வடிவேலர் உலா: வீடேறப்போகும் விக்கிரமசிங்க?
கிருஷ்ணாநந்தா
நீண்ட நாட்களுக்குப் சுப்பிரமணியம் பூங்காவில் காற்றுவாங்கிக்கொண்டிருந்தபோது வடிவேலரது குரல் உரத்துக் கேட்டது. “இங்க என்னடா செய்யிற கிருசு?” பாவம் மனிசன்; கையைத் தூக்கவிடாமல் மட்டை வைத்துக் கட்டி கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
“சும்மா குடிச்சுப்போட்டுத் தேவையில்லாம ஆக்களுடன் தனகுகிறது. அவங்கள் கையை முறிச்சதும் கழுத்தில கட்டித் தூங்க விடுகிறது” நான் ஏசினேன். நழுவலாகச் சிரித்தார் வடிவேலர்.
“சரி அதை விடு கிருசு. இந்த ‘ஐ.எம்.எஃப்’ எண்டு கொழும்பெல்லாம் பட்டாசு வெடிக்கிறாங்கள். இப்பிடித்தான் தலைவர் செத்தது எண்டவுடனும் இவங்கள் பட்டாசு வெடிச்சவங்கள். உந்த மோவன்னாக்கள். திருந்த மாட்டாங்கள். எனக்கெண்டா விளங்கேல்ல. உந்த ஐ.எம்.எஃப் கடனைப் பத்தி ஒருக்கா விளக்கமாகச் சொல்லடா தம்பி” வடிவேலர் வாங்கில் அமர்ந்தார்.
“அண்ணே அது பெரிய கதை. சும்மா சிம்பிளா விளங்கப்படுத்தேலாது. சுருக்கமாச் சொல்லிறன்.
“ஐ.எம்.எஃப் எண்டிறதும் கிட்டத்தட்ட ஒரு வங்கி தான். அமெரிக்கா போல நாட்டாமைக் காரங்களின்ர ஒரு கைத்தடி எண்டு வையுங்கோ. எங்களைப் போல பேணிகளை ஏந்திக்கொண்டு நிக்கும் ஏழை நாடுகளை ‘வரிசையில சத்தம் போடாம நிக்கவேணும்’ எண்டு வெருட்டிறதுக்கு பாவிக்கிற ஒரு தடியெண்டு நினையுங்கோ. பங்களாதேஷ், ஆர்ஜெண்டீனா, பாகிஸ்தான் எண்டு பல நாடுகளும் பேணிகளை ஏந்தேக்க ஐ.எம்.எஃப் கடனைக் குடுத்து நிமித்தி விட்டிருக்குது. இப்பிடித்தான் இப்ப மூண்டு பில்லியன் கடன் இலங்கையின்ர பேணிக்குள்ள விழுந்திருக்குது”.
“நான் நினைச்சன் அது நான் எடுக்கிற பிச்சைக்காசு மாதிரி சும்மா குடுபட்டது எண்டு. அப்ப கடனை வாங்கிக் கடனைக் குடுக்கிற விளையாட்டுத்தான்” வடிவேலர் ஒரு கையால் வாங்கில் தட்டிச் சிரித்தார்.
“இந்த மூண்டு பில்லியன் டொலர்களையும் ஐ.எம்.எஃப் நாலு வருடக் கடனாகக் குடுத்திருக்கு. நாலு வருசம் முடிய அதை வட்டியோட திருப்பிக் குடுக்க வேணும். என்ன வட்டி எண்டு மட்டும் கேட்காதீங்கோ. அது மர்மம். ஆனா வட்டியில்ல இஞ்ச விசயம். இந்தக் கடனைக் குடுத்ததால சீனாவின்ர காலுக்குக் கீழ கிடந்த இலங்கையை இப்ப அமெரிக்காவின்ர காலுக்குள்ள ஐ.எம்.எஃப். விழுத்தியிருக்கு. தூக்கி நிறுத்தேல்ல. விழுந்தது விழுந்ததுதான்”.
“விளங்கேல்ல. பங்களாதேஷ், பாகிஸ்தான் எல்லாம் எழும்பியிருக்கு தானே”.
