வடக்கை வளர்க்கும் இளம் தொழில்முனைவோர்

வளரும் வடக்கு – 02

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது – ஆசிரியர்

கொழும்பில் தொழில்முனைவோருக்குப் பஞ்சமில்லை. திரும்புமிடமெல்லாம் கோப்பிக் கடைகளும், தொழில் வழிகாட்டிகளும், முதலீட்டாளர்களுமென அது வேறொரு உலகம். நமது கைவிடப்பட்ட வடக்கில்?

போரின் இடிபாடுகளிடையேயிருந்து மெதுவாக எழுந்துவரும் நமது வடக்கிலும், ‘இங்கும் இருக்கிறோம்’ எனப் பிரகாசிக்கும் இளைய நட்சத்திரங்களைத் தேடி நீங்கள் எங்கும் போகத் தேவையில்லை. அவர்கள் உங்கள் முன் நிற்கிறார்கள்.

ஸ்ராலினி, சிந்துஷ், அந்த நீங்கள் தேடும் அவர்களில் இருவர். ஸ்ராலினி கடந்த சில வருடங்களாகத் தனது நிறுவனத்தைக் கட்டியெழுப்பி வருகிறார். சிந்துஷ், ஐந்து மாதங்களுக்கு முன், பாடசாலையிலிருந்து கல்லூரிக்குப் போகும் அந்த இடைவெளியில், தனது தொழில் முயற்சியில் இறங்கினார். உள, உடல், நிதி ஆதரவு வழங்கப்படுமாயின் இவர்கள்தான் தேங்கியிருக்கும் வடக்கின் பொருளாதாரத்தை மீண்டும் செழிக்கவைக்கப் போகிறவர்கள்.

ஸ்ராலினி ராசேந்திரம்

ஸ்ராலினி ராசேந்திரம்

ஸ்ராலினி ராசேந்திரத்தை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலம் கற்கும் குழந்தைகளின் அமைப்பைப் பார்க்கச் சென்றபோது நான் சந்தித்தேன். ஸ்ராலினி தான் அக்குழந்தைகளின் ஆசிரியர். அவரின் கொப்புளிக்கும் உற்சாகம் அந்த ஐந்து வயதுக் குழந்தைகளை மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்திருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு நான் ஸ்ராலினியைச் சந்தித்து செவ்வி காணும்போதுதான் அவரை நான் முதன் முதலாக அறிய முடிந்தது.

ஸ்ராலினி, ஐந்து பிள்ளைகளைக் கொண்ட வறிய குடும்பத்தில் பிறந்தவர். நாளுக்கு ஒரு தடவைதான் அவருக்குச் சாப்பாடு கிடைக்கும். இன்று, அதிர்ச்சி தரும் வகையில், அவர் புதுமைகளைத் தேடும் ஒரு தொழில் முனைவர். அவரது விவசாய நிறுவனம் ஆடுகள், வாத்துக்கள், மிருகங்களுக்கான இயற்கை உணவுகள், இயற்கை உரங்கள், பூச்சிகளை விரட்டும் மருந்துகள் (நொதிக்க வைத்த மாட்டின் சிறுநீருடன் இலை குழைகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது) எனப் பல வழிகளில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகிறது.

தனது வியாபாரப் பயணத்தின் ஊக்கிகளாக, ஸ்ராலினி இருவரைக் கூறுகிறார். இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற மருத்துவர்கள் – டாக்டர் பிரபு மற்றும் டாக்டர் சிறிபவன். இருவரும் தற்போது தமது வைத்தியத் தொழிலை விட்டுவிட்டு தொழில்முனைவோராக மாறியிருக்கிறார்கள். இம் மருத்துவர்களைச் சந்திக்கும்வரை தான் ஒரு குளத்துத் தவளையாக இருந்தேன் என்கிறார் ஸ்ராலினி. இந்த இரு மருத்துவர்களின் ஊக்குவிப்பும் ஆலோசனைகளும் பரந்த உலகத்தைத் தனக்குத் திறந்துவைத்தன என்கிறார் அவர்.

பாடசாலைக் கல்வியை முடித்ததும் ஸ்ராலினி வியாபார முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா கல்வியைக் கற்று 2014 இல் தேறினார். இக்கல்வியில் தேறியதும் அவருக்கு வங்கியொன்றில் பயிற்சிப்பணியாளராக வேலை கிடைத்தது. ஸ்ராலினி அதை எடுத்துக்கொள்ளவில்லை. தான் ஒரு தொழிலை ஆரம்பிக்கப்போவதாக அவர் தனது பெற்றோரிடம் கூறிவிட்டார்.

