Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (8): ரணிலரின் போக்கும் வரவும்

கிசு கிசு கிருஷ்ணாநந்தா

வடிவேலர் இன்று கொஞ்சம் தாமதமாக வந்தார். “மன்னிக்கோணும் கிருசு. இண்டைக்கு முள்ளிவாய்க்கால் நினைவு ஆரம்ப தினமல்லோ. யாழ். பல்கலைக்கழகத்தில இருக்கிற நினைவுத் தூபியில மலர் வைச்சு..”

“அது பல்கலைக்கழகப் பிள்ளையளல்லோ செய்யினம். உங்களை என்னெண்டு உள்ள விட்டினம்?”

“அட சொல்லி முடிக்க விடமாட்டனெண்டிற. அதுக்குப் போன மகன் என்ர சைக்கிளைக் கொண்டு போனவன். தற்செயலா அங்க ஆமிக்காரன் நிண்டு குழப்படி செய்தாலும் எண்டு தன்ர மோட்டச்சைக்கிளை வீட்ட விட்டிட்டு என்ற ஓட்டைச் சைக்கிளைக் கொண்டு போனவன், இப்பத்தான் வந்தான்”

“பெடியனும் அப்பரை மாதிரித்தான். தன்ர பொருளிலை கவனம்”

வடிவேலர் நெளிந்தார். “சரி இந்தா பிடி கஞ்சி. சந்தியில சனம் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் குடுத்துக்கொண்டிருக்குதுகள். ரணில் பிரதமரா வந்தவுடனே சனம் துணிஞ்சிட்டுது”

“இல்லை வடிவேலர். ஆமிக்காரனெல்லாம் கொழும்பில உல்லாசமா டாங்குகளில ஊர்சுத்தப் போயிட்டாங்க”

“சரி கிருசு, கோதா ரணிலைப் பிரதமராக்கினதுக்கு என்ன காரணமெண்டு நீ நினைக்கிற?

“இதில நானென்ன, உலகமே நினைக்கிறது ஒண்டைத்தான். ராஜபக்சக்களின்ர கழுத்தில கயிறு இறுகத் தொடங்கிவிட்டுது. அவங்களைக் காப்பாத்திற கெட்டித்தனம் இப்ப ரணிலிட்ட மட்டும் தான் இருக்கு. ஆமிட்டகூட இல்லை.”

“ஏன் அப்பிடிச் சொல்லிற”

“இஞ்ச பாருங்க வடிவேலர், கோதாபய அமெரிக்க குடியுரிமையைத் துறக்கிறதுக்கு முதல்லயே அவரை இலங்கைப் பிரசையாக்கிறதுக்கு உதவினது ரணில். அவரின்ர மருமகள் இசினி விக்கிரமசிங்க தான் அந்த குடிவரவுத் திணைக்கள டொக்குமெண்ட்ஸையெல்லாம் மாத்திக் குடுத்து அலுவலைப் பாத்தது. அதுக்குப் பிறகு திணைக்களக் கணனியில இருந்த கோதா பற்றின விசயமெல்லாம் அழிக்கப்பட்டு விட்டது. ரணிலுக்குத் தெரியாம இது நடந்திருக்குமெண்டு நினைக்கிறீங்களே”?

“அப்ப ரணில் தான் கோதாவை ஜனாதிபதியாக்கினது எண்டு சொல்லுறியோ?”

“சஜித் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வந்துவிடக்கூடாது எண்டதில குறியா இருக்கிறவர் ரணில். அதுக்கா வேண்டி அவர் எந்தப் பேயோடும் சேரக்கூடியவர்”

“எண்டாலும் தேர்தலில 2.1% வாக்குகளை எடுத்துத் தோத்துப் போன ஒரு மனிசனுக்கு கோதா இந்தப் பதவியைக் குடுத்தது பிழை. சஜித்துக்குக் குடுத்திருக்கலாம”

“அது சரி வடிவேலண்ணை, சஜித்தும் ‘தானும் படான்’ கேஸ் தான். ஒரு முடிவைச் சரியான நேரத்தில எடுக்கத் துணிச்சலில்லாத ஆள், அத்தோட சரியான பிடிவாதமான ஆள். இதனால தான் மங்கள சமரவீரவும் அந்தக் கட்சியில இருந்து விலகினவர். இப்ப கோதா கேட்டும் இந்தாள் பல நிபந்தனைகளைப் போட்டபடியால ரணில் இதுக்குள்ள பூந்து விளையாடிவிட்டுது”

“இதனால ரணிலுக்கு என்ன லாபம்? அல்லது ரணிலை வைச்சு வேற யாரும் ஆட்டிறாங்களா?”

