கிருஷ்ணானந்தா

வடிவேலர் உலா: கடனால் சூழ்ந்த இலங்கை (ஒரு கடன் வகுப்பு)

கிருஷ்ணானந்தா

மட்டக்களப்பு மீன் வாங்கப் போய்விட்டு வரும் வழியில் மடக்கிப் பிடித்துவிட்டார் வடிவேலர்.

“என்ன நான் அறிமுகப்படுத்திவிட நீ சின்னக்கடை மீன்காரியோட நெருக்கமாகிவிட்டீர் போல”, நக்கலடித்தார்

“இல்ல வடிவேலர் மீனமைச்சர் டக்கர் இப்ப சீனாவுக்கு எங்கட கடற்கரையளை குடுத்ததால வடக்கில மீன்பிடி குறைஞ்சுபோச்சு. யாழ்ப்பாணத்து மட்டை வேலியளெல்லாம் இப்ப அட்டையளை மறிச்சுக்கொண்டு கடலுக்க நிக்குது. இதனால மீனவரெல்லாம் பட்டினி. நான் மீன் வாங்க மட்டக்களப்புக்கெல்லோ போயிட்டு வாறன்”

“நான் நினைச்சன் உன்னைக் கனடாவுக்கு கூப்பிட்டிட்டாங்கள் எண்டு. சம்மர் எண்டா அங்க சனத்தைக் கூப்பிட்டு பொன்னாடை போத்தி வடிவான அன்ரி மாரோட படம் எடுத்தா அங்கிள்மார் ஸ்பொன்சர் பண்ணுவினம் எண்ட வித்தைய ஆரோ கண்டுபிடிச்சிட்டாங்கள். நீயும் மேடையில பேசிறனிதானே. அதுதான் யோசிச்சன்”

“பாப்பம். அடுத்த வருசம் ட்றை பண்ணுவம். இப்ப எங்கால போறியள்?”

“அட கிருசு உன்னைக் கண்டு கனநாளாப் போச்சு. விட்டா இனி எப்பவோ தெரியாது. எனக்கொரு விளக்கம் சொல்லு தம்பி. இந்த சுமந்திரன் அண்டைக்கு பாராளுமன்றத்தில என்னவோ DDO, EPF எண்டெல்லாம் கத்திச்சுது. அந்தாள் கத்தினா அதில விசயமிருக்கும். அது என்னவேண்டு ஒருக்கா விளங்கப்படுத்துவியா, நல்ல பிள்ளை இல்லே”

“அது பெரிய விசயமண்ணே. விளங்கப்படுத்திறதெண்டா ஒரு நாளெடுக்கும். அதுக்குள்ள மீன் பொரியலாகிவிடும். எண்டாலும் சுருக்கமாச் சொல்லுறன். அதுக்கு முதல்ல இதில பாவிக்கிற கொஞ்ச ஆங்கிலச் சொல்லுகளுக்கு விளக்கம் தந்தாத்தான் உங்களுக்கு கூடுதலாக விளங்கும்.

“Creditors எண்டு சொன்னா இலங்கைக்கு கடன் கொடுத்த வெளிநாடுகள் எண்டு சொல்லுவம். தனியாட்களும் குடுக்கிறவைதான். கடன் வாங்கிறவையை debtors எண்டு சொல்லுவினம். இலங்கை அரசாங்கம் மே 2022 இல கடன்காரருக்குக் கையை உயத்தினது ஞாபகமிருக்கோ? அதுவந்து இப்பிடியான சின்ன creditor காரருக்கு. அதைச் சொல்லுறது default எண்டு. 2022 இல இலங்கையின்ர வெளிநாட்டுக் கடன் US $ 7 பில்லியன். இதை External Debt Obligation (EDO) எண்டு சொல்லுவினம். இதில முக்கிய பெரிய கடன் குடுத்த நாடுகள்: சீனா 52%, யப்பான் 19%, இந்தியா 12%. மிச்சமெல்லாம் சில்லறை நாடுகள். சரிதானே”

“இப்ப விளங்க வெளிக்கிடுகுது. சொல்லு”

“இதைவிட International Soverign Bond (ISB) எண்டு ஒண்டிருக்கு. தமிழில அரசாங்க பண முறி எண்டு சொல்லுவினம். விளங்குதோ?”

