வடிவேலர் உலா: சிரி-தாண்டவம்
கிருஷ்ணானந்தா
ஃபோன் காலையிலேயே கதறத் தொடங்கிவிட்டது. வடிவேலர் தான். சஜித் பிரேமதாசவை தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் எனச் சுமந்திரனின் அறிக்கை வந்ததுமே அவர் ஃபோனை நோண்டத் தொடங்கிவிட்டார். நான் ஃபோனை எடுத்தாலென்ன எடுக்காவிட்டாலென்ன மனிசன் வந்திறங்கப்போவது நிச்சயம். மூன்று ‘மிஸ்ட் கோல்’. பார்த்துச் சிரித்துவிட்டு ஃபோனைக் கீழே வைப்பதற்குள் சிங்கன் கேட்டிற்கு வெளியே நின்றார்.
“என்னடாப்பா அவ்வளவு பிசியா? மூண்டு தரம் ஃபோன் எடுத்தன். ஆன்ஸர் இல்லை. என்னமோ ஏதோ எண்டு பயந்து போனன்”
“என்ன நீங்களும் ரணில் போல முதலைக்கண்ணீர் வடிக்கிறீங்க”
“எட இங்க பாரடா இவனை. போன கிழமை இவன் ரணிலைப் புகழ்ந்து பேசிபோட்டு இப்ப பல்டி அடிக்கிறான். நீயும் சுமந்திரன் மாதிரித்தான்” வடிவேலருக்கு கொஞ்சம் சுட்டுப் போட்டுது போல.
“என்னண்ணை சுமந்திரன்ர அறிக்கையைப் பாத்துக் கடுப்பாகீட்டீங்க போல”
“வேறென்ன, நீயும் தான் சொன்னனி தமிழரசுக் கட்சி ரணில் பக்கம் சாரும் எண்டு. இப்ப என்ன நடந்தது?”
“அண்ணை ஒண்டை வடிவாக் கவனியுங்க. அது சம்பந்தரையாவின்ர கூட்டமைப்பா இருந்தாலென்ன சுமந்திரனின்ர தமிழரசுக் கட்சியாய் இருந்தாலென்ன இவையெல்லாம் சொன்னபடி செய்யும் சுப்பர்கள் தான். இவையளின்ர மேய்ப்பர் டெல்ஹியிலதான் இருக்கிறார். மூண்டு முக்கிய வேட்பாளர்களின்ர தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவந்த பிறகுதான் நாங்க யாரை ஆதரிக்கிறது என்பதைத் தீர்மானிப்போம் எண்டு சும்மா பேருக்குத் தான் கட்சி சொன்னது . ஆனால் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது எண்டுதான் நான் நினைக்கிறன்”
“நீ என்ன புதுக் கதை பேசிறை. இந்தியா எப்பவும் ரணில் பக்கம் எண்டெல்லோ நான் நினைச்சன்?”
“ரணில் எப்பிடி தந்திரமான ஒரு ஆளெண்டு உங்களுக்குத் தெரியும்தானே. தென்னிலங்கையில தமிழர் எதிர்ப்பை விட இலகுவாக பத்தவைக்கக்கூடின நெருப்பு இந்திய எதிர்ப்பு. இது ஆயிரம் ஆயிரம் வருசமா அணையாத நெருப்பு. இந்த தேர்தலிலை கடைசி நேரத்தில அது வெளியில வரும் பாருங்க”
“அதுக்கும் தமிழரசுக்கட்சி சஜித்தை ஆதரிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அண்ணை இஞ்ச பாருங்க. இந்த தேர்தலில நாமலை இறக்கினதுக்கு என்ன காரணமெண்டு நீங்க நினைக்கிறீங்க?”
“எட அறுவானே எனக்கு இதுகள் தெரிஞ்சா சுமந்திரனுக்குப் பதிலா இப்ப என்ர அறிக்கையையெல்லோ நீ வாசிச்சிருப்ப. சரி சொல்லு”
“அண்ணை ரணிலுக்கு கிராமங்களில அதிகம் ஆதரவு இல்லை. அவர் ஒரு மேல்தட்டு கண்டி ராசா பம்பரை. நாமலுக்கு வழக்கமான ராஜபக்ச வாக்குகள் கிராமங்களில இருக்கு. நாமல் எலெக்சன் கேட்காவிட்டா அது எல்லாம் ஜே.வி.பி. க்குத்தான் போகும். அதை உடைக்கத்தான் ரணில்-ராஜபக்ச கூட்டம் நாமலை இறக்கினது”
“அப்பிடியெண்டா ரணில் என்னெண்டு வெல்லிறது?”
