வடக்கில் காணி மீள் ஒப்படைப்பு – அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது?

1985 ஆண்டு எல்லைகள் வரை காணிகளை மீளக்கையளிக்க வனத்துறை இலாகா தயாராகிறது

வட மாகாணத்தில் வனவிலங்கு, தொல்பொருள், வனத்துறைத் திணைக்களங்களின் பணிப்பின் பேரில் இராணுவத்தினால் கையகப்ப்டுத்தப்பட்ட காணிகளை உரியவர்களின் விவசாயத் தேவைகளுக்காக விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் படியாக வனத்துறையினால் அடையாளமிடப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க புதிதாக நியமிக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றில் இவிடயம் ஆராயப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தலைவர் ஆர். சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் தொல்பொருள், வனத்துறை, வனவிலங்குப்பாதுகாப்பு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு பின்னர் விடுவிக்கப்படவுள்ளதென ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காணிகள் விவசாயத் தேவைகளுக்காக முதலில் மீளக்கையளிக்கப்படுமென ஜனாதிபதி இச்சந்திப்பின்போது தெரிவ்த்திருக்கிறார். விடுவிக்கப்படவுள்ள காணிகளை அடையாளப்படுத்துவதுடன் அவை விடுவிக்கப்படும் திகதிகளையும் அறிவிக்கும்படி ஜனாதிபதி இராணுவத்தினரைப் பணித்துள்ளதாகவும் தற்போது அறியப்படுகிறது.

கல்நடுகைகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட சில காணிகள் இன்னும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இக்கற்கள் சில தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அங்கு நடப்பட்டவை எனவும் அவற்றை விரைவில் அகற்றி காணிகளை விடுவிக்கப்போவதாகவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இச்சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.

அதே வேளை 1985 அ ஆண்டு வரையிலான எல்லைகளுக்கு காணிகளை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடத் தாம் தயாராவதாகவும் ஆனால் இதை நடைமுறைப்படுத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை எடுக்கலாம் எனவும் வனத்துறைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணிகளை விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கப்படும் அதே வேளை அவற்றுக்கான காலவரைமுறை தரப்படாமை ஏமாற்றமளிக்கிறது எனக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ரீதியில் வனத்துறைத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் வன்னியாராச்சி தெரிவித்துள்ளார் (தி மோர்ணிங்) (Image Credit: The Morning.lk)