வசைக்கேது எல்லை?
அசை சிவதாசன்
இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி பற்றிய கருத்துப் பரிமாறல்கள் சூடாகத்தானிருக்கிறது. கல்லெறி சொல்லெறிகளுக்கு உச்சிப் போவதுகூட ஒரு வகையில் பகீரதப் பிரயத்தனம்தான். உடுக்குகளின் அடிகளுக்கு கலை கொண்டு ஆடாமல் இருப்பதென்பது கடினம். என்பங்குக்கு இந்த ஆட்டம்.
இந்த உடுக்குகளை அடிப்பவர்கள் யாரென்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் கலையெடுத்து ஆடுபவர்கள் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். ஆடல் பாடல் சித்திரம் கலை ஆதியனைய கலைகளில் ஈடுபடுபவர்கள் அவர்கள். ஈன நிலைகளை எங்கு கண்டாலும் அவர்கள் துள்ளுவார்கள்.
நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும்படி கேட்டு நாம் தமிழர் சீமான் அவர்கள் விடுத்திருந்த ஒளியறிக்கையைப் பார்த்தேன். அவருடைய தர்க்கம் போதுமானதாக இல்லை. தமிழ்ச்செல்வனின் மரணத்தைத் தொடர்புபடுத்தி மாவீரர் வாரத்தை மாதமாக்க முயற்சிக்கிறார். அப்படியானால் திலீபன், மாலதி என்று ஒவ்வொருவரது மரணத் திதிகளையும் உள்ளடக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு மாவீரர் வாரத்தை வருடமாக்குவதே.
நிகழ்ச்சி மாவீரர் மாதத்துக்குள் வருகிறது என்பது அவரது வாதம். எனக்குத் தெரிந்தவரை தலைவரால் பிரகடனம் செய்யப்பட்ட மாவீரர் நினைவு வாரம் நவம்பர் இறுதி வாரம் தான். முள்ளிவாய்க்கால் முடிவு வரை புலிகள் அவ்வாரத்தை மிகவும் புனிதமாகச் செய்து வந்தார்கள். முடிவுக்குப் பின் குடும்பச் சண்டை முற்றியதால் பிரிந்து பிரிந்து செய்தாலும் வாரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த வருடம் நிலைமை வேறு. வாரம் மாதமாகியது மட்டுமல்ல வழமையாக அதை ஒழுங்கு செய்யும் புலிகளின் ஆதரவாளர் அமைப்புகள் இந்த சர்ச்சையில் அகப்படாது மௌனம் காப்பதும் நாம் தமிழர் அமைப்பு இவ்விடயத்தில் அதி முனைப்பு காட்டுவதும் ரிஷி மூலம் வேறெங்கோ இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே நான் பார்க்கிறேன்.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 5ம் திகதி இப்படியான இசை நிகழ்ச்சி ஒன்று ரொறோன்டோவில் நடைபெற்றது. எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. இந்த வருடம் நவம்பர் மாதத்தில் வேறு பல களியாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. எதிர்ப்புகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போ இசைஞானியின் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் இந்த தனிமைப்படுத்தல்? சீமானின் ஒளியறிக்கையில் இதற்கான போதுமான காரணங்களில்லை.
இளையராஜா ஈழத் தமிழர்கள் விடயத்தில் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை என்பது உணர்வாளர்களுக்குத் தீனி போடப் போதுமானதாக இருக்கலாம். செய்தவனெல்லாம் தியாகி செய்யாதவன் துரோகி என்றால் துரோகிகளாக்கப்பட்ட தியாகிகளே அதிகமாகவிருப்பர். அது வேறு விடயம். உலகம் போற்றும் இசைக் கலைஞன், அதுவும் ஒரு தமிழன் அவனது இசையைக் கேட்கவெனத் தமிழர்கள் கூடுகிறார்கள். அயல் நாடுகளிலிருந்தும் வண்டி கட்டிக்கொண்டு மக்கள் வருகிறார்கள் அந்த இசைக்கலைஞனைக் கௌரவிக்கவென. அதுவும் மாவீரர் வாரத்தைத் தவிர்த்து அந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைப் பகிஷ்கரிக்கும்படி சீமான் கேட்கிறார்.
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரைத் தியாகம் செய்த போராளிகளின் ஆன்மாக்கள் ஏற்கெனவே தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவாதமே அவசியமற்றது. அவர்கள் தாம் தேர்ந்தெடுத்த கடைமையைச் செய்தவர்கள். சரியோ பிளையோ அது அவர்கள் தெரிவு. அவர்களைக் கௌரவிப்பதும் கௌரவிக்காது விடுவதும் எங்கள் தெரிவு. ஆனால் அவர்களை முன்வைத்து ஏனையோர்கள் சண்டைபிடிப்பதென்பது அவர்களை அவமதிப்பதாகவே பார்க்கப்படும்.
