வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத் தளங்கள் அகற்றப்படமாட்டாது - கமால் குணரட்ன -

வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத் தளங்கள் அகற்றப்படமாட்டாது – கமால் குணரட்ன

நவமபர் 30, 2019

பாதுகாப்புச் செய்லாளர் கமால் குணரத்ன

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக, வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை எனப் புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஆர். சம்பந்தனின் சமீபத்திய அறிக்கையைக் குறிப்பிட்டு, “அரசியல் (தமிழ்) கட்சிகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் தேசியப் பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டாது” என அவர் தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் தொழுகையை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்தபோதே அவர் அதைத் தெரிவித்தார்.

“நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் செய்யப்படும் நல்ல காரியங்களைத் தாம் வரவேற்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியிருந்தார். புதிய அரசாங்கத்தின்கீழ் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக நிறைய விடயங்கள் சாதிக்கப்படும். எனவே இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதே சரியான விடயம்”.

“தனியே காரியங்களைச் செய்வதைவிட, மற்றய கட்சிகளுடன் சேர்ந்து அபிவிருத்திகளை மேற்கொள்வது நல்லது. அது செயல்களை இலவாக்கும். இவ் விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ச இதர கட்சிகளிடமிருந்து பெறும் ஆதரவு வரவேற்கத்தக்கது. பிராந்தியக் கட்சிகள் ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆதரிப்பதன் மூலம் அங்கு நடைபெறும் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தலாம். போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுப்பதற்கு அதுவே சிறந்த பாதை”

ஆனாலும் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது எனப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

“இராணுவத் தளங்கள் அப் பகுதிகளில் இருப்பதால் கெட்டது எதுவும் நடந்துவிடப் போவதில்லை. போர்க் காலத்தில் இராணுவத்தினர் நோயாளிகளைக் கூட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். வடக்கு, கிழக்கில் மாணவர்கள் க.பொ.த. பரீட்சை எழுதுவதற்கு இராணுவத்தினர் வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதே போன்று நாம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்வோம். இன, மத வேறுபாடுகள் அங்கு இருக்கமாட்டாது. நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே,புத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, வயோதிப, இளைய குடிமக்கள் அனைவருக்கும் நாம் சேவை செய்யக் காத்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள தொன்மைகளையும், தொல்பொருட்களையும் மத சார்பற்ற வகையில் பாதுகாக்க வேண்டுமென்பது ஜனாதிபதியின் கொள்கை. அதற்கு முன்னுரிமை கொடுத்து நாம் உரிய முறையில் செயற்படுவோம். சிலர் தமது அரசியல் சித்தாந்தக்களுக்கேற்ப தீவிரவாதக் கொள்கைகளை வெளிப்படுத்தலாம் ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ துன்புறுத்த முடியாது. மக்கள் தமது மதத்தைப் பின்பற்றித் தமது கலாச்சார விழுமியங்களின்படி வாழ உரிமையுண்டு. ஒவ்வொருவரும் மற்றவரைத் துன்புறுத்தாது நாட்டின் சட்டங்களை மதித்து வாழவேண்டும்” எனப் பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)