Columnsகிருஷ்ணானந்தா

வடிவேலர் உலா: கூத்தாடிகள் தினம்

“நல்ல காலம். வடிவேலருக்கு இன்னும் காயங்கள் ஆறவில்லை. அதனால் முற்றவெளிக்கு அந்தாள் போகவில்லை. இல்லாவிட்டால் அந்தாள் முடிஞ்சிருக்கும் ” என்று எனக்குள் நினைத்துக்கொண்டு வடிவேலரின் படலையைத் திறந்து உள்ளே போனேன். விறாந்தைப் படியில் இருந்து பிளேன் டீ குடித்துக்கொண்டிருந்தார் வடிவேலர். கையிலும், தலையிலும் கட்டுகள் இன்னும் இருந்தன.

“என்ன வடிவேலர். ஒருமாறித் தேறிவிட்டீங்க போல. எதுக்கும் முத்தவெளிப் பக்கம் ஒருக்காப் போய் உடைஞ்ச கதிரைகளையும் கிழிஞ்ச செருப்புக்களையும் பாத்திட்டு வருவமோ?” நான் நக்கலாகக் கேட்டேன்.

“எனக்கு மட்டும் இந்த அடி விழேல்லையெண்டா ..” வடிவேலர் கறுவினார்.

“ஏனண்ணை எங்கட பெடியள் பெட்டையள் செய்ததும் தப்புத் தானே?”

“தப்போ. செய்தது காணாது” வடிவேலர் காறித் துப்பினார்.

“அண்ணை, யாழ்ப்பாணம் முத்தவெளி எப்பிடியான ஆக்களைக் கண்ட ஒண்டு. அந்தக்காலத்தில மல்யுத்தம், குத்துச்சண்டை, மாட்டுச் சவாரி எண்டு எத்தினையோ. பல்லாயிரக் கணக்கான சனம் திரளும். அங்கால விண்ட்சர் தியேட்டரில முத்தையா எண்ட அந்தக்கால ‘இவெண்ட் புறோமோட்டர்’ சுந்தராம்பாள் போல ஆக்களைக் கொண்டுவந்து நிகழ்ச்சிகள் வைக்கும். ஆனா அப்பெல்லாம் இப்பிடி ஏதும் நடந்ததாக நான் கேள்விப்படேல்ல”

“அப்ப கஞ்சாவோ அல்லது ஹெரோயினோ இருந்திருக்காதெண்டு நினைக்கிறன்” வடிவேலர் சிரித்தார்.

“அதுவும் உண்மைதான். ஆனால் இப்பத்த யாழ்ப்பாணம் பழைய யாழ்ப்பாணம் இல்லை. இது அப்பிடியே கனடா தான். அங்கதான் இந்த வி.ஐ.பி. விளையாட்டு, சோஃபா போட்டு வைன் குடுக்கிறது எல்லாம். கொஞ்சம்காசு வைச்சிருக்கிற ஆக்களட்டக் காசு பறிக்கிறதுக்கெண்டு இந்த ‘இவெண்ட் புறொமோட்டர்கள்’ செய்யிற அட்டகாசம். அங்க பொலிஸ் இருக்குது. பிறைவேட் செக்கியூறிட்டி இருக்குது பிரச்சினை இல்லை”

“யாழ்ப்பாண நாட்டின்ர தலைநகரம் நாடு கடந்து போய் ரொறோண்டோவிலை எல்லோ இருக்கெண்டு சொல்லினம். பனர் கட்டி முட்டை எறியிறதெண்டாலும் அங்க இருந்துதான் ஓர்டரும் காசும் வரவேண்டி இருக்கு. ஆனால் கிருசு, இங்க இப்ப தமன்னாவைக் கொண்டுவந்ததும் கனடாக் காரன் தானே. எண்டபடியால் அந்த வியாதி இங்கயும் தொத்திவிட்டுது போல”.

