Columnsகிருஷ்ணானந்தா

வடிவேலர் உலா: ஜே.வி.பி. யின் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ நாடகம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலரைச் சந்தித்தேன். முழங்காலுக்குக் கீழே காற்சட்டையும் கையில் கொழுக்கியோட ஒரு தண்ணிர்ப் போத்தலுமாய் ஆஸ்பத்திரி வீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

“என்ன அண்ணை எப்ப கனடாவில இருந்து வந்தனீங்க? டிசைனர் உடுப்புக்களும் மச்சிங்காகத் தண்ணிப் போத்தலும்…ம்… நமக்கு அளந்தது அவ்வளவுதான்”. எனது அங்கலாய்ப்பின் பின்னால் இருந்த நக்கல் அவரைக் குத்தியிருக்க வேண்டும்.

“கனடாவும் மசிரும். இனி அந்தக் கதையை எடுத்தையெண்டா..” வடிவேலர் பொங்கினார்.

“இல்லயண்ணை கொஞ்ச நாளா உங்கட சைக்கிள் சத்தத்தைக் கேட்காம யாழ்ப்பாண வீதிகள் எல்லாம் ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டன அண்ணே. எங்க போனீங்கள்?”

தண்ணீர்ப் போத்தலை ஒரு தினுசாத் திறந்து கொஞ்சம் நாக்கில விட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

“அதையேன்ரா கேட்கிற கிருசு. கனடாவில ரேடியோக்காரர் முழங்கினதைக் கேட்டு என்ர பொடியனும் ஆருக்கோ முப்பதினாயிரம் டொலரை அள்ளிக்குடுத்து என்னைக் கூப்பிட்டான். புதுச்சப்பாத்து வெட்டு வெட்டெண்டு வெட்டி இரத்தம் ஓட அங்க போய் இறங்கி நொண்டி நொண்டிப் போய் எயர்போர்ட்டில இறங்கினா இதென்ன கோதாரி டில்லி எயர்போர்ட்டுக்குக் கொண்டந்து விட்டிங்கள் போல எண்டு முளித்துக்கொண்டு நிக்க ஒரு இந்தியாக்காறி வெல்கம் ரு கனடா எண்டு சொல்லி இமிகிறேசன் லைனில விட்டாள். அறைக்குள்ள மேசையில இருக்கிறது மட்டும் தான் வெள்ளையள்; நிக்கிறது, ஓடித்திரியிறது, வண்டில் தள்ளிறது எண்டு எல்லாம் இந்தியங்கள் தான். இமிகிறேசனில இருந்த ஒரு வெள்ளை ஒரு நக்கல் சிரிப்போட குத்தி அனுப்பி விட்டுது.”

“அவ்வளவு ஈசியோ அண்ணை. இப்பிடியெண்டா நானும் வெளிக்கிட்டிருக்கலாம்”

“கொஞ்சம் பொறன். போய் இரண்டொரு நாளில ஒரு தமிழ்க் கடையில ‘வேர்க் பேர்மிட்’ எடுத்து வேலை செய்ய விட்டாங்கள். வேலை என்னெண்டு தெரியுமோ? மீன் கடைக்குள்ள மேசையள் கத்தியள் கழுவுறது. வேலை முடிஞ்சு பஸ்ஸில ஏறினா சனம் பக்கத்தில இருக்காது. ஒரு கிழமையில வேலையை விட்டிட்டன். அடுத்த கிழமை பெடியன் ரிக்கட்டைப் போட்டு அனுப்பிட்டான்”

“பறுவாயில்லை இரண்டு கிழைமையில ஃபாஷன் எல்லாம் பிடிச்சிட்டீங்க”

“நிறைய கதைக்க இருக்கு. அதுசரி உள்ளூர்ப் புதினம் ஏதும்? ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்குதோ”

“ஓமண்ணை அதையேன் கேக்கிறீங்க. இங்கத்த தமிழ் அரசியல்வாதிகளைக் கனடாவுக்கு வேர்க் பேர்மிட்டில அனுப்பேலாதே? அங்க போனா இமாலயப் பிரகடனத்தோடயாவது மினக்கெடுவாங்கள்”

