NewsSri Lankaமாயமான்

வடக்கில் சீன கடலட்டைப் பண்ணைகள் – அரசியலா? அபிவிருத்தியா?

மாயமான்

சமீபத்தில் சீனத் தூதுவர் நல்லூரில் பொட்டுடனும் பூமாலையுடனும் மீண்டுமொருதடவை தமிழர்களின் காதில் பூவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது வியாபாரச் சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அரியாலையில் சீன நிறுவனம் தொடக்கி வைத்த கடலட்டை வளர்ப்புத் தொழில் இப்போது வடக்கு மக்களை அருவி வெட்டுவதிலிருந்து அட்டை வளர்ப்புக்கு ஈர்த்துவிட்டிருக்கிறது.

Image Courtesy: OseanAsia

சீனர்களிடையே மிகப் பிரபலமான உணவாக இருப்பது கடலட்டை. சீனா, தாய்வான், ஹொங் கொங், சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் கடலட்டை உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்குகாகப் பாவிக்கப்படுகிறது. முடக்கு வாதம் (arthritis), சிலவகைப் புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மைகள் இவற்றில் உண்டெனப் பேசப்படுகிறது. கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக ஆசிய-பசிபிக் நாடுகளால் வர்த்தகரீதியாக பிடிக்கப்பட்டுவரும் காரணத்தால் இப் பிராந்தியங்களில் கடலட்டை அருகிப் போயுள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் சீனா எறிந்த கல்லில் விழுந்த சின்ன மாங்காய். மற்றது ஆடிக்கொண்டிருக்கிறது.சூழல் முக்கியத்துவம்

கடலட்டைகள் கடல் வாழ் உயிரினத்தின் ஒத்திசைவான சூழலை நிர்வகிக்க மிகவும் இன்றியமையாதன. வயல்களில் எப்படி மண்புழுவின் தேவை அவசியமானதோ அதே போன்று கடலடி நிலத்தையும் ‘உழுது பண்படுத்தித்’ தருவதன் மூலம் இதர உயிரினங்கள் செழிப்புடன் வாழ கடலட்டைகள் உதவிசெய்கின்றன. கடலடி மேற்பரப்பில் தேங்கிப்போகும் படிமங்களைக் கலைத்து இதர உயிரினங்களுக்குத் தேவையான போஷாக்குணவுகளை மேற்பரபுக்குக் கொண்டுவருவது முதல் கடல்நீர் அமிலத்தன்மையுடையதாக மாறாமல் இருப்பதற்கும் அவை உதவி செய்கின்றன. இதனால் கடல்களுக்கு வளம் சேர்க்கும் பவளப்பாறைகள் அமிலத்தால் அழிந்துபோகாமல் பாதுகாக்கப்படுகின்றன. சில கடலுயிரினங்களுக்கு கடலட்டைகள் தீனியாக அமைந்தாலும் பெரும்பாலான உயிரினங்களோடு அவை ஒற்றுமையாகவே வாழ்கின்றன. கடலட்டைகளின் குதவழிகளில் மறைந்து நிற்பதன்மூலம் பல சிறிய மீன் குஞ்சுகள் பிற உயிரினத்திடமிருந்து தப்பிக்கொள்ளவும் முடிகின்றது.

எனவே கடல்வாழ் உயிரினத்தின் சூழற் சமநிலையை நிர்வகித்துவரும் முக்கியமான உயிரினங்களில் கடலட்டையும் ஒன்று என்பது சூழலியலாளர்களுக்கு தெரிந்த ஒரு விடயம். இது அருகிப் போகும்போது பவளப்பாறைகள், கடற் தாவரங்கள் முதல் மீனினம் வரை நிரந்தரமாக அருகிப் போவதற்கு நாமே காரணமாகவும் ஆகிவிட நேரிடலாம் என அவர்கள் எச்சரித்து வருகிறார்கள். வடக்கு மாகாணக் கடல் இவ்வகையான சூழலைக் கொண்டுள்ள ஒன்று. எமது மக்களின் நீண்டகால உணவுத்தேவையைச் சமாளித்து வந்த ஒன்று.