“எனக்கு ஐமிச்சம் பெரியவர் அமெரிக்காவில”

“விளங்கேல்ல”

“சரி இப்பிடிப் பாப்பம். இந்த மோட்டு மஹிந்த செய்த வேலையால கொழும்பில கோதாகோகம போராட்டக்காரங்களுக்கு அமோக வெற்றி. நாடு முழுவதும் சனங்களெல்லாம் மஹிந்தவின்ர ஆட்களை அடிச்சு நொருக்கத் தொடங்கிட்டுதுகள். இதைச் செய்தது முன்னணி சோசலிசக் கட்சி ஆதரவாளர். இவங்கள் ஜே.வி.பியில இருந்து பிரிஞ்ச தீவிர இடதுசாரியள். பல தொழிற்சங்கங்களும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எல்லாம் இவங்களுக்குப் பின்னால. கோதாகோகம வெற்றி இவங்களுக்குப் போகுது எண்டதும் ஜே.வி.பியும் இவங்களோட சேர்ந்துகொண்டு உரிமை கொண்டாட வெளிக்கிட்டுது”

“அதுக்கும் ரணிலுக்கும் என்ன சம்பந்தம்?”

“இந்த இடதுசாரியள் ஆட்சியைப் பிடிக்கிறதை அமெரிக்கா விரும்பாது. ஐ.எம்.எஃப் பும் கடன் குடுக்காது. இந்த நிலையில அடுத்த தேர்தல் வருகிறவரை கோதாவைப் பதவியில வைச்சிருக்கிறது அமெரிக்காவுக்கு அவசியமெண்டு நான் நினைக்கிறன். அதுவரை ஒரு காபந்து பிரதமராக ரணில் இருக்க வேணும். அவர் மேற்கு நாடுகளோட நல்ல சிநேகிதம். அவர் பிரதமரா வந்தவுடனே பாருங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிப்பாட்ட மாட்டுது. ஐ.நா.மனித உரிமைகள் சபை ரணில் அரசுக்குக் கால அவகாசம் குடுக்கும். அமெரிக்கா தன்ர MCC ஒப்பந்தத்தை சைன் பண்ணி உடனே 460 மில்லியனை றிலீஸ் பண்ணும். யப்பானும் அள்ளிக் குடுக்கும். பெற்றோல் வந்ததும், காஸ் வந்ததும் சனம் இதையெல்லாம் மறந்துபோய் வீட்டுக்குப் போயிடும். அப்ப எல்லா வெற்றிக்கும் காரணம் ரணில் எண்டு சொல்லி யூ.என்.பி.க்கு சனம் வாக்குப் போடும். பாருங்க அம்ரிக்க தூதுவரும், இந்திய தூதுவரும் நான் முந்தி நீ முந்தி எண்டு ரணிலுக்கு வாழ்த்து தெரிவிச்சிட்டாங்க”

“சஜித்தைப் பிரதமாராக்கியும் அமெரிக்கா இதைச் சாதிச்சிருக்கலாம் தானே?”

“சர்வதேச விவகாரங்களில சஜித் அனுபவமில்லாதவர். அமெரிக்காவின்ர தில்லுமுல்லு டீலுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர். அவர் ஆட்சிக்கு வந்தா ராஜபக்சளுக்கும் ஆபத்து. சம்பிக்க ரணவக்க, சரத் ஃபொன்சேகா போல ஆட்கள் திண்டிருவாங்கள்”

“அப்ப டீல் என்ன?”

“டீல் இதுதான். “நாங்க ஒரு அஞ்சாறு வருசம் அஞ்ஞாதவாசம் போவம். அதுவரைக்கு ஆட்சியை உன்னட்டைத் தாறம். எங்கள் ஒருவர் மேலயும் ஒருவரும் கைவக்கப்படாது” எண்டு ராஜபக்சக்கள் கேட்டிருக்கலாம். வேற யார் ஆட்சியை அமைச்சாலும் ராஜபக்சக்களுக்குப் பாதுகாப்பில்லை எண்டிறது அவங்களுக்குத் தெரியும். மேற்கு நாடுகளும் ரணிலின்ர ஆட்சியில சீனாவை ஓரம்கட்ட முயற்சியளை எடுக்கும்.”

“இதுக்கு நம்மாக்கள் என்ன சொல்லுகினம்?”

