World

வங்காள தேசம்: பிரதமர் ஹசினாவை விரட்டிய ‘வங்காள அரகலய’

வங்காள தேசத்தின் பிரதமர் ஷேய்க் ஹசினா மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவிற்குள் தஞ்சமடைந்திருக்கிறார். இத்துடன் அவரது 15 வருட ஆட்சி முடிவுக்கு வருகிறது. அரச உத்தியோகங்களுக்குப் பங்கீட்டு முறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதம் ஆரம்பித்த மக்கள் எழுச்சி இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது.

76 வயதுடைய ஷேய்க் ஹசினா, 1971 இல் நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவரும் பின்னர் படுகொலை செய்யப்பட்டவருமான முஜிபுர் ரஹ்மான் அவர்களது மகளாவார். ரஹ்மானால் ஆரம்பிக்கப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவராகி 2008 இல் நடைபெற்ற தேர்தலில் வென்று பிரதமராகியவர். மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் போல் இரும்புப் பெண் எனக் கூறுமளவுக்கு ஹசினாவின் ஆட்சி இருந்தது எனப்படுகிறது. சமீபத்தில் இவரது அரசாங்கம் அறிவித்த அரசாங்க வேலைகளுக்கான சிறப்பு பங்கீட்டுத் திட்டத்தின்படி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய வீரர்களின் குடும்பங்களுக்கு அரச வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதை எதிர்ந்து இளையோரும் மாணவர்களும் போர்க்கொடி தூக்கினர். 26 வயதுடைய சமூகவியல் மாணவரும் செயற்பாட்டாளருமான நாஹிட் இஸ்லாம் என்பவரது தலைமையில் ஆரம்பித்த இப்போராட்டம் ஹசினாவின் அடக்கு ஒடுக்கு முறைகளால் அவரது அரசுக்கெதிரான போராட்டமாகத் திரும்பியது. இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானிய ஏவலாளிகள் என்பதுபோன்ற குற்றச்சாட்டையும் ஹசினா முன்வைத்திருந்தார். அது மட்டுமல்லாது இப்போராட்டத்தை அடக்குவதற்கு காவற்படையை ஏவிவிட்டதைத் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டுமிருந்தனர். இதே வேளை போராட்டம் நாடெங்கும் பரவியது மட்டுமல்லாது பல காவல்நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நடைபெற்ற கொலைகளுக்கு ஹசினா பொறுப்பேற்கவேண்டும் என்பதோடு மன்னிப்புக் கோரவேண்டும் என்பதுட்பட 9 நிபந்தனைகளை போராட்டக்காரர் முன்வைத்தனர். பிரதமர் ஹசினா மன்னிப்புக் கேட்கும் ரகமல்ல என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இறுதியில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஹசினாவின் மகனுடைய வற்புறுத்தலின்பேரில் ஹசினாவும் அவருடைய சகோதரியும் இராணுவ ஹெலிகொப்டரில் இந்தியா சென்றடைந்துள்ளனர்.


1971 இல் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் விடுதலையடைந்த நாளிலிருந்து அதன் ஆட்சியும் பாகிஸ்தானைப் போலவே ஸ்திரமற்றதாகவே இருந்து வருகிறது. இராணுவ சதிகளும், ஆட்சிகளும், ஜனநாயக தேர்தல்களுமாக ஆட்சிகள் மாறுவதும் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதுமென வங்காள தேசத்தின் விடுதலை நிரந்தரமான ஒன்றாக இருந்ததில்லை. ஹசினாவின் பதவி விலகலைத் தொடர்ந்து இதற்கு முன்னர் பிரதமராகவிருந்தவரும் இராணுவ ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டவருமான 78 வயதுடைய கலீடா சியா என்னும் பெண்ணின் உடல்நலக்குறைவைக் காரணமாகக் கொண்டு ஜனாதிபதி விடுதலை செய்திருக்கிறார்.

இப்பிரச்சினையில் ஹசினாவின் இந்திய ஆதரவு ஒரு முக்கிய காரணமென ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. வங்காளதேசத்தின் பிரிவினையின்போது முஜிபுர் ரஹ்மானின் போராட்டக்குழுவான முக்தி பஹ்னிக்கு இந்தியா இராணுவப் பயிற்சியும் ஆதரவுமளித்திருந்தது. இப்படையில் இணைந்து போராடியவர்களின் பிள்ளைகளுக்கு அரச உத்தியோகங்களில் முன்னிடம் கொடுக்கப்படவேண்டுமென்றதொரு சட்டத்தை ஹசினா நடைமுறைப்படுத்தவிருந்தார்.

வங்காளதேசத்தின் இப்போராட்டம் தொடர்பாக ஐ.நா.பொதுச்செயலாளர் குத்தேரஸ் உட்படப் பல மேற்குநாடுகளின் தலைவர்கள் போராட்டக்காரருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.