News & AnalysisSri Lanka

வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம்

ஒரு அலசல் – மாயமான்

கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல.

பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம்.

சென்ற வருடத்து வட்டியைக் கொடுப்பதற்கு சீனாவிடம் புதிதாகக் கடன் வாங்கியிருந்தது. ‘இந்தா பிடி’ என்று இந்தியாவிடம் ‘கைமாற்றாக’ வாங்கிய பணத்தைக் கால அவகாசம் முடிவதற்கு முதலே திருப்பிக் கொடுத்திருந்தது. மீண்டும் இந்த வருடமும் இந்தியாவிடம் விண்ணப்பித்திருந்தது என்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பதிலுக்குக் காத்திராமல் வங்காளதேசத்திடம் போயிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம், துறைமுக நகர விடயங்களில் இந்தியா கடுப்பாகியதும் காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையின் இந்த ‘கடன் வாங்குதலுக்கு’ பொருளாதாரக் காரணங்களை விட, இதில் அரசியல் காரணங்கள் அதிகமிருக்குமெனவே எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்க நன்கொடையாகத் தூக்கிக் கொடுத்த மில்லேனியம் சலெஞ் கோர்ப்பொறேஷனின் $480 மில்லியன் பணத்தை ‘வேண்டாம் வைத்துக்கொள்’ என்று தூக்கியெறிந்துவிட்டு ‘இரப்பான்’ வங்களாதேசத்துடன் வெறும் $200 மில்லியனுக்கு இரந்துபோகவேண்டியதற்கு வேறென்ன காரணங்கள் இருக்க முடியும்?

வங்காள தேசத்திடம் கடன் வாங்கியதற்கான அரசியல் காரணங்கள் பல. ஒன்று: சார்க் (SAARC) அமைப்பிற்குள் உள்ள நாடுகளிற்கு இந்தியாவே கடன்களையும், உதவிகளையும் வழங்கும் ‘மூத்த அண்ணன்’ நாடாக இதுவரை இருந்துவந்தது. அரசியல், பாதுகாப்பு, பொருளாதார விடயங்களில் அவர்தான் ஆலோசகராக இருந்தார்.

‘பட்டி வீதி’ப் பெருந்திட்டத்தின் பிரகாரம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செருகிய ஆப்பு பெற்றுக்கொடுத்த பாரிய இடைவெளியில் துறைமுக நகரத்தைக் கொண்டுவந்து சொருகி விட்டு எக்காளமிடுகிறது சீனா. இத்திட்டத்தில் சீனாவின் பின்னால் வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு, மியன்மார் ஆகியன நெளிந்துகொண்டு வரிசையில் நிற்கின்றன. ‘எங்களது கலாச்சார உறவு 2,000 வருடங்கள் பழமையானது’ எனக்கூறி கோதாபயரைப் புளகாங்கிதமடைய வைத்து வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி இலங்கையைக் கைப்பற்றிக்கொண்டாகிவிட்டது .

நோபல் பரிசு சமாதான ராணி ஓங் சான் சூ சீ, சீநாவின் கோப்பையில் விழுந்து மியன்மாரின் துறைமுக மாகாணத்திலிருந்து றொஹிங்யா முஸ்லிம்களைத் துரத்திவிட்டு அதைப் பட்டி வீதிக்குப் பரிசளித்தார். ஆனால் அதைப் பெற்றவுடன் அவரைக் கலைத்துவிட்டு மியன்மாரைத் தன் காலடிக்குள் கொண்டுவந்திருக்கிறது சீனா.

இலங்கையைப் போலவே வங்காள தேசத்துக்கும் கடனை அள்ளிக் கொடுத்து பல உள்ளக நிர்மாண, நிதித்துறைத் திட்டங்கள் மூலம் அந்நாட்டையும் தன் கடன்சுமையால் அடிமையாக்கியது. 2035 இல் வங்த்தின் கடன் $50 பில்லியன் ஆகும் எனப்படுகிறது. ஆனால் அது தனது சுய திறமையால் சீனாவின் பல கபட திட்டங்களை இனம்கண்டு பலவற்றை மீள் ஒப்பந்தம் செய்தும் சிலவற்றிலிருந்து முற்றாக மீண்டும் வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் போலவே சீனா துறைமுக எஞ்சினியரிங் கொம்பனி (China Harbor Engineering Company (CHEC)) பல திட்டங்களைத் தன்வசம் மடக்கிக் கொண்டுள்ளது. குறைந்த செலவில் கட்டி முடிப்பதாகக் கூறப்பட்ட திட்டங்கள் பல பாதியில் இரண்டு மடங்காகியதால் வங்காளதேசம் பலவற்றை ரத்துச் செய்தது. இந்நிறுவனமும் சீமென்ஸ்நிறுவனமும் இணைந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பிடிபட்டதால் சில ஒப்பந்தங்கள் ரத்தாகியது மட்டுமல்லாது அந்நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலிலும் இடப்பட்டுள்ளன. இருப்பினும் இலங்கைக்கு அது பிரச்சினையேயல்ல. இலஞ்சம் கொடுது அகப்பட்ட நிறுவனம் இலங்கையில் ஒப்பந்தங்களைச் செய்கிறது என்றால் புதிதாக இலஞ்சங்கள் கைமாறுகின்றன என்றுதான் அர்த்தம்.

