Columnsகிருஷ்ணானந்தா

வடிவேலர் உலா | வீரவன்ச கொழுத்திய வெடி

கிருஷ்ணாநந்தா

விறாந்தையில் இருந்து சிகரட்டை ஆழ உள்ளிழுத்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது கேட்டைத் திறந்துகொண்டு வடிவேலர் உள்ளே சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார். கையில் ஒரு பிளாஸ்டிக் பையில் மீன் வால் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.

“என்ன வடிவேலர் இண்டைக்கு வீட்டில நல்ல சமையல் போல”

“எட கிருசு. அது உனக்கடா. ஞாபகமிருக்கே அண்டைக்கு மீன் சந்தையில மீன்காரிக்கு நீ ஒரு சுகாதார இன்ஸ்பெக்டர் எண்டு ஒரு விடுகை விட்டன்? அவ இப்ப உன்னில நல்ல விருப்பமா இருக்கிறா. இதை உன்னிட்ட குடுத்துவிடச் சொல்லித் தந்தவா” வடிவேலரின் வழமையான நெளிவு இருக்கவில்லை. ஏதோ சமூக சேவை ஒன்றைச் செய்து முடித்துவிட்டதுபோல அரசியல்வாதிகளின் எடுப்போடு நின்றார்.

“அண்ண, உங்கட்டை இருக்கிற இந்த சுத்துமாத்துத் திறமைக்கு நீங்க ராஜபக்சக்களோட நிக்கவேண்டிய ஆள். அங்க போனா.அட் லீஸ்ட், வீரவன்சவுக்காவது குடை பிடிக்கலாம்”

வடிவேலர் சிரித்தார். உள்ளூரப் பெருமைப்பட்டிருக்கலாம் போல இருந்தது.

“எட கிருசு, நல்ல காலம் நீ ஞாபகப்படுத்தினது. அதுசரி இவன் வீரவன்ச என்ன புது வெடியொண்டைக் கொழுத்திப் போட்டிருக்கிறான்? யாழ்ப்பாணத்துப் பேப்பர்கள் ஏற்கெனவே தலை, கால்களை ஒட்டிக் காலை, மதியம், பின்னேரம் எண்டு பதிப்புகள் விடுகினம். கொஞ்சம் விளக்கமாச் சொல்லு”

“அண்ணை உவனைத் தெரியும்தானே. அவன் ராஜபக்சக்களின்ர ஊதுகுழல். அவங்கள் சொல்லவேண்டியதைத் தான் அவன் சொல்லுறான். ராஜபக்சக்கள் திரும்பவும் ஆட்சிக்கு வருகிறதுக்கு ரெண்டு விசயங்களைக் கையில எடுப்பாங்கள். ஒண்டு தமிழருக்கு எதிரான பிரசாரம். மற்றது இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரம். கொஞ்ச் நாளா பசிலர் தலைதூக்கியிருக்கேக்க இவனும் இவன்ர திருகுதாளக் கோஷ்டியும் ஓரம் கட்டப்பட்டிருந்தவை. ஏனெண்டா அவர் அமெரிக்கன்ர ஆள். இப்ப அவரை ஓரம்கட்டிப்போட்டு நாமல் குஞ்சு வெளிக்கிடுகுது. மஹிந்தவின்ர மனிசி தன்ர பிள்ளையளிட்டத்தான் ஆட்சி போகவேணுமெண்டு தலை கீழாய் நிக்குது. அதுக்கான திட்டத்தின்ர முதல் நடவடிக்கை தான் வீரவன்சவின்ர இந்த வெடி”

“கேள்விப்படுகிற மாதிரியப் பாத்தா இந்த வெயில பலருக்குக் காதுகள் கிழிஞ்சிட்டுது போல””