“நம்மாக்கள் எண்டா ஆரு இப்ப? சுமந்திரனும், சானக்கியனும் தானே. மற்ற ஆக்களெல்லாம் பாவம் வாயில்லாப் பிராணிகள். என்ர அபிப்பிராயம் இதில வாயில்லாப் பிராணிகளாக இருக்கிறது நல்லது. இதில நாங்க சைட் எடுக்கக் கூடாது. “நீதி ஞாயத்தின்ர பக்கம் நிக்கிறம்” எண்டு காட்டிறதுக்காக சுமந்திரனும் சாணக்கியனும் “கோதா வீட்டுக்குப் போகோணும்” , “ரணிலுக்கு பிரதமரா வாறதுக்கு ஆணை இல்லை” எண்டெல்லாம் சொல்லினம். ஆனா இந்தியாவையும், அமெரிக்காவையும், ஐ.நா.வையும் நம்பி இருக்கிற இவை என்னெண்டு ரணிலைப் புறக்கணிக்கலாம்?”

“தற்செயலா இவையளுக்கும் அமைச்சர் பதவியள் எதையும் ரணில் குடுப்பாரோ. அப்பிடிக்குடுத்து கருணாவைப் பிரிச்ச மாதிரி சாணக்கியனையும் பிரிக்க ட்றை பண்ணுவாரோ”?

“கூட்டமைப்புக்கு ஒண்டு, இரண்டு அமைச்சுப் பதவியளை ரணில் குடுக்க முயற்சிக்குமெண்டுதான் நான் நினைக்கிறன். ஆனா இவை அதை எடுப்பினமெண்டு நான் நினைக்கேல்ல”

“அப்ப ரணில் வந்ததால தமிழருக்கு ஒரு நன்மையும் கிடைக்காது எண்டு சொல்லிறயோ?”

“கட்டாயம் கிடைக்கும். ரணில் முதல்ல செய்யப் போறது வெளிநாடுகளின்ர உதவியோட மக்களுக்கு நிவாரணம் வழங்கிறது. மக்கள் வயிறு நிரம்பினவுடனே போராட்டக்காரருக்கு ஆதரவு குறையத் தொடங்கும். இதுக்குள்ள ஐ.எம்.எஃப். கடனைக் குடுத்துவிடும். அப்ப அது போடிற நிபந்தனைகளில ஒண்டு மனித உரிமைகள், சிறுபான்மை விடயங்களில கவனம் செலுத்த வேணுமெண்டிறதா இருக்கும். இந்தச் சாட்டில ரணில் தமிழருக்கு சாதகமான சில சலுகைகளைக் குடுக்க முயற்சிப்பார் எண்டு நான் நினைக்கிறன். இதுவரைக்கும் அவர்குடுக்கிற இவரும், இவர் குடுக்கிறதை அவரும் நிப்பாட்டிக்கொண்டு வந்தவை. இப்ப இரண்டு குழப்படிகாரரும் ஒரு முகாமில. ரணில் குடுக்கிறதை சிங்கள கடும் தேசியக்காரர் தடுக்க மாட்டினம், ஏனெண்டா இப்ப அவையெல்லாம் ரணிலுக்கு கீழ. சில வேளைகளில சஜித்தின்ர ஆட்கள் கோட்டுகளை மாத்திப்போட்டுக்கொண்டு வந்தாலே தவிர ரணிலின்ர ஆட்சியில ரணில் தமிழரின்ர மனதை வெல்ல ஏதாவது செய்ய முயலுவார். ஏனெண்டா புலம் பெயர்ந்த தமிழரின்ர முதலீடுகள் முக்கியமானவை எண்டதை அந்தாள் உண்ர்ந்திருக்குது”

“அப்ப சிங்களவர் போராடித் தமிழருக்கு வெற்றி எடுத்துத் தருகினம் எண்டு சொல்லிற”

“அண்ண நீங்களும் உந்த ‘வெப்சைட் பத்திரிகைகள், காத்துப் போன ‘யூ-டியூப்புகள்’ போல திரிக்க வெளிக்கிடாதீங்க. நான் சொல்லிறது என்னவெண்டா இந்த கோதாகோகம போராட்டக்காரரிலையும் எனக்கு நம்பிக்கையில்ல. ஆனா ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பினதில அவங்களுக்கு ஒரு பங்கிருக்கு. அவங்க ஆட்சிக்கு வந்தா என்ன நடக்குமெண்டு பயப்பிடுகிறதை விட ரணில் இருக்கிறது எங்களுக்குக் கொஞ்சம் பாதுகாப்பு. அமெரிக்கா, இந்தியா, ஐ.நா. வை மீறி ரணில் கனதூரம் ஓடமாட்டேர். அதைத்தான் நான் சொல்லிறன்”

“என்னவோ இத நான் கள்ளுக்கொட்டிலில போய்ச் சொன்னா நானும் திருகோணமலை நேவி முகாமுக்குத்தான் போகவேணும். அடிச்சுக் கொண்டு போடுவாங்கள். முள்ளிவாய்க்காலும் அதுகுமா இண்டைக்கு நேரை வீட்டைதான்…”

வடிவேலர் உலா இன்று திசை மாறியது.