“அட கிருசு. நான் அங்க நிக்கேக்கதான் எங்கட அனுரகுமார அங்க வந்தவர். ரகுமான்ர கொன்சேர்ட் போல; கனடாவில உள்ள அத்தனை சிங்கள ஆக்களும் அங்க நிண்டிருந்த மாதிரிப் படம் காட்டுப்பட்டது. அனுரா வந்தாப் பறுவாயில்லைப் போல இருக்கு”

“உவங்கள் ஜே.வி.பி. எண்ட பேரை மாத்தி என்.பி.பி. எண்டு வரேக்கையே யோசிச்சனான். ஏதோ திருகுதாளம் பண்ணப்போகிறாங்கள் எண்டு. யாரோ ஒரு பப்ளிக் றிலேஷன்ஸ் கம்பனியின்ர ஆலோசனையிலை வேலை செய்யிறாங்கள் போல. ஆனா அது எடுபடாது”

“அவங்கள் இன்னும் ஆட்சிக்கு வரேல்ல நீ அதுக்குள்ள…”

“இல்லை அண்ணை. ஜே.வி.பி. யின்ர இரண்டாவது போராட்டத்துக்குப் பிறகு அவங்கள் செய்த அட்டூழியத்தால சிங்களச் சனம் பயங்கர கடுப்பில இருக்குது. அதனால் தான் அவங்கள் பேரை மாத்தி என்.பி.பி. கூட்டணி எண்டு வாறாங்கள். ராஜபக்சக்கள் போரை வைச்சு ஆட்சியைப் பிடிச்சாங்கள். ஆனா அதுமாதிரி உணர்ச்சியூட்டும் சிங்கள தேசியத்தின்ர வாலைப் பிடிக்க இவயளின்ர ‘இடதுசாரி’ அடையாளம் இடம் தராது. அதனால ‘இலங்கை நம் தாய்நாடு’ எண்ட அடையாளத்தோட வருகினம். அந்த பல்லக்கில ‘சிங்களத் தேசியம்’ கவனமாக மறைக்கப்பட்டு கொண்டுவரப்படுகுது”

“அப்பிடி அவங்கள் எப்ப சொன்னவங்கள்?”

“இதுவரை அநுரா போய் வந்த வெளிநாடுகளிலயோ அல்லது வட பகுதியிலயோ அந்தாள் தமிழரோட பெரிசா சிநேகிதம் வைக்க விரும்பேல்ல. இதனால சிங்கள வாக்குகள் விழாது எண்டு அவை நினைக்கினம். இப்ப பாத்தீங்க எண்டா லால் காந்தா எண்ட பழைய ஜே.வி.பி. தூண் இரத்தினபுரியில பேசின பேச்சில “யுத்தத்துக்கான பரந்த ஆதரவைத் திரட்டியமைக்கான புகழ் ஜே.வி.பி. இற்கே சேரவேண்டும்” எண்டு சொல்லியிருக்கிறேர். அதுவும் தமிழ் மக்கள் வலி சுமக்கும் மாதத்தில். இந்தக் கூட்டத்தில பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கினம். எனக்கு ஐமிச்சம் பாராளுமன்றத் தேர்தலில கனக்க முன்னாள் இராணுவத்தினரை நிறுத்தப் போறாங்கள். கோதா எடுத்த 6.9 மில்லியன் வாக்குகளை எடுக்கோணுமெண்டு அவங்கள் கங்கணம் கட்டிவிட்டாங்க”

“நான் கொஞ்ச நாள் போயிட்டு வர்றதுக்குள்ள இவங்கள் இப்பிடியெல்லாம் செய்திட்டாங்கள். சரி அப்ப நம்ம பல நூற்றுக்கணக்கான தலைவர்கள் என்ன சொல்லுகினம்?”