Image Courtesy: OseanAsia

சீனாவின் பசி

சீன மக்களின் பாரம்பரிய மருத்துவ மற்றும் ருசித் தேவைகளைக் கடலட்டைகள் நிறைவேற்றி வருகின்றன. சீனாவின் பசியைப் போக்கும் இவ்வுயிர் கடந்த சில தசாப்தங்களில் மிகவும் இலாபகரமானதான கடற்தொழிலாக மாறியிருக்கிறது. பிலிப்பைன்ஸ், பபுவா நியூ கினி, தன்சானியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகமாக மாறியிருக்கும் கடலட்டை பிடிப்பு தற்போது ஆசிய பசிபிக் பிராந்தியக் கடல்களிலிருந்து ஏறத்தாழ முற்றாக அழிந்துவிட்ட நிலையில் இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கு நகர்ந்திருக்கிறது.

அழகும் கவர்ச்சியுமிக்க திமிங்கிலம் போன்ற விலங்குகளை அழிந்துவிடாமல் நிறுத்துவதற்குப் போராடிவரும் சூழலியலாளர்களின் அவதானத்தையும் கருணையையும் அழகற்ற கடலட்டைகளால் பெறமுடியாமல் போய்விட்டது துர்ப்பாக்கியம் தான். இப்போது ஓரிரு அமைப்புகள் இவற்றுக்காகவும் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இவற்றின் பேரழிவால் சமுத்திரங்களின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் எனச் சில விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.வட மாகாண மீனவர்கள்

அதே வேளை வடமாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீண்டும் ஒருதடவை சர்வதேச அரசியல் சூறாவளியில் சிக்கிச் சீரழியப்போகிறார்களா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. வடகிழக்கு மாகாணங்களில் நடந்துவரும் மண்ணகழ்வுகள் முதல் அம்மக்களின் இயல்புவாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான வியாபார முயற்சிகளை ‘வரவேற்கும்’ அரசியல்வாதிகள் அவற்றினால் ஏற்படக்கூடிய நீண்டகால தீமைகளைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

தற்போது கீ லான் என்ற சீன நிறுவனத்தால் அரியாலையில் நிர்வகிக்கப்பட்டுவரும் கடலட்டை வளர்ப்புப் பண்ணை தரும் ஊக்கத்தால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 600 மீனவர்கள் தமது கடற்தொழில்களை விட்டு கடலட்டை வளர்ப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்திய இழுவைப் படகுகள் அவர்களது கடலெல்லைகளுக்குள் புகுந்து மீன்களை வாரியிழுத்துச் செல்வதால் அவர்களது வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் தமது வருமானத்தைத் தக்கவைக்க அவர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடத் தயாராகிவருகிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம்தான். ஆனாலும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால் இருக்கக்கூடிய ஆபத்தை ரப்பர், தேயிலையை நம்பி வாழும் மக்களின் நிலைமையைக் கண்டாவது அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரை, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அவர்களை மிக மோசமாகப் பாதிக்காமல் இருப்பதற்கு அவர்கள் தமது சுய வளங்களில் தங்கியிருக்கப் பழகியிருந்தமையும் ஒரு காரணம். கடல் வளம் அதில் மிக முக்கிய பங்கை எடுத்திருந்தது என்பதை நாம் மறக்க முடியாது. அதே வேளை பல ஆபிரிக்க நாடுகளில் சீனா முன்னெடுத்த பல திட்டங்களினால் அந் நாடுகளின் சுய வளப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்ட விடயங்களும் அறிந்திருக்கப்படவேண்டிய விடயங்கள். பல ஆபிரிக்க நாடுகளில் பெரும் மீன்பண்ணைகளை உருவாக்கிய சீனா இறுதியில் தமது மக்களை மட்டும் சார்ந்த பொருளாரத்தையே அந்நாடுகளிலும் உருவாக்கியமையும் இப்போது அந்நாடுகளின் மக்கள் தமக்குத் தேவையான மீனை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ள கதைகளைத் தமிழரும் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது அரியாலை பண்ணையில் விளையும் கடலட்டைகள் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதமொன்றுக்கு ஒரு கடல் விவசாயிக்கு 60,000 இலங்கை ரூபாய்கள் வரை வருமானத்தை இது ஈட்டித்தருமெனக் கூறப்படுகிறது. இதனால் பல மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித்தொழிலை விட்டுவிட்டு கடலட்டை வளர்ப்பிற்கு மாறத் தீர்மானித்துள்ளனரெனத் தெரிகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இதுவரை 170,000 கடலட்டைக் குட்டிகள் / குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளனவென கீ லான் நிறுவன அதிகாரியான சிறி கணேசன் என்பவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது வெற்றியளிக்குமானால் இனிமேல வடமாகாண மக்கள் வேறு மாகாணங்களிலிருந்து அல்லது இந்தியாவிலிருந்து மீனை இறக்குமதி செய்யவேண்டியும் ஏற்படலாம்.அரசியல்