“உண்மை தான். கனடாவில தான் முதன் முதலில இந்த கூத்தாடிகளோட படம் எடுக்கிறதுக்கு எண்டு காசு வாங்கினவங்கள். அங்க போற தமிழ்நாட்டுக்காரரும், எஸ்.பி. பாலா போல ஒரு சில கலைஞர்களைத் தவிர, அவங்கள் எப்பிடியான பிரபலமான கலைஞராக இருந்தாலும், கூட்டிக்கொண்டு வந்தவங்களின்ர கைகளையும் வாய்களையும் பாத்துக்கொண்டு நிப்பாங்களாம். விடிய 3 மணிக்கு கதவைத் தட்டி தோசை கேப்பாங்களாம். நடன ரீச்சர்மார் சில வாத்தியக்காரரை மொத்த குத்தகைக்கு எடுத்து சில்லறை விழாக்களுக்கு வாடகைக்கு விட்டு கூடக்காசு சம்பாதிச்சுப் போடுவினமாம். அதனால வியாதி அங்க இருந்துதான் இங்க தொத்தினது எண்டதை நான் ஒப்புக்கொள்கிறன்”

“எல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட் கேசுகள் எண்டு சொல்லிற”

“உண்மை தான் வடிவேலர். எங்கட சனமும் 30 வருசப் போரினால மனங்கள் வரண்டுபோய்க் கிடக்குதுகள். யாழ்ப்பாணத்தில ஓட்டல்களும், கொன்வென்சன் செண்டர்களும், கல்யாண மண்டபங்களும் பெருகின அளவுக்கு பொழுதுபோக்கு வசதிகள் எண்டு ஒண்டும் வளரேல்ல. அதனால தான் மூத்திர ஒழுங்கையள் தங்கட தொழிலை இப்ப கஞ்சாவுக்கு மாத்திட்டிதுகள். ஏவாள் குழுக்கள் தங்கட கேரள சப்ளையைக் குறையவிடமாட்டினம். என்னதான் யாழ்ப்பாண மேயர்கள் ரொறோண்டோ போய் மேய்ஞ்சுபோட்டு அளவெடுத்துக்கொண்டு வந்தாலும் யாழ்ப்பாணத்தின்ர கால்வாய் வாசம் கடந்த 75 வருசமா அப்பிடியேதான் இருக்கு. இப்பத்தான் ஒரு இளம் பெடியன் வாரவிடுமுறையில ‘சற்றடே நைட் லைஃப்’ எண்டொரு இரவுச் சந்தையை நடத்திறான். அதுக்கும் முனிசிபாலிட்டியின்ர கெடுபிடிகள் கூட”

“அப்ப நீ என்ன சொல்லிற? இந்திரன் எண்ட பெடியன் செய்தது சரியோ? பிழையோ?”

“இந்திரன் எண்டவர் ஒரு பெரிய தொழில் அதிபர். அநேகமான நடிகைகள் தொழில் அதிபர்களைக் கல்யாணம் கட்டிறதுக்குக் காரணம் நடிகைகள் அல்ல. எல்லாப் பணகாரரின்ரயும் இரண்டாவது பசி ‘அது’ தான். அவர் இங்க வந்தது யாழ்ப்பாணத்தை முன்னேற்றவெண்டு அவரும் சொல்லேல்ல. அவருக்கு இது பிசினஸ். இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இது தேவை. இந்திய ‘மொசாட்டின்ர’ ஆலோசனை இல்லாம இது நடந்திருக்க வாய்ப்பில்லை. போர் முடிஞ்ச கையோட யாழ்ப்பாணத்து ஆக்கள் வாய்களை மூடினாத்தான் கைகளில விழும் எண்டிறதுக்குப் பழகிப்போட்டினம்”.

“என்னவோ இந்திரன் சொல்லிறதின்படி 1 இலட்சத்துக்கு மேல சனம் வந்திருக்குது. இலங்கையின்ர மற்ற பகுதிகளில இருந்தும் சனம் வந்திருக்குது எண்டினம். ஆனா அதுக்குரிய பாதுகாப்பு வசதிகளை இந்திரன் செய்யேல்ல. அவருக்கு இப்பிடி விழாக்கள் செய்து அனுபவமில்லை. கொந்திராத்துக்காரர் கொழும்பில இருந்து வந்த ஒருவராம். அவர் கொழும்பில இருந்து செக்கூறிட்டி குண்டர்களை (பவுண்சர்கள்) கொண்டுவந்திருகிறேர். அவங்கள் தான் பொடியளை முதலில் அடிச்சவங்களாம். அதானால் இந்திரன் மேல்தான் முழுப்பழியும் போகோண்டுமெண்டு சனம் சொல்லுது. இப்பிடியான நேரங்களில கிறவுட் கொண்ட்றோல் வழிகளை முதலிலை ஆராய்ஞ்சிருக்க வேணும். “இதென்ன யாழ்ப்பாணம் தானே” எண்டு இந்திரன் நினைச்சிருக்கலாம். கூத்தாடிகளுக்கும் கிறவுட் சத்தம்போட்டு விசிலடிக்கிறது நல்லாப் பிடிக்கும். அது சர்வதேச கலாச்சாரம் மட்டுமில்ல வருகிற ஆக்களையும் பொறுத்தது. எஸ்.பி. பாலா, கங்கை அமரன் போல ஆக்களும் இதே முத்தவெளியில நிக்ழ்ச்சி வைச்சவை தானே. அப்ப ஒருவரும் மரமேறிப் பாக்கேல்ல”