“கொஞ்சப்பேருக்கு போர் முடிஞ்சது இன்னும் தெரியாது போல இருக்கு. தலைவர் படையணிகளோட உந்தா எல்லையில நிக்கிறார் எண்ட நினைப்பில இன்னும் ‘பங்கர் சாகசங்களையே’ கதைத்துக்கொண்டு இருக்கினம். இன்னும் கொஞ்சப்பேர் தம்மைத் தாமே பொதுவேட்பாளராக நியமித்து வெளிநாட்டு மணி ட்றான்ஸ்ஃப்ஃருக்காகப் பாத்துக்கொண்டிருக்கினம். “இந்தா கப்பல்ல ஆயுதம் வருகுது நீங்க சரணடையாதேங்கோ” எண்ட கணக்கில வெளிநாட்டு ஆய்வாளர் சிவப்பு-மஞ்சளில யூ ரியூப் விட்டுக்கொண்டிருக்கினம். சுமந்திரன் மட்டும் அப்பப்ப கொஞ்சம் லொஜிக்கலா நறுக்கெண்டு சொல்லிப்போட்டுப் போயிரும். இந்த நிலையில தமிழ் மக்கள் என்னமாதிரி முடிவெடுப்பினம் எண்டு சொல்லேலாம இருக்கு”

“நீயும் ஒரு ஆய்வாளர் தானே. தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில எப்பிடி வாக்களிக்க வேணும் எண்டு நினைக்கிற?”

“அண்ணை. நீங்க முட்டை சாப்பிடிறனீங்களோ?”

“ஓம். ஏன் அதைக் கேக்கிற?”

“இப்ப நான் கப்பல் கதை மாதிரி வண்டில்ல ஆயுதம் வருகுது எண்டு என்ர ஆய்வுரையைச் சொல்ல உவங்கள் என்ர வீட்டுக்கு முன்னால பானர் கட்டி முட்டையடிக்க அதால இஞ்ச முட்டை விலையேற ஏனுங்களுக்கு என்னால சிரமம்?

“எட கிருசு சும்மா நக்கல் நளினத்தை விட்டிட்டு சொல்லடா. நானும் கலட்டியில எடுத்து விடவெல்லோ வேணும்”

“அண்ண தேர்தலைப் பகிஷ்கரியுங்கோ எண்டு எங்கட சனத்தை கட்டுப்படுத்தாத வரைக்கும் அதுகள் தங்கட வாக்குகளைச் சரியாகத் தான் பாவிக்கும். 2015 இல நல்லாட்சி அரசாங்கம் அமையிறதுக்கு எங்கட வாக்குகள் தான் காரணம். இந்த முறை ரணில்-சஜித்-அநுரா எண்டு மும்முனைப் போட்டி வருமெண்டா எங்கட சனத்தின்ர வாக்குகள் தான் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் எண்டது உறுதி. அதால நாங்க ஒரு பொது வேட்பாளரைப் போடக்கூடாது. பொது வேட்பாளரைப் போடுறதும் தேர்தலைப் பகிஷ்கரிக்கிறதும் ஒண்டுதான். நான் யோசித்தது சஜித் கட்சிக்கு ஆதரவளிச்சால் நல்லது எண்டு. ஆனால் அவரும் ஜே.வி.பி. யைப் போல முன்னாள் இராணுவத்தினரைக் கட்சியில சேர்க்கிறதில இப்ப மும்முரமா இருக்கிறேராம். ராஜபக்ச ஆக்கள் போரைத் தாங்களே வெண்டதென்று சொல்லி வாக்குக் கேட்டாங்கள். ஆனா சஜித்தும் அநுராவும் போர் ஹீரோக்கள் எண்டு சொல்லி முன்னாள் ஆமிக்காரரை மேடையில நிறுத்தி அதே ராஜபக்ச அரசியலைத்தான் செய்யப்போறாங்கள். இப்பிடியான ச்சீப் பொலிற்றிக்ஸ் ரணில் விளையாடேல்ல. அதனால அந்தாளுக்கு வாக்களிக்கிறது பல வகையிலையும் நல்லது”

“அதுவும் சரிபோலத்தான் படுகுது புறோ “. வடிவேலர் கனடிய ஸ்டைலில் நெற்றி வியர்வையைத் துடைத்துவிட்டு “என்னெண்டுதான் இந்த வெக்கையிக்கை இருக்கிறீங்களோ தெரியாது” என்றவாறு ‘நைக்கீ’ நடையுடன் புறப்பட்டார்.