IndiaNews & AnalysisSri Lanka

வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்களுடன் இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் வடக்கு கிழக்குத் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பு

சமத்துவம், நீதி, சமாதானம், கண்ணியம் ஆகியவற்றுடன் வாழவேண்டுமென்ற தமிழ் மக்களின் நியாயமான அபிலாட்சைகளை வழங்குவோம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மீண்டும் நினைவுறுத்தினார் இந்திய உய்ர ஸ்தானிகர் சிறீ கோபால பாக்லே.

வடக்கில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து உரையாடியபோது ” அதிகாரப் பகிர்வு ஒன்றின் மூலமே நல்லிணக்கம், சமாதானம், ஒன்றிணைந்த முன்னேற்றம், நாட்டின் ஸ்திரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.

வடக்கில் அவர் மேற்கொண்ட பல சந்திப்புகளின்போது தலைவர்கள் பலரும் வடக்கின் உட்கட்டுமானம், பொருளாதார முதலீடு, நிதி உதவியுடன் கூடிய அதிக அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திகளையும், மக்களின் தேவைகளையும் குறித்து அவர்களது பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை இந்தியா தொடர்ந்து கருத்திலெடுத்துச் செயற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் 13, 2021 முதல் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் உயர் ஸ்தானிகர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்த்தித்து வருகிறார். இன்று அவரது வருகையின் மூன்றாவது நாளாகும்.

அவர் மேற்கொண்ட முதலாவது சந்திப்பின்போது, 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதில் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கடைப்பிடுத்து வருவதற்காக, ஈ.பி.டி.பி. கட்சி பா.உ. குலசிங்கம் திலீபன் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அபிவிருத்தி உதவிகளைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில், செல்வம் அடைக்கலநாதன் (TELO), சித்தார்த்தன் (PLOTE), சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாணசபையைச் சேர்ந்த இளம் கவுன்சிலர்கள் உள்ளிட்ட்ட 15 பேர் வடமாகாணத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி இந்திய உயர் ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தனர். தண்ணீர் விநியோகம், நகர் சுத்திகரிப்பு, கல்வி, தொழிற் பயிற்சி, சுகாதாரம், விவசாயம், தகவற் பரிமாற்றம், மீன்பிடி ஆகிய துறைகளில் இந்தியாவின் ஆழ்ந்த ஈடுபாடு அவசியமெனப் பல ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கட்சி), அனந்தி சிறிதரன், வேந்தன், கதிர் (ஜனநாயகப் போராளிகள்) மற்றும் ஐங்கரநேசன் (பசுமைத் தாயகம்) ஆகிய 8 பேரைக் கொண்ட குழுவொன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உயர் ஸ்தானிகரைச் சந்தித்து வட மாகாணத்துக்குத் தேவையான அபிவிருத்திகள் பற்றிக் கலந்துரையாடினர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வகுமார் கஜேந்திரன் ஆகியோர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான விடயங்கள் பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கைகளை இந்திய உயர் ஸ்தானிகருக்குத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பா.உ. சாணக்கியன், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கிளைத் தலைவர் குகதாசன் ஆகியோரையும் உயர் ஸ்தானிகர் சந்தித்துப் பேசியிருந்தார். கிழக்கு மாகாணத்திலும் இந்தியாவின் தொடர்ச்சியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஸ்தானிகர் அவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.