Sri Lanka

வடக்கிலுள்ள தமிழர்களின் மனங்களை நாம் வெல்ல வேண்டும் – றோஹித ராஜபக்ச

டிசம்பர் 10, 2019

“வடக்கில் வாழும் பெரும்பான்மைத் தமிழர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதற்கான முழுப்பொறுப்பும் எமது கட்சியயே சாரும்” என பிரதமர் ராஜபக்சவின் மகனான றோஹித ராஜபக்ச கூறியிருக்கிறார்.

வடக்கில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது மனங்களை வெல்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தவறிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

“வடக்கில் உள்ள ஒருவரும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இது அவர்களது பிழையல்ல. எங்களுடைய தவறு. வடக்கிலுள்ள மக்களின் தேவைகளை அறிய எங்களால் முடியாமல் போய்விட்டது. அவர்களின் தேவைகளென்ன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். அவர்களது மனங்களை நாம் வெல்ல வேண்டும்.

“நாங்கள் தமிழ்ச் சமூகத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. எமது அரசியல்வாதிகள் அப்படியான சிந்தனையை எட்டுவதற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வழியில் நாம் பலவற்றைச் சாதிக்கலாம். அவர்கள் சஜித் பிரேமதசவுக்குரியவர்கள் என்ற மனப்பான்மையுடன் நாம் அவர்களைப் பிரித்துப்பார்க்கக் கூடாது. நாம் எல்லோரும் இலங்கையர்களே” என றோஹித ராஜபக்ச நேற்று ‘நெத் எஃப்.எம்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.