“கொஞ்சம் தடக்குது. அதையும் சொல்லன். படிச்சிருந்தா நான் எங்க இருந்திருப்பன்”

“ISB எண்டிறது இலங்கைக்கு மட்டும் சொந்தமெண்டில்லை. உலக நாடுகள் தாம் வெளிநாடுகளிடமோ அல்லது உள்நாட்டு / வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தோ கடன் வாங்குவதானால் தமது அரசாங்க உத்தரவாதத்துடன் ஒரு ‘பற்றுச்சீட்டு / நோட்டு’ ஈடாகக் கொடுத்து அந்தப் பணத்தைப் பெறுகின்றன. முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமானால் அவை தாம் அதிக வட்டி தருகிறோமெண்டு உத்தரவாதம் கொடுக்கவேணும். தனியாட்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ பணம் கடன் தருவதைவிட நாடுகளுக்கு கடன் தருவது முதலீடுகளுக்குப் பாதுகாப்பானது. எனவே ISB பணமுறிகளுக்கு செல்வாக்கு அதிகம். ராஜபக்சக்களும் அவர்களது நண்பர்களும் வெளிநாடுகளில் தாம் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை இப்படியான இலங்கை அரச பணமுறிகளில் முதலீடு செய்திருந்தார்கள். இலங்கை மற்றவர்களுக்கு default பண்ணியதுபோல் செய்யாமல் அவர்களது காசை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தது எண்டும் ஒரு கதை உண்டு.

“இதே வேளை, மே 2022 இல இலங்கை அரசாங்கம் default பண்ணினவுடனே இவைக்கு சர்வதேச வங்கிகள் கடன் குடுக்க மறுத்துவிட்டினம். ஆனா இவைக்கு வெளிநாடுகளில இருந்து அத்தியாவசிய உணவு, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யிறதுக்கு அமெரிக்க டொலரில காசு தேவை. இதை Foreign Reserve (வெளிநாட்டுச் செலாவணி) எண்டு சொல்லுவினம். அதைக் கொண்டுவந்தது சுற்றுலாத்துறை, ஏற்றுமதித்துறை, வெளிநாட்டு இலங்கைக் கூலியாளர் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் போன்றன. கோவிட் இது எல்லாத்திலயும் மண்ணை அள்ளிப் போட்டதனால இந்த வெளிநாட்டுச் செலவாணி மார்ச் 2022 இல் US$ 1.6 பில்லியன்னுக்குக் குறைந்துவிட்டது. இதனால இறக்குமதியளைக் குறைச்சினம், இந்தியா, சீனா, பங்களாதேஷ் எண்டு பல நாடுகளிடமும் கடன் வாங்கிச்சினம். இருந்தாலும் இதுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு வேணும் எண்டதால IMF இட்ட ஓடிச்சினம்”

“சரி தம்பி. இதை அவை ஏன் முதலிலேயே செய்திருக்கலாம் தானே? ஏன் கடசிவரைக்கும் இருந்தவை?”

“அண்ணை, சிங்களவங்களுக்கு IMF எண்டா அது அமெரிக்கா எண்டுதான் சொல்லி வளர்த்திருக்கிறாங்கள். அதே வேளை இந்த மந்தையளை மேய்க்கிற வீரவன்ச போண்டவங்கள் சீனாவின்ர கைக்குள்ள. சீனா தன்ர கடனைக் குடுத்து இலங்கையை அமுக்கிறதுக்காக அதைச் செய்தது. வட்டியைக் கட்டுறதுக்கே கடன் குடுத்தது. இப்ப விளங்குதே ஏன் ரணிலைக் கொண்டுவந்தவங்களெண்டு? ரணிலுக்கு பல நாக்குகள். மடக்கிப் போடும். இப்ப IMF US$ 3 பில்லியன் கடன் குடுக்க உடன்பட்டிருக்கு. ஆனா ஒரு கொண்டிசன். Debt Restructure பண்ண வேணும். இதில வெளிநாட்டுக் கடன்களை External Debt Restructure எண்டும் உள்நாட்டுக் கடன்களை Domestic Debt Restructure எண்டும் சொல்லுவினம்”

“கொஞ்சம் சிலோ பண்ணு கிருசு. இந்த restructure எண்டா என்ன?”