வங்கி வேலையொன்றை உதறித் தள்ளிவிட்டுத் தொழிலை ஆரம்பிக்கப் போகிறேன் என்று கூறும் ஒரு பிள்ளைக்கு யாழ்ப்பாணப் பெற்றோரின் பதில் என்னவாகவிருக்கும்? ஸ்ராலினி எதிர்பார்த்த பதில் அவரது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கவில்லை. மாறாக, ஸ்ராலினியின் பெற்றோர் அவரது தொழில்முயற்சிக்கு ஆதரவு வழங்கியதோடு, அவரது திட்டங்களைப் பரீட்சிக்க இரண்டு வருட கால அவகாசமும் கொடுத்தார்கள்.

கல்லூரியை முடித்துக்கொண்டவுடன், இரண்டு மருத்துவர்களும் 2010 இல் ஆரம்பித்த சுவடி என்னும் பெயருடைய சமூக தொழில் முயற்சி ஸ்தாபனத்தில் ஸ்ராலினி இணைந்தார். சுவடியில் அவரது முதல் பணி பகுதி நேர ஆசிரியை. வாரவிடுமுறையில் அவர் கற்பிக்கும் குழந்தைகளுக்கான பாடசாலயொன்றில் தான் நான் ஸ்ராலினியைச் சந்தித்தேன். மலேசியாவுக்கு ஒரு மாத ஆசிரியப் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது முதன் முதலாக வாத்து இறைச்சியைப் சாபிட்டார். அதன் சுவையில் மயங்கிய அவர் யாழ்ப்பாணத்திலும் ஒரு வாத்துப் பண்ணையை நிறுவ உத்தேசித்தார்.

யூ-டியூப்பில் வாத்து வளர்ப்புமுறைகளைக் கற்ற ஸ்ராலினி, ஐந்து வாத்துக்களுடன் தனது தொழில் முயற்சியை ஆரம்பித்தார். அது இப்போது 300 ஆகப் பெருகியிருக்கிறது. கோழிகளைப் போல், கடையில் வாங்கிய உணவுக்காக வாத்துக்கள் காத்திருக்காமல் தமது உணவைத் தாமே தேடிப் பெறுவது ஸ்ராலினிக்கு மிகவும் உதவியாகப் போய்விட்டது. அத்தோடு, கோழிகளுக்குப் போல மருந்துகளும், அண்டிபயோட்டிக்ஸ் போன்றவைகளும் வாத்துக்களுக்குத் தேவையில்லை. இதனால் வாத்தின் இறைச்சி, முட்டைகள் மிகவும் சுகாதாரமானவை என்கிறார் ஸ்ராலினி.

ஸ்ராலினி மிகவும் விவேகமான, இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெண் என்பதை அவரைச் சந்தித்து 10 நிமிடங்களில் ஒருவரால் புரிந்துகொள்ள முடியும்.

2016 இல் அசோலா (azolla) என்னும் பன்னத் தாவர வளர்ப்பை ஆரம்பித்தார். 2017 இல் CO3 புல், டக்வீட் (Duckweed) ஆகிய தாவரங்களியும் பயிரிட ஆரம்பித்தார். நீரில் மிதக்கும் இத் தாவரங்கள் மிக வேகமாகப் பரவக்கூடியன. கால்நடைகளுக்கான மிகவும் போஷாக்கைத் தரும் இவ்வுணவுத் தயாரிப்பிற்கு முதலீடே தேவையில்லை. இதற்காக இரண்டு சதுர மீட்டர் தடாகமொன்றை அவர் அமைத்திருக்கிறார். இதில் வளரும் அசோலா 10 ஆடுகளுக்கு உணவளிக்கிறது.

அசோலா அறுவடை

2018 இல் ஸ்ராலினி மண்புழுப் பண்ணையொன்றை ஆரம்பித்தார். மண்புழுக்களின் கழிவு சிறந்த கரிமப் பசளையாகும் (organic fertilizer). பலவிதமான இலைச் சாறுகள், உள்ளிச் சாறு போன்றவற்றிலிருந்து பூச்சி விரட்டிகளைத் தயாரிக்கிறார். பசுவின் சிறுநீரை நொதிக்கவைத்து (fermenting) தாவரங்களுக்குப் பசளையாகப் பாவிக்கிறார்.

இரண்டு மருத்துவர்கள் மற்றும் அவரது சகபாடி மூர்த்தி ஆகியோருடன் இணைந்து மன்னாருக்கு அருகிலுள்ள அடம்பன் என்னுமிடத்தில் கரிம நெல்லைப் பயிரிடுகிறார். இந் நெல்லுக்குத் தேவையான நைதரசனை அசோலா வழங்குகிறது. அசோலா நீரின் மேல் மிதப்பதால் களைகள் வளர்வதையும் தடுத்துவிடுகிறது.