“சரி ஒரு கதைக்கு, நிகழ்ச்சி தொடங்கிறதுக்கு சில நாட்களுக்கு முன்ன ஒரு பெரியவர் ‘யஃப்னா பிரெஸ் கிளப்’ மைக்குகளுக்கு முன்னால ஒரு துள்ளு துள்ளினேரே பாத்தியா? அது பெடியளை உசுப்பேத்தியிருக்குமெண்டு நினைக்கிறியா?

“இருக்கலாம். யாழ்ப்பாணத்தின்ர கலாச்சாரக் காவலர்கள் எண்டு, கதைக்கத் தெரிஞ்ச, அத்தனை ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களும் வெளிக்கிட்டிருக்கினம். பிரச்சினை இல்ல. ஆனால் இவைதான் மக்களின்ர பாதுகாவலர் எண்டு வகுப்பெடுக்கிறதுதான் பிழை. எதுக்கெடுத்தாலும் 30 வருச போர்க்கால அமைதியோட ஒப்பிடுவினம். அப்ப கலாச்சாரத்தைத் துவக்குகள் தான் காத்தன. இப்ப அவை இல்லை. அப்பிடியிருந்தும் அந்த பெரியவரின்ர எச்சரிக்கையையும் மீறி ஒரு லட்சமில்ல இருபதினாயிரம் வந்திருந்தாலும் அவர் சொன்னது தவறுதான். இயக்கம் வளர்த்த சமூகம் பற்றிப் பெரிதாப் புழுகுகிறார் ஆனா அங்க சரத் வீரசேகரா தமிழரைக் கொண்டு சிங்கக் கொடிகளைப் பிடிச்சுக்கொண்டு ஊர்வலம் போறான். அவங்களை எச்சரிக்க இந்த கலாச்சாரக் காவலர் பயப்படுகினம். இது தான் நிலை.

“அந்தப் பெரியவர் சொன்னதிலயும் விசயம் இருக்குத்தானே கிருசு. உந்த வெளிநாட்டுக் காசு தானே தமன்னாவோட படம் எடுக்கக் குடுபட்டது. இந்திரன் சந்தனம் மெத்தினதால இப்பிடிச் செய்யிறார் எண்டா இவங்களுக்கு என்ன மதி?”

“இது முழுவதுக்கும் யாழ்ப்பாண அரசியல்வாதிகளைத் தான் குறை சொல்லுவன். அந்த இளசுகளுக்கு என்ன பொழுதுபோக்குகளை இவங்கள் செய்து குடுத்திருக்கிறாங்கள்? சனி, ஞாயிறுகளில அதுகள் எங்க போகிறது? ஏதாவது விளையாட்டுகள் இருக்குதா அல்லது உள்ளூர் கலை நிகழ்ச்சியள் இருக்குதா? இந்த மேயர் மாரும், முன்னாள் முதலமைச்சரும் வந்த காசைத் திருப்பி அனுப்பிபோட்டு வாயளந்துகொண்டு திரிகினம்”

வடிவேலர் அங்காலும் இங்காலும் திரும்பிப் பார்த்துவிட்டு “எட கிருசு நீயும் என்னப் போல அடிவாங்கிச் சிரமப்பட வேணாம். பார்த்துப் பேசு. ஆராவது கேட்டிட்டு கனடாவுக்கு கோல் எடுத்து கோள் மூட்டிவிடப் போறாங்கள்” என்றார். அவர் சொல்வதிலும் நியாயம் இருகிறதாகப் பட்டது. புறப்பட்டுவிட்டேன். (Image Credit: India Glitz)