Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

வடிவேலர் உலா: கட்சிக்கு வந்த சோதனை

“என்ன கிருசு. தெரியாதமாரிப் போற” வடிவேலரின் குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். அடையாளம் காணமுடியவில்லை. தலை முதல் கால் வரை வெள்ளைத் துணிகளால் சுத்திக் கட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு பிரேதம் எழும்பி நடந்து வருவதைப்போல இருந்தது.

“நல்லாய்ச் சாத்திப்போட்டாங்கள்” அவரே சொன்னார்.

“ஏனண்ணை, யாரந்த ….மக்கள்?”

“எல்லாம் உன்ர தமிழரசுக்கட்சியாலதான்? நான் வாற மாதம் கனடாவுக்குப் போகப்போறனெண்டு தெரியும், அப்பிடியிருந்தும் கட்சி ஏன் அவசரப்பட்டுத் தலைவர் தேர்தலை வைச்சது?. இது எனக்கு அடிவாங்கித் தரவேண்டுமெண்டு செய்தமாதிரியல்லோ இருக்குது” வடிவேலர் முனகினார்.

“கட்சி தொடங்கின காலத்தில இருந்து அது பொதுத் தேர்தல் எண்டா என்ன உட்கட்சித் தேர்தல் எண்டாலென்ன சாராயத்தை தெருவில அள்ளிக்குடிக்கலாம் எண்டு தெரியாதோ? நீங்களும் சும்மா இருந்திருக்க மாட்டியள்” நான் அவரைத் தடவப் பார்த்தேன். உடம்பையே கண்டுபிடிக்க முடியவில்லை.

“எட கிருசு. நான் இந்த சுமந்திரனுக்காக நாலு வார்த்தை சொல்லிப்போட்டு இங்கால திரும்பேல்ல கல்லொண்டு வந்து சரியாக நெத்தியைப் பொத்தி அடிச்சுப்போட்டு காலிலை விழுந்து ரெண்டு விரல்களையும் நாசம்பண்ணிப் போட்டுது. எறிஞ்சவன் நல்ல அனுபவசாலியாக இருக்கோணும்.”

“அப்பிடி சூடா என்ன சொன்னீங்க?”

“பாரடா கிருசு. யாழ்ப்பாணத்துக்கு இரணமடுத் தண்ணியைக் குடுக்கமாட்டனெண்டு சொல்லிற ஒருவரை என்னெண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக்கலாம்?. வேணுமெண்டா கிளிநொச்சிக் கிளைக்குத் தலைவராக்கியிருக்கலாம். இவ்வளவும் தான் சொன்னனான். சுத்தி நிண்டதுகள் எல்லாம் வயசு போனதுகள். அதுகளுக்கு எங்க கேக்கப்போகுது எண்டு கொஞ்சம் மெதுவாத்தான் சொன்னனான். அப்பிடியிருந்தும் ஆரோ ஒருவன் அம்பிளிஃபயரைக் கொண்டு திரிஞ்சிருக்கிறான்”

“அண்ணை என்னெண்டாலும் தேர்தல் ஜனநாயக முறையில நடந்தது. முடிவை சுமந்திரனும் ஒத்துக்கொண்டு நாகரிகமாக சிறிதரன்ரை கையைதூக்கித் ‘தலைவா’ எண்டு நக்கலாக அவர் விரும்பிய பட்டத்தைக் குடுத்துப்போட்டுப் போயிட்டுது. தலைவரும் நேரே போய் உறங்கும் மாவீரரிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்குப் போய் மீண்டும் கூட்டமைப்பில 22 எம்.பி.மாரை எலெக்ட் பண்ணிறதுக்கான வேலையை ஆரம்பிச்சிட்டார். அதில இப்ப என்ன பிழை?”

“சரி சுமந்திரன் தோத்ததுக்கு என்ன காரணம் எண்டு நினைக்கிற?”

“அண்ணை, சுமந்திரனை இந்த தமிழ்த் தேசியம் எப்பவோ கம்பத்திலை கட்டிவிட்டுது. சிறிதரன் தான் தமிழ்த் தேசியத்தின்ர உண்மையான மறுபிறப்பு எண்டு புலம்பெயர் தமிழர்கள் தீர்ப்பளிச்சு பத்து வருசங்களுக்கு மேலாகிவிட்டுது. போதாததுக்கு அவரை அமெரிக்காவுக்கு கூட்டிவந்து குளிச்சாட்டி அனுப்பியிருக்கினம். பண ஆதரவும் மக்கள் ஆதரவும் இருக்கிற அவர் தலைவராக வாறதில என்ன பிரச்சினை?”

