டா ஒரே ஆள் மஹிந்ததான். சுனாமிக்கெண்டு வந்த காசு, றோட்டுப் போட்ட காசு, ஏயர்போர்ட், தாமரைக் கோபுரம், சங்கிரிலா எண்டு எல்லாவத்திலும் அந்தாள் பங்கு போட்டுக்கொண்டது. இப்ப வந்த புதுப் பெடியள் கொஞ்சம் சவுண்ட் விட்டுக்கொண்டு நிக்கினம். பழைய பெருச்சாளிகளுக்குத் தெரியும் மஹிந்தவை விட்டால் தாங்க அவுட் எண்டு. அவங்களை உடைச்சு எடுக்க கோதாவுக்குத் தெரியாது. அதைச்செய்யக்கூடிய ஒரே ஒரு ஆள் ரணில் தான்”

“அப்ப, கோதாகோகமவையும் ரணில் உடைக்குமெண்டு நினைக்கிறியோ?”

“அதுதான் சொன்னனே இரண்டு பகுதியும் வயரில நடக்கினம். ஆர் முதல்ல விழப்போகினம் எண்டு ஒருவரையொருவர் பாத்துக்க்கொண்டிருக்கினம். சனம் எங்க சாயுதோ அந்தப்பக்கத்துக்குத்தான் வெற்றி. அடுத்த மூண்டு மாசத்துக்குச் சரியான கஷ்டமாக இருக்கப் போகிறது எண்டு ரணில் இப்பவே ஓதத் துடங்கி விட்டார். சாத்திரி ஒருவர் சொன்ன கதையைப் போலத்தான் இதுவும் முடியப் போகுது”

“அது என்ன கதை? எனக்கும் சொல்லன் கிருசு”

“ஒருவர் தனக்கு ஒரே கஷ்டம் எண்டு சொல்லி ஒரு சாத்திரியிடம் சாதகம் பார்க்கப் போனாராம். சாத்திரியும் சாதகத்தைப் பாத்திட்டு “அடுத்த ஆறு மாசமும் உன்னைப் போட்டி வாட்டி எடுக்கப் போகுது” எண்டு சொன்னாராம். “அதுக்குப் பிறகு உச்சமோ?” எண்டு வந்தவர் கேட்கச் சாத்திரி சொல்லிச்சுதாம் “அதுக்குப் பிறகு உனக்குக் கஷ்டம் பழகிப் போகும்” எண்டு. அப்பிடித்தான் ரணிலும் சொல்லப் போகுது”

வடிவேலரால் சிரிக்க முடியாமல் அவரது பண்டேஜ் இறுக்கிப்பிடித்திருந்தது. அவர் அதற்குப் பழகிப்போவதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கலாம். கைகளால் சைகை காட்டினார்.

“சொறியண்ணை, நான் உங்கட முகத்தை யோசிக்கேல்ல”. சமாளித்தேன்.

“சரி, அப்ப இதில யார் வெல்லுவினமெண்டு நீ நினைக்கிற?”

“எல்லாம் இந்தியாவில தான் தங்கியிருக்கு. இலங்கையில மகாபோகம் விளைச்சல் 50% மாகக் குறைந்து, இந்தியாவிலும் வரட்சியால பஞ்சம் வருமெண்டாப் பெடியளுக்கு வெற்றி. அல்லாவிட்டால் சாத்திரி ரணிலுக்கு வெற்றி. சனம் பழகிப்போகும்”

“இந்தியா இப்பவே 6 பில்லியனுக்கு மேல குடுத்துப் போட்டுது. இவங்கள் அதைத் திருப்பிக் குடுப்பாங்கள் எண்டு என்ன உத்தரவாதம்?

“அவங்கள் அதைத் திருப்பக் குடுக்கக்கூடாது எண்டதுதானே இந்தியாவின்ர விருப்பமும். அப்பத் தானே ‘காணியை அமுக்கலாம்”

வடிவேலர் சிரிக்க ட்றை பண்ணுவதுபோலத் தெரிந்தது.