இப்படியான நிலையில் இருக்கும் வங்காள தேசம் எப்படி இலங்கைக்குக் கடன் கொடுக்கும்? இதில் பொருளாதாரத்தைவிட அரசியல் தான் அதிகம் கலந்திருக்கிறது என நிறுவுவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

‘நீ கடன் தராவிட்டால் எனக்குக் கடன் தர இன்னுமொரு சார்க் நாடு இருக்கிறது. நான் தொடர்ந்தும் உன்னில் தங்கியிருக்கத் தேவையில்லை’ என்பது இந்தியாவுக்கு இலங்கை தரும் ஒரு செய்தி.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தப்படி இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளை இந்தியாவுக்கு எதிராகத் திருப்புவதற்காக சீனா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவின் எதிரிகள் ஒரே அச்சில் இணைகிறார்கள். உடல் நிலை சீரற்று இருந்த போதிலும், கொறோணா தொற்று மும்முரமாக இருந்த காலத்தில் வங்காளதேச சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கு மஹிந்த முக்கிய விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்றால் ஸ்கிறிப்ட் சீனாவினால் எழுத்தப்பட்டது என்பதே அர்த்தம்.

ஒரு ‘basket case’ என ஹென்றி கிஸ்ஸிங்கர் நையாண்டி செய்திருந்த நாடு வங்காளதேசம். இப்போது அது ஒரு மத்தியதர வருமான மக்களைக் கொண்ட நாடாக மாறிவருகிறது. ஊழல் மிக்க நாடாக இருந்தாலும், பல சிறந்த சமூக பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இஸ்லாமிய நாடாக இருந்தாலும், பால் சமத்துவம், பெண்களுக்கு வேலை எனப் பல முற்போக்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானைப் போல ஒரு ‘தோல்வி கண்ட நாடாக அது இல்லாமல் ஒரு படித்த நாட்டின் பண்புகலைக் காட்டி வருகிறது. அதன் பொருளாதார வளர்ச்சி 8.1% (2019). அது கடன்கார நாடாக இருந்தாலும் தன் கடனைத் திருப்பியடைக்கும் வல்லமையுள்ள பொருளாதாரத்தை அது கொண்டிருக்கிறது. முதன் முதலாக அது இலங்கைக்குக் கடன் கொடுத்ததன் மூலம் உலகில் அது தனக்கென்றொரு ஸ்தானத்தை எடுத்து ஹென்றி கிஸ்ஸிங்கரின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது.

பட்டி வீதி மூலம் சீனாவுடன் கைகோர்த்த உறவு இப்போது பலம் கொண்ட பேரணியாக உருவாகிறது என இலங்கைக்கான இக் கடன் மூலம் வங்காளதேசம் இந்தியாவுக்கும் ஒரு காத்திரமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. இலங்கை ஒரு கன்னத்தில் அறைய வங்காளதேசம் மற்றக் கன்னத்தில் அறைந்து இந்தியாவுக்குப் பாடம் புகட்டியிருக்கிறது.

இந்த சிறிய $200 மில்லியன் டாலர் கடனை இலங்கை சீனாவிடமிருந்தே alipay மூலம் பெற்றிருக்கலாம். கடனல்ல இங்கு நோக்கம். சார்க்கை உடைக்கும் சீநாவின் திட்டத்தின் வெற்றிகளில் இதுவுமொன்று.

இக் கடன் currency swap என்னும் வகையானது. $200 மில்லியன் டாலர்களாகக் கொடுக்கப்பட்ட இக் கடனை இலங்கை அரசு ரூபாய்களில் திருப்பிக் கொடுக்கலாம். நாணையப் பெறுமதியைப் பொறுத்து, பெரும்பாலும் இலங்கை இதில் இலாபமடைவதற்குச் சாத்தியங்களுண்டு. ஆனால் இங்கு இலாபமல்ல நோக்கம்.

இலங்கைக்கான அடுத்த கடன் இன்னுமொரு ‘இரப்பான்’ சார்க் நாடான பாகிஸ்தானிலிருந்து வரலாம், அடுத்தது பூட்டான், அடுத்தது நேபாளம். கடனிலும், கடலிலும் மூழ்கிவரும் மாலைதீவும் ‘ தனது பலநூற்றாண்டுகள் கலாச்சார உறவைக்கூறி இலங்கையின் கோவிட்டினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க இடம் கொடுத்ததன் மூலம் ‘நானும் ரவுடி தான்’ கணக்கில் சீன அணியோடு நின்று கண்ணடிக்கிறது.

இலங்கையின் வருமானத்தைப் பெற்றுத் தருவன முக்கியமாக மூன்று அம்சங்கள். ஏற்றுமதி வணிகம் (ஆடை வகை, தேயிலை, ரப்பர்), சுற்றுலா (பெரும்பாலும் ஐரோப்பியர்), இலங்கைப் பணியாளரால் வருவாய் (மணி ஓடர் பொருளாதாரம்). உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு, கோவிட் பெருந்தொற்று, பூகோள அரசியல் ஆகிய மூன்றையும் தற்போதய ஆட்சியாளர் கையாண்ட முறை வங்காளதேசத்தைப்போல் நாட்டை முன்னேற்றும் வழியல்ல. அது ராஜபக்சக்களை மட்டும் முன்னேற்றும் வழி. அதில் இலங்கைக்கு மூக்கு போனாலும், இந்தியாவுக்கு சகுனம் பிழைத்துவிட்டது என இலங்கை புல்லரிக்கிறது தெரிகிறது.

ஒட்டு மொத்தத்தில் இந்த வங்காளதேச வாரி வழங்கல் ஒரு பொருளாதார நடவடிக்கை என்பதைவிட ஒரு சீன இயக்கத்தில் அரங்கேறிய இலங்கையின் ‘உனக்கு ஆப்பு வைக்கிறேன் பார்’ நாடகத்தின் முதலாவது காட்சி மட்டும்தான்.