தற்போது அடர்த்தியாக வளரும் (Ultra High Density) முருங்கையினத்தையும், அதிகளவு பாலைத் தரும் சானென் இன ஆடுகளையும் (இப்போது அவரது பண்ணையில் 11 சானென் ஆடுகள் உண்டு) வளர்க்கும் பரீட்சார்த்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஸ்ராலினி.

2019 இல் ஸ்ராலினி, தான் கற்ற விவசாயப் புதுமைகளை இதர விவசாயிகளுக்கும் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறார். இவரது பண்ணையைப் பார்த்த வட மாகாண விவசாயத் திணைக்களம், இம் முயற்சிகளை இதர விவசாயிகளுக்கும் பயிற்றுவிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தது. தற்போது 20 – 30 விவசாயிகளுக்கு, ஒரே நேரத்தில், இலவசமாகப் பயிற்சிகளை வழங்குவதற்கான விளம்பரங்களைத் தனது சமூக வலைத் தளங்களின் மூலம் மேற்கொள்கிறார். பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் இவரது பண்ணைக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தங்கள் வீடுகளில் அசோலாவைப் பயிரிடுவதன்மூலம் வீட்டிலுள்ள கால்நடைகளுக்குத் தீனியை வழங்கலாமென அவர்களுக்கு ஸ்ராலினி அறிவுரை வழங்குகிறார். இதன் மூலம் பாலுற்பத்தியை அதிகரிக்கமுடியுமென அவர் காட்சிப்படுத்துகிறார்.

அவரது எதிர்காலத் திட்டங்கள் என்னவென நான் ஸ்ராலினியிடம் கேட்டபோது, சரியான முதலீட்டாளருடன் இணைந்து தான் ஒரு விவசாய நிலத்தை வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் குத்தகைக் காணிகளில் விவசாயத்தை விஸ்தரிப்பதால் வரும் தலையீடுகளையும், நிபந்தனைகளையும் தவிர்த்துக்கொள்ள அவர் விரும்புகிறார். உற்பத்தி பெருகுமானால் தான் தனது உற்பத்திகளையும் செய்முறைகளையும் ஏற்றுமதி செய்ய விரும்புவதாகக் கூறுகிறார் ஸ்ராலினி.

விஜயசூரியா சிந்துஜன் (சிந்துஷ்)

சிந்துஜனை நான் ஒரு நாள் எதேச்சையாகச் சந்தித்தேன். ஒருநாள், சமைப்பதற்குப் பஞ்சியாக இருந்தபோது “வாய்க்கு ருசியான உணைவை வாசலுக்குக் கொண்டுவந்து தருவதாக” வந்த முகநூல் விளம்பரமொன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாமென வேகவைத்த கோழி இறைச்சி (barbecued chicken) உணவுக்கு ஓர்டர் கொடுத்தேன்.

விஜயசூரியா சிந்துஜன்

ஓர்டர் எல்லாம் ‘வட்ஸப்’ மூலம் நடைபெற்றபடியால் கூகிள் என் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது. இல்லையெனில், தமிழ் தெரியாத எனக்கு தொலைபேசியின் மூலம் டிலிவரி பையனுக்கு வழி சொல்லியிருக்க முடியாது. எனது ஓர்டர் கிடைத்ததற்கான உறுதிமொழியும் உடனேயே வந்துவிட்டது. சற்று நேரத்தில் உணவு வந்துகொண்டிருக்கின்றது என்ற செய்தியும் வட்ஸப்பில் வந்தது.

சொல்லப்பட்ட நேரத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாக ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் என் இருப்பிடத்துக்கு முன்னால் நின்றார். முழுமையான நடைமுறையும் நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தது. அவரது சேவையை மதித்து மேலதிக பணமாக (tips) ஆக நல்ல தொகையொன்றைக் கொடுத்தேன். அவர் அதை மரியாதையாக மறுத்துவிட்டார். நல்ல ஆங்கிலத்தில் அவரது பதில் இருந்தது. அவர் பணிபுரியும் வியாபார நிறுவனத்தைப்பற்றிக் கேட்டேன்.

தன் பெயர் சிந்துஷ் என்றும் ‘யாழ் ஈட்ஸ்’ (Yaarl Eats) என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் அதில் பணிபுரியும் மூன்று பணியாளர்களில் தானும் ஒருவர் என்றும் கூறினார். பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் மரத் தொழிலாளியும், எலெட்றீசியனுமான ஒருவர் தனது சமையல்காரர் எனவும் கொழும்பில் அவர் சமையல் தொழிலைக் கற்றார் எனவும் சிந்துஷ் கூறினார். இன்னுமொரு பள்ளிக்கூட நண்பன் டிலிவரிகளுக்கு உதவுகிறார் எனவும் தெரிவித்தார்.

செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரி முன்னாள் மாணவரான சிந்துஷ், அவரது பெற்றோர்களைத் திருப்திப்படுத்துவதற்காக விரைவில் ஒரு பட்டப் படிப்பை ஆரம்பிக்கவிருக்கிறார். ஆனால் சிந்துஷுக்குத் தனது சொந்த தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடுவதுதான் விருப்பம். பெற்றோர்களுக்கு அதில் உடன்பாடில்லை. பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கு முன் தன் ஆசையை நிறைவேற்ற, நான்காயிரம் ரூபாய்களோடு, மே மாதம் 2020 யாழ் ஈட்ஸ் ஐத் தொடங்கினார். தொடங்கி 5 மாதங்களுக்குள், யாழ் குடாநாட்டுக்குள், ஆயிரத்துக்கு மேலான டிலிவரிகளைச் செய்துவிட்டார்.

This image has an empty alt attribute; its file name is BBQ-Chicken.jpg

ஏன் உணவுத் தொழிலில் ஈடுபட்டாய் என நான் சிந்துஷைக் கேட்டபோது “நல்ல உணவு, நல்ல சேவை, நல்ல விலை என்பவற்றைத் தரக்கூடியதாக எல்லோராலும் இத் தொழிலைச் செய்ய முடியாது. அதனால் இதை முயற்சி செய்தேன். இது இலகுவான தொழிலல்ல. தவறுகளுக்குப் பெரிய விலைகொடுக்கவேண்டி வரும். சுகாதாரம், தரம், திருப்திகரமான சேவை எனப் பல விடயங்களைக் கவனிக்க வேண்டும். சமூக வலைத் தளங்கள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும் அதே வேளை விமர்சனங்களும் கொடிகட்டிப் பறக்கும். உரிய நேரத்தில் உணவு விநியோகம் செய்யப்பட்டவிட்டால் எரிச்சலுறும் வாடிக்கையாளர் உணவைப் பெற மறுத்துவிடலாம். அத்தோடு சமூக வலைத் தளங்களில் எதிராகப் பிரசாரம் செய்யலாம்” என்கிறார் சிந்துஷ்.

இளைஞர்களுக்கு அவர் சொல்லக்கூடிய புத்திமதி என்னவென்று சிந்துஷிடம் கேட்டேன்.

  • எல்லாமே கடுமையான உழைப்பில்தான் தங்கியிருக்கிறது. கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம்
  • இளமையாக இருக்கும்போது உடலில் அதிக வலுவிருக்கும், எனவே இலகுவான தொழில்களை நாடக்கூடாது
  • வாழ்க்கையைப் போலவே, வியாபாரத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவற்றையும் எதிர்கொண்டு வாழப்பழகிக்கொள்ள வேண்டும்
  • தவறான வழியில் செல்லும் நண்பர்களை விலத்திக்கொள்ளுங்கள்
  • உங்களுக்கு உதவிகளிச் செய்து நல்வழிப்படுத்தும் நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்

சிந்துஷின் மிக முக்கியமான புத்திமதி – நல்ல வழிகாட்டியைத் தேர்ந்தெடுங்கள் என்பதே. அவரது வழிகாட்டியாக இருப்பவர், பிரபல மொறட்டுவ பல்கலைக்கழகப் பட்டதாரியான றொஸ்ஸி ஹரிந்த். றொஸ்ஸி நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை அமைச்சில் பொறியியலாளராகப் பணிபுரிகிறார். அதே வேளை, யாழ். கராத்தே பாடசாலை (Jaffna Karate School (JKS) என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். றொஸ்ஸியின் JKS பாடசாலையில் தான் தனது ஒழுக்கத்தையும், அவதானத்தையும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் சிந்துஷ்.

சிந்துஷின் நண்பர்கள் நேர்த்தியாக உடையணிந்து வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணிபுரியப் போவதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் ஏங்குகிறார்கள். அடுத்த வருடமே சிந்துஷ் அவரது கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்கவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். விரைவில் படிப்பை முடித்து சேட்டும், ரையும் கட்டிக்கொண்டு அவரும் கொழும்பில் ஒரு வேலைக்குப் போய்த் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தான் விரைவில் கல்வியை முடித்துக் கொழும்பில் வேலை பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பின்னர் திரும்பி வரும்வரை தனது வியாபாரத்தைத் தனது சகோதரர் மற்றும் நண்பர்களிடம் கொடுத்துவைக்கப் போவதாகக் கூறுகிறார் சிந்துஷ்.

(Originally published in Lanka Business Online, translated with the author’s consent)