“ஓம். வீரவன்ச கிட்டடியில எழுதி வெளியிட்ட புத்தகமொண்டில கனக்க கிசு கிசுக்கள் அடங்கியிருக்கு. ஒண்டு: இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து கோதாபயவையும் விக்கிரமசிங்கவையும், கொஞ்ச இராணுவத் தலைவர்களையும் கொலைசெய்யச் சதி செய்தவையாம். அதைவிட கோதா மாலைதீவுக்கு ஒளிச்சு ஓடினபோது இந்த சதிகாரரின்ர ஏற்பாட்டில ரெண்டு கடிதங்கள் கோதாவுக்கு அனுப்பப்பட்டதாம். அதில ஒண்டு கோதா பதவி துறக்கும் கடிதம். மற்றது ரணிலைப் பதவி நீக்கிற கடிதம். ரணிலைப் பதவியில இருத்தினது கோதா எண்டதால அவர் இரண்டாவது கடிதத்தில கையெழுத்து வைக்கேல்லயாம். இந்த் சதி வேலையளுக்குப் பின்னால அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங் இருந்தவர் எண்டு வீரவன்ச அந்தப் புத்தகத்தில எழுதியிருக்குது”

“அந்த விசயத்தில பெடியன் பொய் சொல்லேல்லை எண்டுதான் நினைக்கிறன். நெருப்பில்லாமல் புகையாது. ஞாபகமிருக்கே அரகாலயா காலத்தில அந்த மனிசி இலங்கை முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து உள்ள கோமாளியள், கொலைகாரர் எல்லோரோடையும் ஒட்டி நிண்டு படமெடுத்துப் போட்டது. அப்ப எனக்குத் தெரியும் கனடாக் கமராக் காரர் ஒருவரும் இஞ்ச வரேல்ல” வடிவேலரின் நக்கல் உச்சத்துக்குப் போனது.

” அரகாலயாவுக்குப் பின்னால அமெரிக்கா இருந்தது எண்டு எல்லாருக்கும் தெரியும். வீரவன்ச சொல்லிறதைப் பாத்தா அந்தாள் பொய் சொல்லேல்லைப் போலத்தான் தெரியுது. இன்னுமொண்டை அந்தாள் சொல்லியிருக்கு. இலங்கையின்ர அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் தான் அப்போதைய பிரதமரை அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக நியமிச்சிருக்க வேணும் எண்டும் அதுக்காக அமெரிக்க தூதுவர் சபாநாயகரைப் போய்ச் சந்தித்திருக்குகிறா எண்டும் அத்தோடு ஜே.வி.பி. தலைவர்களைச் சந்திச்சு அவர்களைப் புகழ்ந்து அவர் அறிக்கை விட்டிருந்தார் எண்டும் அப்ப செய்திகள் வந்தது. இது தான் இப்ப விமல் வீரவன்ச முன்வைக்கிற அமெரிக்க சதிக்கு முண்டுகொடுத்து நிக்குது. இத்தனைக்கும் விமலின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகரும், அமெரிக்க தூதுவரும் இன்னும் மறுப்பறிக்கை விடேல்ல எண்டுறது புகையில்ல மடியில நெருப்புத்தான் இருக்கெண்டு சனம் நம்பப்போகுது. இந்தியாவுக்கு இந்தச் சதியில பங்கிருக்கோ என்னவோ அவையளை இதுக்குள்ள இழுத்தாத்தான் சீனா சந்தோசப்பட்டு உதவிக்கு வருமெண்டு ராஜபக்சக்கள் திட்டம் போடலாம்”

“அப்ப கோதாவைக் கொலை செய்யிற திட்டம்?”

“அது சுத்தப் பொய்யெண்டுதான் நான் நினைக்கிறன். அண்ண பாருங்க, இந்த கொலைப் பட்டியல்ல அவங்கள் போட்டிருக்கிற ஆக்கள் ஆரு? அத்தனை பேரும் தமிழரை முறியடிச்ச ‘போர் வீர நாயகர்கள்’. இந்த முறியடிப்பின் கதாநயாகன் கோதாவெனப் புகழப்பட்டாலும் ரணில் தான் அதை ஆரம்பிச்சு வைச்சது. இப்ப ரணில் மாமா நாமல் சிறுவனுக்கு அவசியம் தேவை. நாட்டு மக்கள் திரும்பவும் தாமரை மொட்டுகளைத் துக்கத் தயாராகும்வரை அரியணையைப் பாதுகாக்க ரணில் மாமா வேணும். சஜித்தை துரத்திறவரைக்கும் ரணில் அங்கதான் படுத்துறங்கப் போகுது. அரியணை நாமலுக்குப் போகுதோ இல்லையோ சஜித்துக்கு கிடைக்கக்கூடாது எண்டதில அந்தாள் கவனமாக இருக்குது. எனவே போர் நாயகர்களைக் கொலைப் பட்டியலில் சேர்ப்பது ராஜபக்சக்களின் திட்டம். எப்பிடி ஈஸ்டர் குண்டுவெடிப்பைச் செய்து ஆட்சியைக் கைப்பத்தினாங்களோ அது போல அடுத்த தேர்தலுக்கு முதல்ல இவங்களே ஆரோ ஒருவரைப் போட்டாலும் ஆச்சரியப்படாதேங்கோ”

