Science & TechnologySri Lanka

வடக்கில் அதானி குழுமம் – மன்னார், பூநகரியில் மின்சார உற்பத்தி

கோதாபய அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இழுபறியில் இருந்துவந்த அதானி குழுமத்தின் மின்னுற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மன்னார், பூநகரியில் அதானி குழுமத்தினால் நிறுவப்படவிருக்கும் காற்றாடி மின்னாலைத் திட்டத்திற்கான அங்கீகாரத்தை இலங்கை முதலீட்டுச் சபை வழங்கியிருக்கிறது.

US 442 மில்லியன் செலவில் நிறுவப்படவிருக்கும் இத் திட்டத்தின் கீழ் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும் பூநகரியில் 100 மெகாவாட் மின்சாரமும் உற்பத்திசெய்யப்படுமெனக் கூறப்படுகிறது. துரிதமாகச் செயற்படுத்தக்கூடிய இம் மின்னாலைத் திட்டத்தினால் 2 வருடங்களில் இலங்கையின் மின்வழங்கல் வலையமைப்புக்கு மின்சாரத்தை வழனக்கமுடியுமென முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இத் திட்டத்தினால் 1500 முதல் 2000 பேர் வரை வேலைவாய்ப்பைப் பெறமுடியுமெனவும் அதானி குழுமத்தின் சூழல் நட்புள்ள இப்படியான திட்டங்களின் மூலம் நாடு குறைந்தது 500 மெகாவாட் மின்சாரத்தைப் பெறமுடியுமெனவும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார்.

2022 இறுதிவரை இந்தியாவில் மட்டும் அதானி குழுமத்தினால் 7,324 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது எனவும் 2023 முடிவில் அது 8,300 மெ.வா. மின்சாரத்தை உற்பத்திசெய்யவுள்ளது எனவும் அதன் மொத்த இலக்கு 1,440 மெ.வா. எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. (Photo by Robina Weermeijer on Unsplash)