“பாகிஸ்தான் இப்பிடி அடிக்கடி விழுகிறது. ஞாபகமிருக்கே, இம்ரான் கான் ஆட்சியிலை அவர் சீனாவோட கொஞ்சிக் குலாவினது?. அதின்ர பலன்தான் பிறகு ஐ.எம்.எஃப். அங்க போனது. பங்களாதேஷ் கொஞ்சம் படிச்ச நாடு. தப்பிட்டுது. ஆனா இலங்கை இதில இருந்து மீளுமெண்ட நம்பிக்க இல்லை எண்டது வெடி கொழுத்தேக்கையே தெரிஞ்சிட்டுது”
“ஏன் கிருசு. காசு கிடைச்சாச் சந்தோசம் தானே. பாவம் சின்களச் சனம்”
“வெடிகொழுத்தினது கிராமத்துச் சனமில்ல. கொழும்பில இருக்கிற ஆளும் கட்சி ஆட்கள். இவங்கள் தான் “எங்கட பிரச்சினையளுக்கு எம்மாலேயே தீர்வு காண முடியும். வெளிநாட்டார் எங்களுக்கு லெக்சர் பண்ணத் தேவையில்லை எண்டு கொஞ்ச மாதங்களுக்கு முன்ன வாயாலை வெடி கொழுத்தினவங்கள். தூ….” என்னை அறியாமலே ஆத்திரம் பொங்கிவிட்டது.
“சரி விசயத்தைச் சொல்லு. இந்தக் கடனை இலங்க அரசாங்கம் எப்பிடிக் கட்டி முடிக்கப் போகுது?”
“அண்ணை, ராஜபக்ச காலத்தில போட்ட கார்ப்பட் ரோட்டுகள், மத்தள எயர்போர்ட், தாமரைக் கோபுரம், போர்ட் சிற்றி எண்டு மக்களுக்கோ அல்லது அரசுக்கோ உடனடியான பலன்களைத் தராத திட்டங்களுக்கெண்டு சீனா பெரிய கடன்களைக் குடுத்துது. இதால கடுப்படைஞ்ச இந்தியா ‘ஏன் என்னால கடன் தரேலாதா எண்டு’ தானும் கிள்ளிக்கொடுத்து. இரண்டு பக்கமும் வாங்கித் திண்டு ஏப்பம் விட்டிட்டு இலங்கை குறட்டை விடத் தொடங்கினவுடனே எல்லாரும் அலேர்ட் ஆகிட்டினம். போதாததுக்கு கோதாபய எண்ட முட்டாளை 6.9 மில்லியன் முட்டாள்கள் ஆட்சியில இருத்திச்சினம். அந்தாள் வந்ததும் வராததுமா வருமான வரியைக் குறைச்சிட்டுது. இதால திறைசேரியில காசு வத்திப்போனது. ஏற்றுமதி குறஞ்சுபோக, ஈஸ்டர் குண்டுவெடிப்பால சுற்றுலா வருமானம் குறைஞ்சுபோக, கோவிட்டால வெளிநாட்டு ஊழியர் வருமானம் குறைஞ்சுபோக றிசேர்வில டொலரும் வத்திப் போச்சுது.
“இப்ப இவை ஏற்கெனவே அரசாங்க ‘பொண்டுகளை’ வித்து வாங்கின கடன்களைத் திருப்பிக் கொடுக்கிற தவணை நெருங்கிச்சு. இந்த பொண்டுகளை தனியாரும், சர்வதேச நிறுவனங்களும் வாங்கியிருந்தவை. அந்த நேரம் இருந்த மத்திய வங்கி கவர்னர் அஜித் கப்ரால் றிசேர்வில இருந்த மிச்ச சொச்சம் டொலர்களை ராஜபக்சக்களுக்கு வேண்டிய கடன்காரருக்குக் குடுத்துப்போட்டு மிச்ச ஆக்களுக்குக் கையை விரிச்சுப் போட்டுது. அப்பவே ஐ.எம்.எஃப் இட்டப் போங்கோ எண்டு எதிர்க்கட்சிகள் கத்தினாலும் வீரவன்ச போன்ற அசல் சிங்கள மறவர்கள் ஐ.எம்.எஃப் / அமெரிக்கா ஆக்களின்ர காலில விழக்கூடாது எண்டு தடுத்துப் போட்டினம்”
“சரி அப்ப அரசாங்கம் காசை அச்சடிச்சுக் கடனைக் குடுக்க வேண்டியது தானே”
“அண்ணை அந்தக் காசு சம்பளம் குடுக்க மட்டும்தான். இறக்குமதி செய்யிறதுக்கும், வெளிநாட்டுக் கடன்காரருக்கு வட்டி கொடுக்கிறதுக்கும் டொலர் தானே வேணும். அதுக்கு எங்க போறது?”
“இப்ப விளங்குது. இதுக்குத்தான் அவை சீனாவிட்டயும், இந்தியாவிட்டயும் போனவை”
“அவங்களும் தங்களிட்ட வாங்கிற சாமானுக்கு கடனைக் குடுத்தாங்கள். இந்தியா தன்ர பிரைவேட் வங்கிகளால கொஞ்ச கடனைக் குடுத்தது. அதுக்கு காரணம் அதைக் குடுக்காட்டா சீனாவுக்கு வடக்கு கிழக்கிலையும் நிலங்களைக் குடுத்து பக்கத்தில கொண்டுவந்து அதை இருத்திப் போடுவாங்கள் எண்டிறதுக்குத் தான்”
“சோழியன் குடும்பி சும்மா ஆடாது தானே. அப்ப ஏன் சீனா ஐ.எம்.எஃப் மாதிரி கடனைக் குடுத்து இலங்கையை மீட்க முன்வரேல்ல?