“பாவம் இந்தியா. அதுவும் எத்தினை தரம் சீலையளை மாத்தியும், தலையை மாத்தி விதம் விதமான கொண்டையளோடும், புதுப் புது நகையளோடும் வந்து வனப்புக் கட்டிப் பாக்குது. ஒருவரும் விழுகிறாங்களில்லை”

“இதில இன்னுமொரு விசயத்தையும் நாங்க பாக்கவேணும். ரணில் அமெரிக்காவின்ர ஆள் எண்டபடியாலதான் கோதாவை அகத்திப்போட்டு அவரை அமெரிக்கா இருத்தினது எண்டுதான் பலரும் நம்புகினம். ஆனா அந்தக் குள்ள நரி ஐ.எம்.எஃப். கடன் கிடைக்கும் மட்டும்தான் நாடகமாடினது. ஏற்கெனவே வாங்கின கடன்களை ‘றீஸ்ட்றக்‌ஷர்’ பண்ணினாத்தான் ஐ.எம்.எஃப். கடன் தருவனெண்டு அடம் பிடித்தது. உடனே இந்தியா தடாலெண்டு காலில விழுந்து நான் என்ர கடனை ‘றீஸ்ட்றக்‌ஷர்’ பண்ணத் தயார் எண்டு அறிவிச்சுது. மாட்டன் மாட்டனெண்டு அடம்பிடிச்சுக்கொண்டு நிண்ட சீனாவும் பிறகு உடன் பட்டுது. இதில இருந்து ஒண்டு விளங்குது. ரணிலும் சீனாவின்ர ஆள்தான். இதை உறுதிசெய்யுமாப் போல ரணில் ஒரு அறிக்கை விட்டுது. “நாங்க மேலைநாடுகளின்ர ஆதிக்கத்தில இருந்து விடுபட்டு ஆசிய மேலாதிக்கமொன்றைக் கட்டியெழுப்பவேணும்” எண்டிருந்தது அந்த அறிக்கை. இப்ப சீனா, ரஷ்யா, இந்தியா போல நாடுகளின்ர கூட்டணி அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியை விடப் பலம்வாய்ந்ததாக வருகிற நிலைமை. இந்த் நேரத்தில இலங்கையில ராஜபக்சக்களின்ர ஆட்சி இருக்கவேணுமெண்டு சிங்கள மேலாதிக்கம் நினைச்சிட்டுது. அதுக்கு இந்தியா தேவையே இல்லை. நீங்க சொன்னதுபோல இந்தியா இனி நிர்வாணமாகத்தான் வந்து ட்றை பண்ணப் போகுது”

“அதுக்கும் வேணும். இத்தனை காலமும் விசுவாசமாக இருக்கிற தமிழ்ச் சனத்தை விட்டுப்போட்டு வேண்டாத புருசனட்டைப் போய் வழிஞ்சுகொண்டு நிக்குது பார். அது சரி இப்ப வீரவன்ச கொழுத்திப்போட்ட இந்த வெடியால தமிழருக்கு ஏதாவது விமோசனம் கிடைக்குமெண்டு நினைக்கிறியோ?”

“சுப்பிரமணிய சாமி போல ஆக்கள் இருக்குமட்டும் ராஜபக்சக்களுக்கு ஆட்சி உச்சம். பலவீனமான ஆக்களுக்காகக் கண்டுபிடிச்ச ஆயுதம் தான் அஹிம்சை. விளங்கினாச் சரி”

“விளங்குதடா கிருசு. நல்ல விளைமீன் பொரிச்சுச் சாப்பிடு. நான் வாறன்” மெல்ல நழுவினார் வடிவேலர். (Image Credit: Derana)