“சரி சொல்லுறன். நீங்க ஒரு ஆளிட்ட, 20% வட்டியில 10 இலட்சம் ரூபா அவசரக் கடனாக வாங்கியிருக்கிறீங்க எண்டு வைப்பம். 5 வருசத்தில அதைக் கட்டி முடிக்கிறதாக எடுத்திருக்கிறீங்க. திடீரெண்டு உங்களுக்கு சுகவீனம் வந்து வேலை செய்யேலாமப் போயிட்டுது எண்டு வைப்பம். கடன் தந்தவனும் யோசிப்பான். அப்ப நீஙக ரெண்டு பேரும் கலந்தாலோசிச்சு சில முடிவுகளை எடுக்கலாம். ஒண்டு வட்டி வீதத்தைக் குறைக்கலாம். அல்லது 5 வருசமெண்டதைப் 10 ஆக்கி மாதாந்தக் கட்டுப்பணத்தைக் குறைக்கலாம். அல்லது முதலில் கொஞ்சத்தைக் குறைத்து அதனால மாதக் கட்டுப்பணத்தைக் குறைக்கலாம். இதை haircut எண்டு சிலேடையாகச் சொல்லுவினம். ஒட்டுமொத்தமாக இந்த மொத்தக் கடன் மீதான நிபந்தனைகளை மாற்றி மறுசீரமைக்கிரதைத்தான் restructuring எண்டு சொல்லுவினம்.”

“இப்ப விளங்குது. அப்பிடியெண்டா இலங்கை முதலில சீனா, இந்தியா, யப்பானிட்டப் போகோணும்”

“கெட்டிக்காரன். இலங்கை இப்பிடிக் கேட்கிறதுக்கு முதலிலேயே இந்தியாவும் சீனாவும் இலங்கையின்ர காலில விழுந்திட்டினம். அவைக்கு வேற இன்றெஸ்ட். அதைப் பிறகு பாப்பம். சீனா கொஞ்சம் அடம்பிடிச்சுது. போன சனிக்கிழமை அதுவும் இணங்கிட்டுது எண்டு கேள்வி. IMF இன்ர அடுத்த நிபந்தனை DDS, Domestic Debt Restructure. இங்கதான் உங்கட சுமந்திரன் வாறேர்.”

“எட அந்தாளால தானே நானே இதை அறியவேணுமெண்டு நிக்கிறன். மற்றக் கட்சிக்காறருக்கு நான் வகுப்பெடுக்கலாமில்ல?”

“இந்த Domestic Debt Obligation (DDO) எண்டிறது உள்ளூர்க்காறரிட்ட இலங்கைக் காசில வாங்கின கடன்களுக்கு அல்லது உள்ளூர்க்காரர் தமது சேமிப்பில் வைச்சிருக்கும் பணத்திற்கு வழங்கும் வட்டியைக் குறைத்தால் அரசாங்கத்தின் கஜானாவில காசுப்புழக்கம் அதிகமாக இருக்கும்”

“இதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு”

“சரி. உங்கட சேமிப்பு எங்க இருக்கு?”

“சரியடாம்பி அதைவிட கஜேந்திரகுமாரின்ர காசு எங்க வைச்சிருக்கு எண்டு கேளன். ஏன் பிச்சைக்காரனை இழுக்கிற”

“சரி கஜேந்திரகுமாரின்ர காசு ஒரு Micro Finance நிறுவனத்தில வைச்சிருக்கெண்டு சொல்லுவம். இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் நகை நட்டை வைச்சு வட்டிக்கு இந்த நிறுவனத்தில கடன் எடுக்குதுகள் எண்டு வைப்பம். அல்லது வங்கிகளிலும் அவரைப்போல ஆக்களின்ர காசு வட்டி உழைச்சுக்கொண்டிருக்குது எண்டு வைப்பம். இந்த DDS திட்டத்தில இப்படியான சேமிப்பாளருக்கு குடுக்கிற வட்டியைக் குறைக்க வேணும். அதுகூடப் பறுவாயில்லை. Employee Pension Fund (EPF) எண்டு சுமந்திரன் பாராளுமன்றத்தில போட்டுக் கிழி கிழி எண்டு கிழிச்சதைக் கேட்டிருப்பீங்க”

“அந்தாள் ரெண்டு சொல்லுக்கு ஒருக்கா அதைத்தான் சொன்னது, நாசமறுந்தது விளங்கேல்லையே”

“அதாவது ஒரு அரசாங்க வேலையாள் அல்லது ஒரு வாத்தியார் உழைச்ச சம்பாத்தியத்தில கொஞ்சத்தை அரசாங்கம் எடுத்து தானும் கொஞ்சம் அதில சேர்த்து அவர் ஓய்வு பெறுகிறவரைக்கும் சேமிக்கிற பணத்தை என்ன செய்யுது எண்டு நினைக்கிறியள்?”

