லண்டனில் வீடு தீப்பிடித்து இரு குழந்தைகளுட்பட நான்கு தமிழர்கள் மரணம்!
லண்டன் தென் கிழக்குப் பகுதியில் பெக்ஸ்லிஹீத், லூவிஷ்ஹாம் என்னுமிடத்தில், ஹமில்ட்டன் வீதியில் அமைந்திருந்த வீடொன்று தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற வீடு நிருபா, குழந்தைகள், தாய்
வியாழன் (18) இரவு சுமார் 8:30 மணியளவில் நடைபெற்றதாகக் கருதப்படும் இத் தீவிபத்தில் இறந்தவர்கள், வீட்டு உரிமையாளரான யோகன் தங்கவடிவேல் என்பவரின் மனைவி நிருபா, அவரது 1 வயதுக் குழந்தை சாஷ்னா, 4 வயதுக் குழந்தை தபிஷ் மற்றும் நிருபாவின் தாயார் ஆகியோராவர். இரண்டாவது தளத்திலிருந்து யோகனின் சகோதரர் யன்னலினூடு பாய்ந்து காயங்களுடன் தப்பிவிட்டதார் என அறியப்படுகிறது. யோகன் அப்போது அவரது பணியிடத்தில் இருந்ததாகவும் மாலை 8:30 மணிக்கு வீட்டிலிருந்து மனைவி தொலைபேசியில் அழைத்து ‘தீ’, ‘தீ’ யெனக் கதறியதாகவும் சிறிது நேரத்தில் அவரது தொலைபேசி மெளனமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இத் தீ விபத்து பற்றி விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இதில் சந்தேகத்துக்குரியதாக எதுவுமில்லை எனவும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நடைபெற்ற வீட்டை யோகன் மூன்று மாதங்களிற்கு முன்னர் வாங்கிக் குடிபெயர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.