UncategorizedWorld

லிபியா | உலகின் அடுத்த போர்க்களம்

தயாராகும் வல்லரசுகள்

சிரியாவின் நிர்மூலம் ஓரளவு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. வல்லரசுகள் தமது நவீன ஆயுதங்களைப் பரிசோதிக்க எடுக்கும் புதிய களமாக லிபியா தயாராகிக் கொண்டிருக்கிறது.

கொறோணாவைரஸோடு உலகம் போராடிக்கொண்டிருக்கையில் லிபிய போர்க்களத்தில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ரஸ்யா தனது 14 மிக் 29 ரக மற்றும் SU-24 ரக போர் விமானங்களை லிபியாவுக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னணி

முஹமார் கடாபியின் ஆட்சி ஒழிக்கப்பட்டதிலிருந்து லிபியாவில் தேசிய உடன்பாட்டு அரசாங்கம் (Government of National Accord (GNA)) என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.நா. சபை, பெரும்பாலான மேற்குநாடுகள், துருக்கி ஆகியன ஆதரவாக உள்ளன.

மறுபக்கத்தில், GNA அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் போராடி வருபவர், கடாபியின் முன்னாள் தளபதியும், கடாபியை வீழ்த்துவதில் முன்னின்றவருமான ஃபீல்ட் மார்ஷல் கலிஃபா ஹஃப்ரார். லிபிய தேசிய இராணுவம் (Libyan National Army (LNA)) என்ற அமைப்பின் தளபதியாகவிருந்து போரை நடத்தி வருகிறார்.ஹஃப்ராரின் லிபிய தேசிய இராணுவம் இஸ்லாமியத்துக்கு எதிரானதாகவும், இன, மத சார்பற்ற அரசொன்றை நிறுவவேண்டுமெனவும் போராடிவருவதாகக் கேள்வி. இதுவரை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 9 மாநாகராட்சி அரசுகளைத் தனது இராணுவ நிர்வாகத்தினுள் கொண்டுவந்திருக்கிறார். இவருக்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் உதவி செய்துவருகின்றன. மே 2020 இல், இரண்டாவது லிபியப் போர் எனப் பெயரிடப்பட்ட இரண்டாம் கட்டப்போரை ஆரம்பித்தார்.

துருக்கியின் வருகை

இதுவரை காலமும் ஐ.நா. வின் ஆதரவுடன் ஆட்சியிலிருக்கும் அரசு, சீனா, ரஸ்யா ஆகிய இரண்டு வல்லரசுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவுடன் போராடிவரும் ஹஃப்ராரின் பலம் வாய்ந்த தேசிய இராணுவத்துடன் போராடி வெல்வதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்தன. ஹஃப்ரார் சீனாவின் ஆளில்லா விமானங்களின் மூலம் துல்லியமான குண்டு வீச்சுக்களை நிகழ்த்தி வெற்றிகரமாகப் போரை நகர்த்திக்கொண்டிருந்தார். ஆனால், சமீபத்தில் துருக்கியின் வருகையோடு அச் சமன்பாடு மாறிவிட்டது.

கடந்த சில நாட்களில், துருக்கி, தனது அதி நவீன ஆளில்லா விமானங்களின் மூலம் ஹஃப்ராரின் தளங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக ஹஃப்ராரின் முடிவு நெருங்கிவிட்டதுபோல் பல மத்திய கிழக்கு அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.ரஸ்யாவின் படை நகர்த்தல்

இப்பின்னணியில் நேற்று அமெரிக்க இராணுவம் விடுத்த அறிக்கையில், ரஸ்யா 14 போர் விமானங்களை லிபியாவுக்கு நகர்த்தியுள்ளதாக அறிவித்திருக்கிறது. ஆனால் ரஸ்யா இதை முற்றாக மறுத்திருக்கிறது.

அமெரிக்காவில் ஜனாதிபதி ட்றம்பின் இரண்டாவது வருகைக்கான கனவை கொறோனாவைரஸ் தகர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு அமெரிக்காவுக்கு வெளியே போர் ஒன்று ஆரம்பிக்கப்படுவது மிகவும் பலனளிப்பதாகவிருக்கும். எனவே அமெரிக்க இராணுவத்தின் இந்த அறிவிப்பின் பின்னால் கபடத் தன்மை உள்ளதா அல்லது சிரியாவைப் போலவே லிபியாவிலும் தளம் ஒன்றை அமைத்து தனது இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்க ரஸ்யா முனைகிறாதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

சிரியாவிலிருந்த 14 ரஸ்ய விமானங்களிலுள்ள ரஸ்ய அடையாளங்களை அளித்து புதிதாக பெயிண்ட் செய்யப்பட்ட பின்னர் அவை லிபிய தேசிய இராணுவத்தின் கேந்திர தளமான ஜுஃப்ராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் ஆபிரிக்கப் பிரிவு இரண்டு நாட்களுக்கு முன்னர் ருவீட் செய்திருந்தது.

“புதிய விமானத் தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளேன் என திரு ஹஃப்ரார் பிரகடனப்படுத்தியிருந்ததன் அர்த்தம் இப்போது புரிகிறது. அப் போர் ரஸ்ய கூலிப்படைகளினால் ஹஃப்ராருக்காகப் போராடப்படவிருக்கிறது” என அமெரிக்காவின் ஆபிரிக்கப் பிரிவின் தளபதி, ஜெனெரல் ரவுண்செண்ட் கூறுகிறார்.

லிபியாவின் தலைநகர் ட்றிப்பொலியைக் கைப்பற்றுவதற்கு ஹஃரார் எடுத்த முயற்சிகள் படுதோல்வியடந்ததிருந்தது. இந்த நேரத்தில் ரஸ்யா ஹஃப்ராருக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறது.