சிரி லங்கா (7) : பருப்புக் கப்பலும் ‘ஜே.வி.பி. பேப்பர்களும்’
கிசு கிசு கிருஸ்ணாநந்தா
அந்தக் காலத்தில் சுருட்டுச் சுத்தும் இடங்களில் பேப்பர் வாசிப்பதற்கென ஒருவரை நியமிப்பார்கள். சுத்துபவர்களுக்கு அன்றைய தினசரிகளை அவர் வாசித்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் நாடும் நடப்பும் விளங்கும் அதே நேரம் வேலையும் சுறு சுறுப்பாகப் போகும் என்பது யாழ்ப்பாண வியாபார தந்திரம். இயக்கங்கள் அரசாண்ட போது பொதுமக்கள் காதுகளை ஏறிந்துவிட்டு அவரவர்கள் தாமுண்டு தம் சோலியுண்டு என்று இருப்பது வழக்கம். காதுகள் அண்டெனாக்கள் ஆகச் செயற்பட பேப்பர்கள் இல்லாமலேயே செய்திகள் சுடச் சுட விற்றுவிடும். இயக்கங்களின் ஆட்சியில் எல்லோரும் தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் என ஃபீல் பண்ணிக்கொண்டு கைகளை ஒரு மாதிரியாகக் ஹாண்டிலில் வைத்துக்கொண்டு, அதிகம் பேசாது முறைப்பான பார்வையுடன் உலா வருவது வழக்கம். அப்போது கம்பங்களில் நோட்டீஸ் ஒட்டுவதற்குப் பதிலாக உண்மையான மனித உடல்களையே ‘ஒட்டி விடுவது’ தான் சிறந்த பிரசார உத்தியாக இருந்தது. அது real politics. இப்போது ஹெல்மெட்டுகளின் காலம். காதுகளையும் எறிய முடியாது. சுருட்டுக் கொட்டில் செய்தியாளருக்குப் பதிலாக இப்போது ஸ்மார்ட் போன்கள் அத்தனை பத்திரிகைகளையும் ஒருமித்துக் காட்டிவிடும். அவற்றை நம்பியே நாளொரு பத்திரிகையும் பொழுதொரு வெப்சைட்டுமாக ஊடகத்துறை வளர்கிறது.
இப்போது சுருட்டுக் கொட்டில் எல்லாம் கிடையாது. கள்ளுக் கொட்டிலில் இப்போது வடிவேலருக்கு நல்ல மவுசு. கிருசிடம் பிடுங்கும் செய்திகளைக் குஞ்சம் கட்டி உடனுக்குடன் சக ‘குடி மக்களுக்கு’ விற்றுவிடுவார். இதனால் அவரது செய்திகளைக் கேட்பதற்கென்றே மாலை ஐந்து மணியிலிருந்து கொட்டிலில் சனம் வழிய ஆரம்பிக்கும். விசயத்தை அறிந்த உரிமையாளர் வடிவேலருக்கு இலவச கள் வழங்கலுக்கு ஒழுங்கு செய்தார். இது வடிவேலருக்கு நெருக்கடியைத் தந்தது. அவர் செய்திகளை அடிக்கடி ‘அப்டேட்’ பண்ண வேண்டி இருந்தது. கொட்டிலுக்குச் சைக்கிளில் போய் இறங்கும்போது அதே இயக்கப் பாணியில் நெஞ்சை நிமித்திக்கொண்டுதான் இறங்குவார். சனமும் ஏதோ கோதா வந்து இறங்குகிறார் என நினைத்து ஒதுங்கி வழிவிடுவார்கள். கொட்டிலில் இருந்து புறப்படும்போது வளைந்து, நெளிந்து, விழுந்து எழும்புவது வேறு கதை.
இந்த நிலையில் அவர் அடிக்கடி கிருசுவைச் சந்தித்து விசயத்தைக் கறக்க வேண்டி இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பேப்பர்கள் மாவரிக்கும் பேப்பர்களைப் போல எது விளம்பரம் எது செய்தி எனத் தெரியாமல் வருவதால் குடிகாரர்களுக்கு அவற்றை வாசிப்பதில் அதிக சிரமமிருந்தது. இது வடிவேலருக்கு வாசியாகப் போய்விட்டது.
கிருசுவுக்கும் வடிவேலரை விட்டால் தான் மினக்கெட்டு மணிக்கணக்காக ‘அப்லோட்’ பண்ணும் இணையத்தளங்களின் உள்ளடக்கங்களை வேறொருவரிடமும் இலகுவாக ட’டவுண்லோட்’ பண்ணிவிட முடியாது. எனவே இருவரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழப் பழகிக் கொண்டனர்.
இன்று வடிவேலர் கொஞ்சம் முன்னதாகவே வந்து விட்டார். காலிமுகத் திடலில் பெடியளும் பெட்டைகளும் கூடிக் கும்மாளமடிப்பது பற்றி அவருக்கு கொஞ்சம் எரிச்சல். அதுவும் அவர்களது கூடாரக் கிராமமான ‘போ கோதாவூரில்’ சனம் தவம் கிடப்பதும் அவர்களுக்கு உணவு, மற்றும் கக்கூசுகள் வழங்கப்படுவதும், அவர்களைத் தள்ளி பஸ்ஸுக்குள் ஏற்றி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவாகப் பொலிஸ்காரர் அறிக்கை விடுவதும், வார சஞ்சிகைகளில் ‘மிகுதி அடுத்த வாரம்’ எனக் கதையை முடிக்கும் வகையில் சம்பவங்கள் நடப்பதும் வடிவேலரின் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்தது. ஆனால் கிருசு வழக்கம் போலத் தனது நேரத்துக்கு வந்தார்.
“என்னா கிருசு, கேள்விப்பட்டியே”, வடிவேலர் ஆரம்பித்தார்.
“வடிவேலர், ஐஞ்சு செக்கண்ட் போனாலும் மஹிந்தவின் அடுத்த அறிக்கை வந்துவிடும். நல்லகாலம் கனக்க மினிஸ்டர்களை வீட்டுக்கு அனுப்பினதால ‘ஊடகவியலாளர் சந்திப்புகள்’ இப்ப வெகுவாகக் குறைந்து போச்சு. சொல்லுங்கோ”
“நீ என்ன நினைக்கிற, இவங்கள் றிசைன் பண்ணுவாங்களா, காலி முகப் பெடியள் பெட்டையள் வீடுகளுக்குப் போவாங்களா?”
“அண்ண, நம்ம குடும்பங்கள்ள கண்டிருப்பீங்க. ஒரு பெடியன் குழப்படி எண்டால் தகப்பன் சந்தியில் நிண்டு “அவன் என்ர மகனோ, வந்தா வெட்டுவன்’ என்பார். மகனால தனக்கு அவமானம் என்பார். ஊருக்குள் அவன்ர விலாசம் எழும்பினாலோ, அல்லது அவன் இயக்கத்தில சேர்ந்து ஒரு பிஸ்டலோட ஊருக்குள்ள வந்தாலோ, அதே சந்தியில நிண்டு “அவன் என்ர மகன்’ எண்டு விலாசம் கதைப்பார். அப்பிடித்தான் இந்த காலிமுகத் திடலும். ஆரம்பத்தில ஓரத்தில நிண்ட கட்சிகள் எல்லாம் இப்ப உள்ள பூரப் பாக்கினம். அவங்கள் எடுக்கிறதா இல்லை. அதுவரைக்கும் இந்தப் பெடியளின்ர பலத்தில எனக்கு நம்பிக்கை இருந்தது”
“இப்ப?”
“இப்ப, இவ்வளவு நாளும் ராஜபக்சக்களுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருந்த காவிக் கூட்டம் உள்ள பூந்திட்டுது. பெடியளும் முழங்கால்களில நிண்டு மகஜர் குடுக்கிறாங்கள். எனெக்கென்னவோ இதுவும் ராஜபக்சக்களின்ர மாஸ்ரர் பிளான் போலத் தான் இருக்கு. கொஞ்ச நாளா அலரி மாளிகையில பிரித் ஓதினாங்கள், இப்ப காலி முகத்தில முகாம் அடிச்சிட்டாங்கள். இளம் பிக்குகள் இரும்பு வேலிகளைத் தள்ளி விழுத்திக்கொண்டு உள்ள ஓடிறாங்கள். இதுவரை காலமும் ஒரு தலைமை இல்லாம இயங்கின இந்தப் பெடியள் இவங்களிட்ட ஏமாறப் போகிறாங்களோ என யோசிக்க வேண்டியிருக்கு”
“தலைமை இல்லையெண்டிற. வெளிநாட்டுத் தமிழற்ற காசிலை தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்குதெண்டு மஹிந்த சொல்லிறார்”
“இது தான் மஹிந்த. மனிசன் பாலொழுகவும் கதைக்கும், விஷமொழுகவும் கதைக்கும். இந்த காவிக்காரரை மஹிந்த தான் உள்ள அனுப்பியிருக்குமோ தெரியாது”
“அப்ப சஜித், ஜே.வி.பி. கட்சிக்காரங்கள் இதில ஏன் சம்பந்தப்படயில்லை”?
“சஜித் தானாக இயங்கிற ஆளில்லை. அவரும் காவிக்காரரின்ர ஆசீர்வாதம் இல்லாமல் நகர மாட்டார். பிக்குகள் நிக்கிற இடம் தான் அவரது மாளிகை. ஜே.வி.பி. கொஞ்சம் ஸ்றோங்காக நிக்கினம் போல இருக்கு. அவங்களுக்கு உள் நாடுட்டிலயும் வெளிநாடுகளிலயும் சிங்கள் மக்களிட்ட ஆதரவிருக்கு. வெளிநாடுகளில நடக்கிற ஊர்வலங்களை அவங்கள் தான் நடத்திறாங்கள் எண்டு கேள்வி. காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னால் அவங்கள்தான் இருக்கிறாங்கள் ஆனால் அமத்தி வாசிக்கிறாங்கள் எண்டு நினைக்கிறன். ராஜபக்சக்களின்ர ஊழல்கள், தில்லு முல்லுகள் எல்லாம் அவங்களின்ர கையிலை கிடைச்சிருக்கு. இப்ப பாராளுமன்றத்தில அனுரகுமார கொண்டுவந்து கொட்டின ‘ஜே.வி.பி. பேப்பர்கள்’ ராஜபக்சக்களை மட்டுமல்ல சஜித் போல ஆட்களையும் அம்பலப்படுத்தப் போகுது. அவங்கள் கொஞ்சம் அமெரிக்க, இந்திய எதிர்ப்பைக் கைவிட்டு நடுவுக்கு வருவாங்கள் எண்டால் நல்லது. அதுக்குள்ள இந்த காவிக் கோஷ்டி என்ன செய்யப் போகுதோ தெரியாது”
“சரி, இந்த ஆர்ப்பாட்டங்களில தமிழர் கலந்துகொள்ள வேணும் எண்டு சிலர் கத்துகினம். அது தேவையா?”
“தமிழர் ஒதுங்கி நிற்கிறதுக்கு தேவையான அளவு காரணங்களிருக்கு. பல தடவைகள் ஏமாத்தப்பட்டவர்கள் நாங்கள். ஆட்சி மாற்றம் வந்ததுக்குப் பிறகு கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர் தமிழர் பிரச்சினையை எப்பிடிக் கையாளப் போகினம் எண்டு ஒரு திட்டமும் இல்லை. அதை இப்ப அறிவித்தாலும் ராஜபக்சக்கள் அதை எடுத்துக்கொண்டு ‘குய்யோ முறையோ’ எண்டு அலறத் தொடங்கி விடுவாங்கள். எனவே தமிழர் விடயத்தில் ஆர்ப்பாட்டக்காரர் அடக்கி வாசிப்பதும் ஒரு வகையில நல்லது. அதே வேளையில தமிழரும் காலி முகத்தில கூட்டமாகப் போய்க் கொடி பிடிக்கிறதும் நல்லதில்ல. இது ஒரு work in progress. நாம் சம்பந்தப்படுவது எந்த வகையிலாயினும் அது பின்னணியிலதான் இருக்க வேணும். இதை வெளிநாட்டுத் தமிழர் கையாளுகிறதுதான் நல்லது எண்டு நினைக்கிறன்”
“அப்பிடியெண்டால் தமிழ்நாடு அரசு பருப்புக் கப்பல் அனுப்பிறதை எப்பிடிப் பாக்கிற. அதை வைச்சு ‘தமிழன் தமிழனுக்கு உதவி செய்யிறான்’ எண்டு ராஜப்கசக்கள் உருவேத்தக் காவிகள் ரோட்டுக்கு இறங்காதா?”
“இதை எதிர்பார்துத்தான் மனோ கணேசன், சுமந்திரன் போல ஆட்கள் ‘தமிழருக்கு மட்டும் நிவாரணம் அனுப்ப வேணாம். வேண்டுமானால் இலங்கை முழுவதுக்கும் அனுப்புங்கள்’ எண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்குச் சொன்னவை. மத்திய அரசுக்கும் இது தெரியும். அதனால தான் அதுவும் ‘தமிழ் அகதிகள் இங்க வராம நாங்க பாத்துக்கிறம்’ எண்டு ஒரு anti Tamil card ஐ விளையாடுது. வாற பருப்புக் கப்பல் தங்களிட்டைத் தான் வரவேணும்; தாங்கள் தான் அதை விநியோகிப்பம் எண்டு இலங்கை அரசாங்கம் நிபந்தனை போட்டதில இருந்து தெரியுது இது எவ்வளவு சென்ஸிட்டிவான விசயம் எண்டு. இதுவும் அரசியல்தான். ஸ்டாலின் ஐயா அழுதுகொட்டுமளவுக்கு தமிழர் இன்னும் வயிறொட்டிச் சாகேல்ல. இதுவும் மத்திய அரசின்ர கிமிக்காகவும் இருக்கலாம். யார் கண்டது. சீனாவை வெளியில வைச்சிருக்க அதுவும் பாடாய்ப் படுகுது. பலமில்லாத நாங்களும் அதில பலிக்கடாக்களாக இருக்கவேண்டியிருக்கு”
“இந்தக் கிழமை மட்டில சர்வகட்சி அரசாங்கம் அமையலாமெண்டும், அரசாங்கத்தின் மேல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவாறமெண்டும் சஜித் வெருட்டிக்கொண்டு திரியுது. அது நடக்குமோ? அதனால என்ன நன்மை?”
“அண்ணை, ஒண்டு சொல்லிறன். ஏற்கெனவே சர்வ கட்சி ஆட்சிதான் நடக்குது. பாருங்க, மொட்டுக்கூட்டணியில இருக்கிறவங்கள் யாரு? சுதந்திரக்கட்சி, வீரவன்ச கட்சி, கம்மன்பில கட்சி, திஸ்ஸ விதாரண கட்சி, வாசுதேவ கட்சி, பிக்குகள் முன்னணி கட்சி, பிள்ளையான் கட்சி, முன்னாள் த.தே.கூ. வியாழேந்திரன், ஈ.பி.டி.பி., கருணாவின் சிநேகிதி டயானா கமகே முன்னாள் SJB, கட்சி மாறிய முஸ்லிம்கள். இப்பிடி எத்தனை? இது சர்வகட்சி ஆட்சி இல்லையா? கோவிட் மட்டும் வராம இருந்திருந்தா ராஜபக்சக்கள் கூட்டமைப்பைத் தவிர மற்ற எல்லாரையும் வாங்கியிருப்பாங்கள். எனவே உந்த சர்வகட்சி அரசியலில எனக்கு நம்பிக்கை இல்லை. சஜித்துக்கு மண்டை கொஞ்சம் குறைவு. ஏற்கெனவே தன்ர கட்சியில இருக்கிற வேலி தாவிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர் 113 ஆசனங்களை எடுத்து ஆட்சியை மாற்றுவாராம். அடுத்த கிழமையே அவங்களில அரைவாசிப்பேரை மஹிந்த வாங்கிக்கொண்டு ஆட்சியை மாத்திவிடுவார். இது பாகிஸ்தான் கேஸ் மாதிரித்தான்”
“அப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுற? கள்ளுக்கொட்டிலில இந்தக் கேள்வி கட்டாயம் வரும்”
“ஒரு தேர்தல் உடனடியாக நடக்கவேணும். மக்கள் கொதிநிலையில இருக்கிறபோதே இது நடக்கோணும். இது நடந்தா ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்”
“எல்லாம் ஒரே சேத்தை மிதிச்ச ப…….கள் தானே”
“உணமைதான், தீர்வு நாட்டுக்காயின், இரண்டு கட்டம், தமிழருக்காயின் மூன்று கட்டம்”
“விளங்கேல்ல”
“தமிழர் சிங்களவர் எல்லாருக்குமே தேவையான முதலாவது கட்டத் தீர்வு ராஜபக்சக்களை முற்றாக அகற்றுதல். இது நாட்டை முன்னேற்றும். இரண்டாவது கட்டம் ஊழலை ஒழித்து திறமையின் அடிப்படையில் அரசாங்கத்தை நிர்வகித்தல். இது தமிழருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கும். புலம் பெயர்ந்த தமிழரின் முதலீடுகள் அனுமதிக்கப்படுமாயின் அது முழு இலங்கையையும் செழிக்க வைக்கும். இதன் மூலம் உருவாகும் நல்லிணக்கம், தமிழருக்கான மூன்றாம் கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். அபகரிக்கப்பட்ட நிலஙகளை விடுவித்தல் பகுதி பகுதியாக இராணுவத்தினரை அகற்றுதல் ஆகியன இம் மூன்றாம்கட்ட நடவடிக்கைகள்”
“ஐயோ நீ பாவம் கிருசு” வடிவேலர் பலமாகச் சிரிக்கிறார்.
“என்ன நம்பேல்லையா?”
“ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்திடக்கூடாது எண்டதுக்குத்தானே இந்தியா ராஜபக்சக்களைத் தொடர்ந்து ஆட்சியில வைச்சிருக்கவேணுமெண்டு பாடாய்ப் படுகுது. இந்தியா லேசில விட்டிடுமே?”
“வடிவேலண்ணே, நான் வைச்ச சோதினையில நீங்க பாஸ் பண்ணிட்டீங்க. இவ்வளவு நேரமும் நான் தந்த லெக்சரைக் கேட்டுக்கொண்டிருந்த நீங்க நல்லாக் கிரகிச்சிருக்கிறீங்க. முறத்தெட்டுவ தேரரைக் கொண்டு பட்டம் வழங்கக் கூப்பிடுவன், வாங்க” கிருஸ் மெதுவாக இல்லாமலும் அவசரப்படாமலும் நழுவிக்கொண்டர். இன்றைக்குக் கள்ளுக்கொட்டிலில் அமர்க்களம் தான். தன்னை ஒரு இயக்கப் பெடியனாக feel பண்ணிக்கொண்டு வடிவேலரும் சைக்கிள் சீட்டைத் தட்டிக்கொண்டு ஏறித் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார்.