கடலால் சூழப்பட்ட இலங்கையின் இதர மாகாணங்களில் தமது கடலட்டைப் பண்ணைகளை நிறுவாது வடக்கில் அவற்றை நிறுவுவதற்குக் காரணம் தனது எதிரியான இந்தியாவுக்கு மிக அருகில் நிலைகொள்வதற்கான சீனாவின் இந்த நகர்வு என்பதே பெரும்பாலான அரசியல் அவதானிகளின் கருத்தாகும். பருத்தித் துறையில் நின்று “இந்தியா எவ்வளவு தூரம்” என்று சீனத் தூதுவர் கேட்பதற்கும் இக் கடலட்டைப் பண்ணைக்கும் நெருங்கிய உறவிருக்கிறது. தென்னிலங்கையில் இடதுசாரிகளையும், தொழிற்சங்கங்களியும் தம் வசப்படுத்தியதன் மூலம் மக்களிடம் எதுவித எதிர்ப்பையும் சந்திக்காது அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகநகரம் ஆகியவற்றை நிறுவியதன் பின்னர் சீனாவின் கவனம் இப்போது வடக்குக்குத் திரும்பியிருக்கிறது. இந்தியக் கரைக்கு மிக அண்மையிலுள்ள மூன்று தீவுகளில் களமிறங்க எடுத்த முயற்சியை இந்தியா நிறுத்திவிட்டதன் பின்னர் இப்போது வடமாகாண மீனவருக்கு உதவி செய்வதென்ற கருணை நடவடிக்கையுடன் களமிறங்குகிறது சீனா.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆமை நடை போட்டு வரும் இந்தியாவின் மந்த நகர்வுகளும் சீனாவின் இம்முயற்சிகளுக்கு ஊக்கமளித்திருக்கின்றன. குறிப்பாக இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்தும்படி வடபகுதி மீனவர்கள் மிக நீண்டகாலமாகக் கதறிக்குரல் கொடுத்துவருவதை இந்தியா சட்டை செய்ததாகவே தெரியவில்லை. இந் நிலையில் வடபகுதி மீனவர்களைச் சீனா இலகுவாகத் தனது வலைக்குள் போட்டுக்கொண்டமை ஆச்சரியப்படும் ஒன்றல்ல. எனவே சீனாவின் இந்த பொருளாதார / அரசியல்/ இராணுவ நகர்வு தமிழர்களைவிட இந்தியாவுக்கே அதிக ஆபத்தைக் கொண்டுவரப்போகிறது. தீவுப்பகுதி மின்சார நிலையங்களைத் தடுத்து நிறுத்தியமைபோல தமிழருக்கு வாழ்வாதரத்தைத் தரப்போகும் இப்பண்ணைகளை இந்தியாவால் இலகுவில் நிறுத்தமுடியாது எனபதைச் சீனா உணராமல் இருந்திருந்தால் நல்லூரில் ‘பணக்காரப் பெரியப்பா’ ஸ்தானத்தை அதனால் எடுத்திருக்க முடியாது.

அடுத்த தடவை சீன அதிகாரி வடக்குக்கு வரும்போது யாரோ ஒருவர் அவர் காலில் விழுந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

Video Courtesy: Economynext