வடக்கில் எலிக்காய்ச்சல்: குழப்பமடையவேண்டாமென மருத்துவர் சத்தியமூர்த்தி வேண்டுகோள்
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து வடக்கில் சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படும் ‘லெப்ரோஸ்பிறோஸிஸ்’ நோய் தீவிரமாகப் பரவிவருகிறது எனவும் இதுவரை 7 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இநோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் குழப்பமடையாது உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கோ அல்லது அருகிலுள்ள இதர சுகாதார நிலையங்களுக்கோ செல்லும்படி யா. வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரை மரணமடைந்த 7 பேர்களும் பருத்தித்துறை, சாவகசேரி மற்றும் கரவெட்டி சுகாதார பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பரிசோதனைகளையடுத்து அனைவரும் எலிக்காய்ச்சலின் காரணமாகவே மரணமாகியிருக்கிறார்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த மருத்துவர் சத்தியமூர்த்தி “காலத்திற்குக் காலம் இப்படியான தொற்றுநோய்களின் பரவல் தோன்றுவதும் மறைவதும் வழக்கம். இந்நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகக் கருதும் மக்கள் குழப்பமடையாமல் யாழ். மருத்துவமனையையோ அல்லது அருகிலுள்ள இதர மருத்துவ நிலையங்களையோ அணுகி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும், இதற்கான சிகிச்சைகளை அளிக்க இந்நிலையங்கள் தயாராக இருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதார அமைச்சைச் சேர்ந்த இரு குழுக்கள் கடந்த வாரம் வடமாகாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 நோயாளிகளும், யாழ். போதனா வைத்தியசாலையில் 11 நோயாளிகளும் எலிக்காய்ச்சல் நோய்க்காக சிகிச்சைய்ளிக்கப்பட்டு வருகிறார்கள். நாடு தழுவிய ரீதியில் இதுவரை 12,000 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அதில் மார்கழி மாதத்தில் மட்டும் 85 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன எனவும், இத்தொற்றுக்கள் காரணமாக நாடு முழுவதும் இதுவரை 200 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘லெப்ரோஸ்பிறோஸிஸ்’ எனப்படும் இந்நோய் ‘லெப்ரோஸ்பிறா’ எனப்படும் பக்டீரிய தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. எலிகள் மட்டுமல்லாது வேறு சில வளர்ப்பு மிருகங்கள் மூலமாகவும் இப் பக்டீரியா பரவலடைகிறது. இத்தொற்றுக்குள்ளாகியவர்கள் தலைவலி, தசை வலி, காய்ச்சல், சிலவேளைகளில் சுவாசப்பைகளுள் இரத்தக்கசிவு, மெனிஞ்சைற்றிஸ் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். இந்நோய் முற்றியவர்களில் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக (காமாளை) மாறுவதுடன் இவர்களில் சிறுநீரக பாதிப்பு, இரத்தோட்டம் ஆகியவையும் ஏற்படலாமென மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
