லண்டன் தமிழ்க் குழந்தைகள் கொலை வழக்கு – தந்தை நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி, லண்டன் புறநகர்ப்பகுதியிலுள்ள இல்ஃபோர்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற சம்பவத்தின்போது தனது இரு பிள்ளைகளையும் கொலைசெய்தாரென நடராஜா நித்தியகுமார் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தின் போது பவின்யா என்னும் பெயருடைய பெண் குழந்தையும், 3 வயதுடைய, நிகாஷ் என்னும் பெயருடைய ஆண் குழந்தையும் தந்தை நித்தியகுமாரினால் கொலைசெய்யப்பட்டிருந்தார்கள்.
இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நித்தியகுமார் தநது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடைபெற்றபோது குழந்தைகளின் தாயார் குளியலறையில் இருந்தார் எனவும் நித்தியகுமார் தனது இரு குழந்தைகளையும் கத்தியால் குத்திவிட்டுத் தன்னையும் குத்தித் தற்கொலைக்கு முயற்சித்தார் எனவும் தெரியவந்துள்ளது. குழந்தை பவின்யா அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாகவும், மகன் நிகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலன் பெறாமையாயால் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது. தந்தை நித்தியகுமார் சிகிச்சைக்குப் பின்னர் பிள்ளைகளைக் கொன்றார் என்ற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தின் மீதான பொலிஸ் விசாரணைகளின்போது நித்தியகுமார், தான் ஒரு கடையில் பணி புரிந்துவந்ததாகவும், அன்று கடையில் வாடிக்கையாளர்களின் தொல்லையால் தான் மனம் குழம்பி மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், புத்தி பேதலித்த நிலையில் தான் குழந்தைகளைக் குத்திக் கொலைசெய்துவிட்டதாகவும் குற்றத்தைத் தான் ஒப்புக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் கூறியதாகத் தெரியவருகிறது.
நித்தியகுமார், முதலில் தன்னைத் தானே குத்தித் தற்கொலை செய்யவே உத்தேசித்ததாகவும் ஆனால் தான் இல்லாமல் பிள்ளைகளின் வாழ்க்கை சிதைந்துவிடும் என்பதால் அவர்களைக் கொன்றுவிட்டுத் தன்னைக் கொலைசெய்ய முயற்சித்ததாகவும் அவர் நீதிபதி முன்னிலையில் தெரிவித்தாகத் தெரியவருகிறது.
இன்று (வியாழன்) லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி திருமதி கட்ஸ் முன்னிலையில் இழ் வழக்கு விசாரிக்கப்பட்டபோது பிரதிவாதி தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
“சம்பவ தினத்தின்போது குற்றவாளி தீவிர மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்தார் என உளநல மருத்துவர்களின் சான்றுகளை, வழக்குத் தொடுநர் டன்கன் அற்கின்சன் நீதிமன்றத்தில் சமப்ர்ப்பித்திருந்தார்.
“பிரதிவாதி கடந்த 10 வருடங்களாக மன்ப்பிறழ்வுக்குள்ளாகியிருந்தார் எனவும், ஆனால் அது வெளியில் தெரியாதவாறும், அதே வேளை அதற்கான சிகிச்சைகள் எதுவும் பெறாத நிலையிலும் அவர் இருந்தார்” என வழக்குத் தொடுநர் மேலும் தெரிவித்தார்.
நித்தியகுமார் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் நீதிபதிக்கு எடுத்துக்கூறப்பட்டது. மனப்பிறழ்வு நிலையில் இச் சம்பவம் நடைபெற்றிருப்பதால் குற்றவாளிக்கு ‘சூழ்நிலைக் கொலை’ (manslaughter) குற்றத்துக்காகத் தண்டனையை வழங்கும்படி வழக்குத் தொடுநர் நீதிபதிக்குப் பரிந்துரைத்தார்.
“நான் இப்போது உமக்குத் தண்டனையை வழங்க விரும்பவில்லை. மருத்துவர்களின் நேரடி சாட்சியத்தின் பின்னரே அதை நான் வழங்குவேன்” எனக் கூறி நீதிபதி நித்தியகுமாரை உளநல மருத்துவம் வழங்கும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கும்படி பணித்தார்.
வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி வழங்கப்படுமென நீதிபதி மேலும் தெரிவித்தார்.