“நாமல் தன்ர வாக்காளாரின்ர இரண்டாவது தேர்வா ரணிலுக்கு போடும்படி சொல்லலாம். முதல் ரவுண்டில 50% +1 வாக்கு ஒருவருக்கும் கிடைக்கப்போறதில்லை. அதனால இரண்டாவது தேர்வு வாக்குகள் கட்டாயம் எண்ணப்படும். நாமல் வெல்லப்போறதில்ல. நாமலின்ர வாக்குச்சீட்டில இரண்டாவது தேர்வா ரணில் இருந்தா அவருக்கு விழுந்த அத்தனை வாக்குகளும் ரணிலுக்கு சேரும். இதனால ஜே.வி.பி. யைப் பலவீனமாக்கிற அதே வேளை நாமலின்ர ‘பலத்தையும்’ அறிய இது ஒரு சந்தர்ப்பம் தானே”
“ஓ நீ. அப்பிடி வாறயா?. அப்ப ஒரு கதைக்குக் கேட்கிறன், இதுக்குத் தானே தமிழ்க் கூட்டு அரியநேத்திரனையும் இறக்கினது. இதனால தமிழரின்ர பலத்தைக் காட்டலாம் தானே?”
“அரியநேத்திரனுக்கு வாக்களிக்கிறவையின்ர இரண்டாவது தேர்வு சஜித்தாக இருந்தா அது தமிழரசுக் கட்சிக்கு வெற்றி. ஆனால் அவையின்ர நோக்கம் எப்பவும் சுமந்திரனைத் தோற்கடிக்கிறதே தவிர சிங்கள வேட்பாளரை அல்ல. இல்லாட்டி புலம் பெயர்ந்த சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் இந்த தேர்தலுக்கு மட்டும் அரியநேத்திரனுக்கு 10 கோடி சேர்த்து அனுப்புவினமோ? போதாததுக்கு சிறீ வாத்தியும் லண்டனில இருந்து கோயில் காசைக் கொண்டுவரப் போயிருக்கு.”
“சிறீ வாத்தியைப் பத்திப் பிறகு வருவம். சஜித் தமிழருக்கு ஏதாச்சும் தீர்வைத் தருமோ. ஜே.வி.பி. யின்ர அனுராவும் ‘எல்லாருக்கும் சமத்துவம்’ எண்டு தானே சொல்லுது?
“தேசிய மக்கள் சக்தி எண்ட பெயர் வைக்கப்பட்டதற்கு காரணமே ஜே.வி.பி. யின்ர முந்தின இனத்துவேஷ செயற்பாடுகளை மறைக்கிறதுக்கு. என்னதான் சமத்துவம் பேசினாலும் ராஜபக்ச சுழற்றின அதே ‘போர்’ வாளைத்தான் ஜே.வி.பியும் சுழட்டுது. “13 ஆவது திருத்தத்தை நாங்கள் மீளப்பெறமாட்டம்” எண்ட அவரது வாக்குறுதி விஞ்ஞாபனத்தில இல்ல. சிலவேளை எலெக்சனில வெண்ட பிறகு அவை இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்மொழியலாம். என்ன இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தல் முடியும் மட்டும் அவங்கள் எந்த உறுதியையும் தரமாட்டாங்கள். அந்த விசயத்தில சஜித் ஒளிச்சு விளையாடேல்ல. மிச்சம் இந்தியாவின்ர கையிலதான் இருக்கு. 2015 தேர்தலில மட்டுமில்லை அரகாலயா புரட்சியையும் எப்பிடி அமெரிக்கா / இந்தியா செய்து காட்டினவை எண்டதை ஞாபகத்தில வைச்சிருக்க வேண்டும். கோதா நியமிச்ச ஊவா மாகாண கவர்னர் நிசாமிலையே இந்தியா சஜித் பக்கம் மாத்திவிட்டுது. கடைசி நேரத்தில ‘தமிழ் பொது வேட்பாளர்’ அரியநேத்திரனை வாபஸ் வாங்க வைச்சாலும் ஆச்சரியப்படாதேங்கோ. சிறி வாத்திக்கு லண்டனில வைச்சு இப்ப கனக்க வகுப்புக்கள் எடுக்கப்ப்ட்டிருக்கும் எண்டு நினைக்கிறன். இதில இன்னுமொண்டையும் கவனிக்க வேணும். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கையிலயும் வெளியிலையும் கனபேரோட கதைச்சிருக்கிறேர். புட்டினுக்கே ஆலோசனை சொல்லிற அந்தாள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில ‘ஆலோசனை’ சொல்லுது எண்டா நிலைமை எப்பிடி இருக்குமெண்டதை யோசிச்சுப் பாருங்கோ”
” அப்ப ரணிலுக்கு சான்சே இல்லை எண்டிறியா?”