“எங்கையாவது வட்டிக்குக் குடுத்தா நல்லது”

“அதைத்தான் செய்தது. அந்த வட்டி உழைச்சுப் பெருக்கின காசைத்தான் அந்த வாத்தியாருக்கு பென்சனாக மாதா மாதம் அரசாங்கம் குடுக்குது. இந்த சேமிப்புக்குக் குடுக்கிற வட்டியையும் குறைக்கச் சொல்லுது IMF”

“அதனால அரசாங்கத்துக்கு என்ன லாபம்?”

“இலங்கையில 14 பேருக்கு ஒரு அரசாங்க அதிகாரி இருக்கிறார் எண்டு சொல்லுறாங்கள். இவைக்குக் குடுக்கிற சம்பளம் உள்நாட்டு செலவாணி (கஜானா) யில இருந்துதான் போகுது. வருமான வரி, VAT, எக்ஸைஸ் வரி எண்டு அரசாங்கம் எடுக்கிற காசே பற்றாக்குறை. ராஜபக்ச ஆக்களே வரி கட்டிறேல்ல. ஊழல் ஆபிரிக்க நாடுகளைவிட மோசம். எனவே பென்சனுக்கு குடுக்கிற வட்டியை குறைச்சால் கஜானாவில காசு தேறும். பாவம் அரசாங்க உத்தியோகத்தர்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் வங்கிகளில வைச்சிருக்கிற பணத்துக்கு குடுக்கிற வட்டியை அரசாங்கம் குறைக்காமல் ஏழை அரசாங்க உத்தியோகத்தர்களின்ர பைகளிலதான் கைய வைக்குது எண்டதைதான் சுமந்திரன் பேசினவர்”

“பேசாம அமெரிக்கா செய்யிறமாதிரி ரூபாக்களை அச்சடிச்சு இதைச் சமாளிக்க ஏலாதோ?”

“அதைத்தான் மோட்டு கோதாபய ராஜபக்ச செய்தது. அதனால பணவீக்கம் அதிகரிச்சு சனம் தெருவில லைனில நிண்டுது. ரணிலும் அதையே செய்திருக்கும். இது IMF இன்ர நிபந்தனையாகவெல்லோ போயிட்டுது. இதில இன்னுமொரு விசயம் எல்லா சிங்கள அரசாங்கங்களும் செய்யிறது பண்டங்களின்ர உணமையான விலையைவிடக் கழிவு விலையில குடுத்து சனங்களின்ர வாக்குகளை எடுக்கிறது. இதை நிப்பாட்டிறதெண்டா அரசாங்கம் மக்களின்ர மடியிலதான் கைவைக்கவேணும். பாராளுமன்றதில இதுபற்றின வாக்கெடுப்பிலதான் சுமந்திரன் பேசினது. ஆனா ராஜபக்சவின்ர கட்சி இதுக்கு ஆதரவாகத்தான் வாக்களிச்சிருக்கு. நாமலும், தகப்பனும் மட்டும் தாங்க தொழிலாளர் பக்கம் எண்டு டூப் விடுகிறதுக்காக வக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. கலந்துகொண்டு எதிர்த்து வாக்களிச்சிருந்தா உண்மையில் தொழிலாளருக்காக நிக்கிறாங்கள் எண்டு சொல்லலாம்”

“அப்ப இந்த IMF இன்ர நிபந்தனையள் வெற்றி பெற்று இலங்கை மீளவும் கடனால் அல்லாது கடலால் சூழப்படுமெண்டு நினைக்கிறியோ?”

“2032 வரை அது சந்தர்ப்பம் குடுத்திருக்கு. அதுக்குள்ள இலங்கை சீனாவால் சூழப்பட்டுவிடுமெண்டே நான் நினைக்கிறன்”

“அதுசரி ஏதோ நாத்தம் வருகுது. மீனாகத்தானிருக்கும். கொண்டோடு” என்றபடியே தனது சைக்கிளில் விரைந்தார் வடிவேலர். (Image Credit: DailyFT/ Wasantha Seniviratne)