வடக்கு பாகிஸ்தானில் அதி பழைய புத்த கோவில் கண்டுபிடிப்பு

வரலாறு

கெளதம புத்தரின் மரணத்துக்குச் சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டப்பட்டதாகக் கருதப்படும் புத்த கோவிலொன்றின் இடிபாடுகளை வடக்கு பாகிஸ்தானிலுள்ள சுவட் பள்ளத்தாக்கில் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருளாராய்ச்சியாளர்களின் குழுவொன்று கண்டுபிடித்திருக்கிறது.

காந்தாரம் என மகாபாரத காலத்தில் அழைக்கப்பட்ட, வடக்குப் பாகிஸ்தானிலுள்ள இப்பகுதி மகா அலெக்சாந்தரின் ஆட்சியில் இருந்த காலத்தில் பெளத்த கலாச்சாரத்துக்கும் கிரேக்க கலைக்குமிடையே எழுந்த புரிந்துணர்வின் காரணமாக இரண்டு கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன எனக் கருதப்படுகிறது.

மகெடோனிய மன்னனான மஹா அலெக்சாந்தர் – கி.மு. 336 முதல் கி.மு.323 வரை – 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலத்தில் தற்போதைய பால்கன் பிரதேசம் முதல் பாகிஸ்தான் வரை தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருந்தான். அப்போது அவனது பாதையில் அகப்பட்ட அனைத்துக் கலாச்சாரங்களும், பெருமழிவுகளுடன் மாற்றியமைக்கப்பட்டன. அவன் விட்டுச்சென்ற தடங்களில் பின்னர் கிரேக்கர் தமது சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக்கொண்டனர் என வரலாறு கூறுகிறது. பாகிஸ்தானில் தற்போதுள்ள பரிகொட் என்ற இடத்திலும் சுவட் பள்ளத்தாக்கிலுள்ள காந்தாரம் என்னுமிடத்திலும் அலெக்சாந்தரின் ஆட்சியின்போது கிரேக்க கட்டிடக்கலையை அடிப்படையாகக்கொண்டு பல புத்த கோவில்கள் கட்டப்பட்டன எனக் கூறப்படுகிறது. இவற்றில் பல கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.

கி.மு 563 முதல் கி.மு. 483 வரையிலான காலத்தில், தற்போது நேபாளம் எனப்படும் வட இந்திய பிரதேசத்தில் சித்தார்த்த கெளதம எனப்படும் கெளதம புத்தர் வாழ்ந்திருந்தார். கெளதம புத்தர் மறைந்து இரண்டு, மூன்று நூற்றாண்டுகளின் பின்னர் காந்தாரத்திலும் அதை அண்டிய தற்போதைய ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா போன்ற பிரதேசங்களிலும் பெளத்த கலாச்சாரம் வெகுவாகப் பரவியிருந்தது.

பாகிஸ்தானின் சுவட் பள்ளத்தாக்கில் 1955 இலிருந்தும், தற்போதைய நகரமான பாறிகொட் என்னுமிடத்தில் 1984 இலிலுமிருந்தும் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இவ்வாராய்ச்சிகளின்போது பாறிகொட்டில் அவர்கள் 10 அடி உயரமான வழிபாட்டு மேடையைக் கொண்ட புத்த தூபியொன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். துறவிகள் தங்கும் சிறிய அறை, உயரமான தூண், பழைய வீதியொன்றைப் பார்த்தபடி இருக்கும் பொதுமக்களுக்கான முற்றம் ஆகியனவும் இவ்வகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத் தொல்பொருட்கள் மீதி இன்னும் கார்பன் திகதி நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தனது எதிர்பாருப்புகளின்படி காந்தாரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த தடயங்களில் இதுவே மிகப்பழைமையானதாக இருக்குமெனத் தான் நம்புவதாகவும் வெனிஸ் சா ஃபஸ்காரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருளாராய்ச்சியாளர் லூகா மரியா ஒலிவேரி தெரிவித்துள்ளார்.

