‘வடக்கில் பல இளைஞர் வேலையற்றிருக்க சீனருக்கு வேலையா? – சுமந்திரன் கேள்வி

வடக்கில் பல இளைஞர்கள் வேலைகளின்றித் திண்டாடும்போது சீன பிரஜைகளுக்கு வடக்கில் வேலைகளை வழக்குவது எந்த வகையில் நியாயமானது?” என யாழ் மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தநது ருவீட் மூலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

“கடந்த ஞாயிற்றுக் கிழமை (27), காலை 9:00 மணி போல், குடத்தனையிலுள்ள எனது வீட்டுக்கு அருகில், பருத்தித்துறையிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் கட்டுமானப் பணியொன்றில் சீனப் பிரஜை ஒருவர் வேலையில் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையற்றுக் கஷ்டப்படும்போது ஏன் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கக்கூடாது” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் சீன நிதியுதவியுடன் பல கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், அவற்றில் பணி புரிவதற்கென சீனப் பிரஜைகளை, பெரும்பாலும் சீன சிறைக் கைதிகளைக் கொண்டுவருவதும் முந்திய ராஜபக்ச ஆட்சியிலிருந்து நடைபெற்று வரும் ஒரு நடைமுறை. துறைமுக நகரம் உட்பட, இலங்கை முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் பணியாற்றி வருகிறார்கள். ஆபிரிக்கா, இந்தோ சீன நாடுகளிலும் இதே நிலைமை தான். வங்காள தேசத்தில் சீனப் பணியாளர்களுக்கும் உள்ளூர்ப் பணியாளர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றதால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.