“பணம் இருந்தால் மக்கள் ஆதரவை வாங்கிவிடலாம் எண்டது நல்லாய்த் தெரியும் கிருசு. ஆனா அதுக்காகத் திறமை இல்லாத ஒருவரை எப்பிடியடா தமிழருக்குத் தலைவரா அனுப்பிறது. போதாததுக்கு அந்தாளுக்கு இங்கிலீசும் தெரியாது”

“பாராளுமன்றத்தில மொழிபெயர்ப்பு இருக்குது தானே. வெளிநாட்டுத் தூதுவர்களோட பேசிறதுதான் பிரச்சினை. கெதியெண்டு வெளிநாட்டில இருந்து ஒரு அன்ரன் பாலசிங்கத்தை அந்தாள் இறக்கும். வாத்தியை அண்டர் எஸ்டிமேட் பண்ணீராதையுங்கோ வடிவேலர்”

“இந்த சுமந்திரனும் ஒரு கிறுக்குப் பிடிச்ச ஒரு ஆள் தான். சைக்கிள் தலைவர் மாதிரி சும்மா உசுப்பேத்திறதுக்காகவெண்டாலும் தமிழ்த் தேசியத்தை எடுத்துச் சுழட்டியிருக்கலாம். வெளிநாட்டுக் காசு சும்மா வந்து கொட்டியிருக்கும்”

“அண்ணை, சுமந்திரன் பிறந்த பலன் என்னவோ அந்தாளுக்கு திரும்பிற இடமெல்லாம் எதிரியள். அதுக்கு காரணம் அந்தாளின்ர வித்துவச் செருக்கு. அந்தாள் கார் இம்போர்ட் பண்ணி விக்கேல்லை; கிளிநொச்சியிலயோ, யாழ்ப்பாணத்திலையோ பார்கள் திறந்து சாராயத்தை இளசுகளுக்கு வித்துப் பிழைக்கேல்ல. அப்பிடியான குணங்களை இருக்கிற ஒரு ஆள் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது. இப்ப பாருங்கோ இந்த கூட்டமைப்பில தலைவர் கொண்டுவந்து சேர்த்துவிட்டுப்போன ‘ஒட்டுக்குழுக்கள்’ பாவம் அதுகளுக்கு ஆங்கிலம் வராது ஆனா தமிழ் நல்லா வரும் நீட்டி முழங்கித் திட்டிறதுக்கு இருக்கிற ஒரே ஒரு ஆள் சுமந்திரன் தான். இவையள் பிரிஞ்சு நிக்கிறதுக்கு சுமந்திரந்தான் காரணம் எண்டு சிறிதரன் கீழால வெட்டி ஓடினது சனத்துக்குத் தெரியாது. அதனால தான் தன்ர தலைமையில இவையளை எல்லாம் திரும்பக் கூட்டிவருவன் எண்டு அந்தாள் முழங்குது. அது நடக்குமெண்டால் திரும்பவும் 22 எம்பி மார் கூட்டமைப்பில இருக்கலாம். புலம்பெயர் தமிழரின்ர காசு எதையும் சாதிக்கும். ஆனபடியால கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பம்”

“சரி அப்ப வெளிநாட்டுக்காரரோடயோ அல்லது சிங்களத் தலைவர்களோடயோ இனி யார் பேசுவினம? சிறிதரன் சுமந்திரனைத் தான் தொடர்ந்தும் அனுப்புவாரோ? அதுக்கு சுமந்திரன் உடன்படுமெண்டு நினைக்கிறியோ?”

“அண்ணை, காசுக்காற புலம்பெயர்ந்த தமிழர் என்ன சொல்லினமோ வாயைப் பொத்திக்கொண்டு ஃபலோ பண்ணிறதை மட்டும்தான் சிறிதரன் செய்யவேணும். அவையப் பொறுத்தவரையில சிங்களவனோடயோ அல்லது வெளிநாடுகளோடயோ பேசிப் பிரயோசனமில்லை. இனப்படுகொலை செய்த கூட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தில நிறுத்தி தண்டனை வாங்கிக் குடுக்கிறதுதான் அவையளின்ர நோக்கம். இவ்வளவு நாள் எல்லாரோடும் கதைச்ச சுமந்திரனால அதைச் சாதிக்க முடியேல்ல. அதனாலதான் இப்ப அவை சிறீதரனைக் கொண்ணந்திருக்கினம்”

“அப்ப இந்தப் ‘பிரகடனம்’?”

“பிரகடனம் கட்டையேறும் போலத்தான் இருக்கு. “சிறீதரன் தலைமையில விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் நடைபெறப்போகிறது” எண்டு வீரவன்ச கொம்பனியை வைச்சு ராஜபக்சக்கள் குளறப்போறாங்கள். அவங்கள் முக்கி முக்கித் தேடிக்கொண்டிருந்த ‘எதிரி’ இப்ப சிறீதரன் வடிவிலை கிடைச்சிருக்கு. புலம்பெயர்ந்த வீரவான்களின்ர குரலாக இருக்கப்போகும் சிறீதரன் ‘பிரகடனத்தை’ எதிர்த்தேயாகவேணும். அதனால ‘பிரகடனத்தின்ர’ ஆயுள் கொஞ்சம் மத்திமம் எண்டே எனக்குப் படுகுது.

“அப்ப கிளிநொச்சியில இருந்து தேசியக் கொடிகள் பதாகைகளோட வாகனப் பேரணி புறப்படப்போகுது எண்டு சொல்லிற?”

“அண்ணை உடம்பெல்லாம் மூடிக்கட்டிப்போட்டு உங்கட வாய மட்டும் விட்ட அவங்களுக்குத் தான் நல்லாக் குடுக்க் இருக்கு”

வடிவேலர் நொண்டிக்கொண்டு போனார்.