“ரணில் மூண்டாம் இடத்தில இருக்கு. அவர் சொல்லிறது போல நாட்டைப் பாதுகாத்திட்டன் எண்ட சொல் இப்ப எடுபடாது. அவற்ற எடுப்பெல்லாம் மேற்கு மாகாணத்துக்குள்ள மட்டும்தான். அவர் விளையாடிற டபிள் கேம் கெதியில அம்பலத்துக்கு வரும். தேர்தலுக்கு முன்னம் அரசாங்கப் பணியாளருக்கு சம்பள உயர்வை அறிவிச்சது தேர்தல் விதியளுக்கு மாறானது. இதை மற்றவை சொல்லிறது நியாயம். ஆனா ரணில் சொல்லேலாது. எண்டாலும் கருத்துக் கணிப்பில அவர் இன்னும் கொஞ்சம் நகரவேண்டி இருக்குது. கருத்துக் கணிப்பில அனுரவுக்கு சஜித்தை விட இரண்டொரு வீதம் கூட இருந்தாலும் நான் சொன்ன இரண்டாம் தேர்வு வாக்குகள் அவரை இழுத்து விழுத்தவும் சான்ஸ் இருக்கு. இதே வேளை சஜித் தன்ர விஞ்ஞாபனத்தில சர்வதேச உதவியோட வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வ்ம் எண்டு சொன்னதை ‘இந்திய உதவியோட’ எண்டு ராஜபக்சக்கள் திருப்பி விட்டால் கடைசி நேரத்தில நாமல் தரப்போ அல்லது அனுரா தரப்போ இந்திய எதிர்ப்பு அலையில சஜித்தின்ர வாக்குகளை அள்ளிக்கொண்டு போகலாம். இங்கதான் தமிழரின்ர வாக்குகள் மிக முக்கியமாக இருக்கும்”
“அட கிருசு, இந்த ‘தமிழ் பொது வேட்பாளர்’ ஐடியாவே ரணிலின்ர எண்டு ஒரு பகுதி சொல்லுது. அது உண்மையே?”
“ரணில் இப்ப கொஞ்ச நாளா ‘பார் லைசென்ஸ்கள்’ , ‘பேர்மிட்டுகள்’, ‘எம்.பி. மாரின் தொகுதிகளுக்கு காசு’, ‘கவர்ணர் பதவி’ எண்டு கன விசயங்களைக் கையில வைச்சு சுழட்டிக்கொண்டு திரியுது. இதில் வீணி வடிக்கிற ஆக்கள் இல்லையெண்டு நான் சொல்ல மாட்டன். ஆனா சிங்கள மக்கள் தான் ரணிலை முதலை தண்ணிக்கு வெளிய கொண்டுவரவேணும். அதுக்குப் பிறகுதான் எங்கட ஆக்கள் அவரைக் கரையேத்தலாம். இன்னும் 12 நாள் இருக்கு எதுவும் நடக்கலாம். 2005 இல புறக்கணிச்ச மாதிரித் தான் இந்த பொதுவேட்பாளர் ஐடியாவும். அதுக்கும் காசு கைமாறினது. இதுக்கு கறவை மாடு கைமாறுது எண்டு சொல்லலாம்”
“அப்ப உன்ர நிலைப்பாடு இதில என்ன, சொல்லு”
“என்ர முதலாவது சொய்ஸ் சஜித், இரண்டாவது அனுரா. ரெண்டு பேருக்குமே ஆட்சி அனுபவமில்லை. ஆனா, ரணில் , ராஜபக்ச குழுக்களைப் போல இல்லாம ரெண்டு பேரிட்டையும் படிச்சவங்கள் இருக்கிறாங்கள். ஊழலை ஒழிக்கிறதில அனுரா முன்னிலையில இருக்கு. இனப்பிரச்சினை விசயத்தில சஜித் முன்னிலையில இருக்கு. நாடு கேடு கெட்டுப் போனதுக்கு ஊழலும் இனப்பிரச்சினையும் தான் காரணம். இவங்களில அனுரா வந்தால் சர்வதேசத்துக்கு சந்தோசமில்லை. அதனால பிரச்சினை தொடரும். எண்டபடியால் தர்க்க ரீதியாக சஜித்தே தமிழ் மக்களின்ர தீர்வாக இருக்குமெண்டு நம்புறன்”
“உன்னை ஒருநாளும் நான் வெல்லிற பக்கம் கண்டதில்ல. பாப்பம்”. வடிவேலர் வழக்கமான நக்கலோடு புறப்பட்டார்.