இவ்வகழ்வுகளுடன், நாணயங்கள், ஆபரணங்கள், முத்திரைகள், பானை ஓடுகள், கல வேலைப்பாடுகள், சிலைகள், கல்வெட்டுக்கள் என 2000 த்துக்கும் அதிகமான தடயங்களையும் தாம் கண்டெடுத்துள்ளதாகவும் ஒலிவேரி தெரிவித்துள்ளார்.

மஹா அலெக்சாந்தர்

மஹா அலெக்சாந்தரின் குறிப்புகளில் பாரிகொட் ‘பஜிரா’ அல்லது ‘பெய்ரா’ என்னும் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. கி.மு. 327 இல் அலெக்சாந்தரால் கைப்பற்றப்பட்ட காந்தாரம் ராச்சியம் அதற்கு முன்னர் மஹாபாரதம் குறிப்பிடும் வஜ்ஜிர மன்னன் என்பவனின் ஆட்சியில் இருந்தது எனப்படுகிறது. மஹாபாரதம் கி.மு.9-8 நூற்றாண்டுகள் காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.

மஹா அலெக்சாந்தர்

கிரேக்க நாட்டின் ஒரு பகுதியான மகெடோனில் பிறந்த அலெக்சாந்தர் கிழக்கு நோக்கிய படையெடுப்பின்போது முதலில் பாரசீக சாம்ராஜ்யத்தை (கி.மு. 334) வென்றபின் வட மேற்கு இந்தியா வரை (கி.மு.326) சென்றான் எனவும் பின்னர் அவனது படைகள் தம் நாட்டுக்குத் திரும்பவேண்டுமென வற்புறுத்தியதும் வேறுவழியின்றி திரும்பி வரும்போது கி.மு.323 இல் பாபிலோனில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் அவனுக்கு மலேரியா தொற்றியிருக்கலாமெனச் சிலரும் அவன் நஞ்சுக்குப் பலியாகினான் எனச் சிலரும் கருதுகிறார்கள். அவனது மரணத்துக்குப் பிறகு அவனது படைத்தலைவர்கள் அவனால் வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசங்களைத் தமக்குள் பிரித்துக்கொண்டார்கள். இதனால் காந்தாரத்தின் வடக்குப் பிரதேசமான பக்ட்றியா கிரேக்க அரசர்களால் ஆளப்பட்டது. அதே வேளை காந்தாரம் பிரதேசம் சில காலத்துக்கு மெளரியர் (இந்திய) ஆட்சிக்குள் சென்றிருந்தது. பக்ட்றியாவில் ஆட்சி செய்த கிரேக்க அரசர் மெனாண்டர் I இன் காலத்திலேயே (கி.மு.165) புத்த சமயம் அங்கு வேரூன்றிவிட்டது என ஒலிவேரி கூறுகிறார்.

இதன் பிறகு சுவட் பள்ளத்தாக்கு என இப்போது அழைக்கப்படும் பிரதேசம் முழுவதும் புத்த சமயம் பரவியிருந்தது, குறிப்பாக கி.பி. 30 முதல் கி.பி. 400 வரையிலான குஷான் சாம்ராஜ்ய காலத்தில் காந்தாரம் கிரேக்க-பெளத்த கலாச்சாரம் மிகப் பிரபலமாக இருந்தது எனப்படுகிறது. கிரேக்க கலைகளைப் பிரதிபலிக்கும் பெளத்த கட்டிட நிர்மாணங்கள் இக்காலத்தில் பிரபலமாகவிருந்தன.

காந்தாரத்தின் காலநிலை உவப்பாக இருந்த காரணத்தால் வருடத்தில் இரண்டு தடவைகள் அறுவடை செய்யக்கூடியதாக இருந்தது எனவும், இதனால் அங்கு பெறப்படும் அறுவடைகளை அலெக்சாந்தர் தனது படைகளுக்க்கு உணவாகாப் பாவித்தான் எனவும் அதன் பின்னர் அவன் இந்தியாவுக்குள் தனது நகர்வை மேற்கொண்டான் எனவும் அங்கு அவனது குடிவின் ஆரம்பம் காத்திருந்தது எனவும் கூறப்படுகிறது.,