“நல்ல கேள்வி அண்ணை. ஒரு கதை சொல்லிறன் அது உங்கட கேள்விக்கு மறுமொழியா இருக்கும். என்ர நண்பர் ஒருவர் வட்டிக்குக் காசு குடுக்கிறவர். ஆக்களைப் பாத்துத்தான் மனிசன் குடுக்கும். கொஞ்சம் இளிச்சவாயள் எண்டால் அந்த மனிசன் “நீ நல்லாக் கஸ்டப்படுகிற இந்தா இதையும் வைச்சு இந்த மாசம் வட்டியக் கட்டு” எண்டு காசைக் குடுத்துக் கடனைக் கூட்டிக்கொண்டே போகும். சீனாவும் அப்பிடித்தான் செய்தது. ராஜபக்சக்கள் இளிச்சவாயர் இல்லை. அவங்கள் இந்தக் கடன்களை வெளிநாட்டு வங்கிகளில போட்டுவைச்சுக்கொண்டு இலங்கையைக் கடனாளியாக்கி விட்டாங்கள்”
“அப்ப ஐ.எம்.எஃப் இட்டப் போகத்தானே வேணும்”
“அதில்ல இப்ப பிரச்சினை. ஐ.எம்.எஃப் இந்தக் கடனைச் சும்மா குடுக்கேல்ல. நாலு வருசங்களுக்குள்ள இலங்கையில பல மாற்றங்களை அரசு செய்யவேணும். அரச கூட்டுத்தாபனங்கள் பல தனியார் மயப்படுத்தப்படவேணும் எண்டது ஒருமுக்கிய நிபந்தனை. அதிலயும் ஏற்கெனவே இலாபமீட்டிக்கொண்டிருக்கிற சிறீலங்கா ரெலிகொம், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், சிறீலங்கா இன்சூரன்ஸ், லிட்றோ காஸ் போன்ற கூட்டுத்தாபனங்களிலதான் அவங்கட கண். அதில எனக்கும் உடன்பாடு இருக்குத்தான். ஆனா யூனியன் வேலையாக்களுக்குத்தான் பிரச்சினை”
“ஓ அதுதான் ரணில் மச்சான் பல சேவையள கட்டாய சேவை ஆக்கினவர்”
“இதனால தான் மாமன் ஜே.ஆர்.கொண்டுவந்த சர்வாதிகாரம் மிக்க எக்செக்கூட்டிவ் பிரெசிடென்சியை விட்டுக்குடுக்காம ரணில் இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருக்குது. இன்னும் ஒரு வருசத்தில அதுக்கும் எலெக்சன் வரப்போகுது. அது வேற ஆக்களின்ர கையில போகுமெண்டு தெரிஞ்சா மனிசன் தன்ர ராஜபக்ச சகபாடியளைக் கொண்டு அதை ஒழிச்சுப்போட்டுத் தான் போகும் எண்டு நான் நினைக்கிறன். அதுவரைக்கும் தன்ர பொலிஸ், முப்படை அடியாக்களைக்கொண்டு இந்த யூனியன் பிரதர்களின்ர கால்களை முறிச்சு ஐ.எம்.எஃப். நிபந்தனைகளை நிறைவேற்றப்பாக்கும். அதுக்குத்தான் அங்கிள் சாம் அவரைப் பதவியில இருத்தினது”
“அப்ப சீனா ஏன் ஒதுங்கினது?. இந்தியாவுக்கு இது பெரிய அரசியல் வெற்றியெல்லோ?”
“இந்தக் கடனைக் குடுக்கிறதுக்கு இலங்கையின்ர பெரிய கடனாளிகளான சீனாவும் இந்தியாவும் தாங்கள் குடுத்த கடன்களின்ர வட்டி, தவணை போன்ற விசயங்களில கொஞ்ச சலுகைகளைக் குடுக்கவேணும் எண்டு ஐ.எம்.எஃப். கேட்டது. ‘றீஸ்ட்றக்ஸரிங்’ எண்டு அதைச் சொல்லுவினம். இந்தியா உடனேயே அதுக்கு உடன்பட்டுவிட்டுது. சீனா கொஞ்சம் காலை இழுத்தாலும் பிறது அதுகும் உடன்பட்டுவிட்டுது. அதனால தான் ஐ.எம்.எஃப் திடீரென்று இந்தக் கடனைக் குடுக்கச் சம்மதிச்சுது. இந்தக் கடனைக் குடுக்கிறதால அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் படு லாபம். இதனால ரணில் இலங்கையை மீட்டெடுக்கும் எண்ட நம்பிக்கை அவைக்கு இருக்கு. சீனாவை ஒதுக்கினது அவைக்குச் சந்தோசம்”
“அப்ப ஏன் சீனா அதுக்கு உடன்பட்டுது?”