இது சார்ந்து இன்னுமொரு ஆதங்கம். அந்த விடயத்தையும் சொல்லியேயாக வேண்டும். “கனடிய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று கட்டளைபோட நாம் தமிழர் அமைப்புக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்றொரு மதிலெழுத்தை முகநூலில் பார்த்தேன். இதில் ஒரு வகையான ‘பிராந்திய’ வாதம் தொனிப்பதாக நான் பார்க்கிறேன்.
எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஈழ விடுதலைக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததில் தமிழ்நாட்டுக்காரருக்கு ஒரு பிரமாண்டமான பங்குண்டு. இந்திய மத்திய அரசு ஈழத் தமிழருக்கு ‘ஏதாவது’ செய்ய வேண்டுமென்று எண்ணினால் அது தமிழ்நாட்டுக்காரரைச் சமாளிப்பதற்கான முயற்சியின் பெறுபேறாகவே இருக்கும். இதனால் தமிழ்நாட்டு உணர்வாளர்களின் கூச்சல்கள் அவ்வப்போது அவசியமானதுதான்.
நாம் தமிழர் அமைப்பு இசைஞானியின் நிகழ்ச்சியைப் பகிஷ்கரிக்கக் கோருவதற்கான போதுமான காரணங்கள் இல்லைத்தான். அதற்காக அவ்வமைப்பு புலம்பெயர் தமிழரிடம் கோரிக்கைகளை வைக்க முடியாது என்று சொல்வதற்கும் போதுமான காரணங்கள் இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நாமும் தான் கூச்சலிடுகிறோம். ‘அது எங்கள் பிரச்சினை நாங்கள் பார்த்துக் கொள்வோம் உங்களுக்கு என்ன தேவையிருக்கிறது’ என்று தமிழ்நாட்டிலிருந்து பதில் கூச்சல் வரவில்லை. இலங்கையில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டபோது கொழும்பில் அதை நடாத்தக்கூடாது என உலகத் தமிழ் கலை இலக்கியவாதிகள் கோரிக்கை வைத்தார்கள். ‘அது எங்கள் வேலை நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று முகத்தலடித்தாற்போல் பதில் சொல்லவில்லை ஏற்பாட்டாளர்கள். உலக நாடுகள் தமது அரசியல் சுய தேவைகளுக்காக எமக்கு இடும் கட்டளைகளை உச்சி குளிர்ந்து ஏற்றுக் கொள்ளும் நாம் எமது போராட்டத்துக்கு தோள் தந்த தமிழர்களது கோரிக்கைகளை மட்டும் ஏன் விசனத்தோடு அணுக வேண்டும்?
இந்த நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவிருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள். இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணமே பெறத் தேவையில்லை. விழாவுக்கான விளம்பரம் இலவசமாகவும் பல கண்டங்களைத் தாண்டி வீரியத்தோடும் பரம்பலடைகின்றது. இது புலி எதிர்ப்புச் சமாச்சாரமாயிற்றே என்று பல புலி எதிர்ப்பு வாதிகளும் கூட்டம் கூட்டமாக இந்நிகழ்ச்சியைப் பார்க்கப் புறப்படுகிறார்கள். ஊரை இரண்டுபடுத்திவிட்டு அணிலேறவிட்ட நாய்கள் போல முளிக்கப் போகிறார்கள் சுவரொட்டிக்காரர்கள். இலங்கை அரசும் பணச் செலவு ஏதுமில்லாது புலம் பெயர் தமிழர் அமைப்புகளைப் பலவீனப்படுத்த இப் பகிஷ்கரிப்பு போராட்டம் வழிகோலியிருக்கிறது. குளத்தோடு கோபித்துக் கொள்வதினால் குளத்திற்கு நட்டம் எதுவுமில்லை!
நிகழ்ச்சியைப் பகிஷ்கரிக்கச் சொல்லி விடுக்கப்படும் கோரிக்கைகளை உதாசீனம் செய்வதும் செய்யாததும் மக்களைப் பொறுத்தது. புனிதமான மாவீரர் வாரத்துக்குள் நிகழ்ச்சி நடைபெறாத வரைக்கும் வரம்பெதுவும் மீறப்படவில்லை. நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புவர்கள் துரோகிகள் ஆக்கப்படுவார்களானால் தியாகிகளைவிடத் துரோகிகளே அதிகமாகவிருப்பர்.
அசை அக்டோபர் 17 2012