“சீனாவுக்கு தலை நிறைஞ்ச பிரச்சினை. அதின்ர பொருளாதாரமும் நினைச்ச மாதிரி இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் கூடிட்டுது. என்னதான் இருந்தாலும் சீனாவின்ர சாமானை அமெரிக்கவிலயும், ஐரோப்பாவிலயும் தானே விக்கலாம். எனவே அதின்ர முதல் நோக்கம் குடுத்த காசை முதலில எடுக்கவேணும். யூக்கிரெய்ன் போரை முடிவுக்குக் கொண்டுவரவேணும். இதனால தனக்கும் தன்ர நண்பன் ரஸ்யாவுக்கும் பலத்த நட்டம். அதோட தாய்வானுக்கு அருகில அமெரிக்கா வெடிவிட்டுக்கொண்டு நிக்குது. இந்த நிலையில சீனாவுக்கு இலங்கை அவசியமான ஒண்டில்லை. அதனால றிஸ்ட்றக்ஸரிங்கிற்கு அது உடன்பட்டுவிட்டுது. ஐ.எம்.எஃப் க்கும் அது வசதியாகப் போயிட்டுது”
“உன்ர மண்டை மட்டும் சிங்களவனுக்கு இருந்தா…” வடிவேலர் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார்.
“ஆனா இனித்தான் பிரச்சினையே ஆரம்பிக்கப் போகுது. இந்த மூண்டு பில்லியன் டொலர்களும் மூண்டு தடவையாகக் குடுக்கப்படும் எண்டு சொல்லுகினம். முதலாது பங்கான ஒரு பில்லியனனை மூண்டாப் பிரிச்சுக் குடுபடும். முதலாம் பங்காகக் குடுக்கப்படுகிற 330 மில்லியனில இந்தியாவின்ரயும் பங்களாதேசின்ர கிறெடிட் கடன்களும் குடுக்கப்படும். அதோட அந்தப் பங்கு சரி. அடுத்த பங்கு ஜூனிலை கிடைக்கும். அது சீனாவின்ர காசு குடுக்கச் சரி. அதின்ர தவணை இந்த டிசமபரில வருகுது. இப்பிடியே றிசேர்வை டொலர் நிறப்புறதுக்குள்ள புதுக் கடன் அதை நிறப்பிவிடும் போலத் தெரியுது. அங்கால ஜனாதிபதி தேர்தல். ரணில் எதிர்பார்க்கிறதைபோல நாட்டு மக்களை வரிசையிலிருந்து எடுத்து வீட்டுக்குள்ள வைச்சிருக்க ஏலுமோ தெரியாது. எனக்குப் பாக்க யூனியன் தொழிலாளர்களைத் திரும்பவும் உசுப்பிவிட்டு புத்த பிக்குமார் கைகளில தாமரை மொட்டுக்களைத் திரும்பவும் குடுக்க பசிலர் ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருப்பர் எண்டே படுகுது. ஐ.எம்.எஃப் எண்ட பேரில ரணில் யமதர்மனையே கூப்பிட்டிருப்பாரோ எண்டே படுகுது. பாப்பம்”
“என்னவோ தம்பி கிருசு. நீ ஒரு சிறந்த அறிவாளி. லண்டனுக்குப் போய் சூனாக்கை வெளியில போட்டிட்டு ஆட்சியைப் பிடிக்கப் பார்”. அந்த வேளை “போவமாப்பா” என்று பக்கத்து பெஞ்சிலிருந்து ஒரு குரல் எழுபியது. அது வடிவேலரின் மனைவி. வடிவேலரின் அலட்டலுக்காக அவர் அவ்வளவு நேரமும் பொறுமையாகக் காத்திருந்தார்.
“மன்னிக்கோனும்.நான் காணேல்லை. நீங்க இருக்கிறீங்க எண்டா நான் உடனேயே முடிச்சிருப்பன்”. நான் தலையைச் சொறிந்தேன்.
“எல்லாம் பழகிட்டுது” என்று தன்னிடமிருந்த கைத்தடியை வடிவேலரிடம் அவர் கொடுத்தார்.
“அடி பலமாகத்தான் விழுந்திருக்கிறது” என்று கிசுகிசுத்துக்கொண்டு மறுதிசையால் சென்றேன். (Photo Credit: epa images)