Sri Lanka

லசந்த கொலை விவகாரம் | கோதாபய மீது புதிய வழக்குத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி!

மார்ச் 3, 2020

ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக, கோதாபய ராஜபக்ச மீது, லசந்தாவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, புதியதொரு வழக்கை அமெரிக்க நீதிமன்றமொன்றில் பதிவுசெய்துள்ளார். கோதாபய ஜனாதிபதி பதவியில் இல்லாதபோது அவருக்கு ராஜாங்க பிரதானிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு (immunity) இருக்காது என்பதை முன்வைத்து அஹிம்சா இவ்வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

கோதாபய மீது அஹிம்சா அமெரிக்க கீழ்நீதிமன்றமொன்றில் முன்னர் தொடர்ந்த வழக்கை, ‘வெளிநாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு’ என்ற பொதுச் சட்டத்தின் (common law) கீழ் அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தற்போது, ஒன்பதாவது சேர்க்கியூட் மேன்முறையீட்டு நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாது எனத் தீர்த்து, கோதாபய மீதான வழக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.

கடந்த வருடம் (2019) ஏப்ரல் மாதம் லசந்தா விக்கிரமதுங்கவின் கொலையுடன் கோதாபய ராஜபக்சவுக்குத் தொடர்பிருப்பதாகக்கூறி அவர் மீது அஹிம்சா வழக்குத் தொடர்ந்திருந்தார். அஹிம்சா சார்பில் நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான மையம் (Centre for Justice and Accountability (CJA)) என்ற அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டெபெவொய்ஸ் அண்ட் பிளிம்ப்டன் LLP (Debevoise & Plimpton LLP) என்ற சட்ட நிறுவனம் ஆஜராகியிருந்தது.

அஹிம்சாவின் வேண்டுகோளை ஏற்று, கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இல்லாமல் இருக்கின்ற தருணத்தில் ஒரு நாட்டின் அதிபர் என்ற தகமை மட்டும் வழக்குகளிலிருந்து பாதுகாப்பை அவருக்கு வழங்க முடியாது என ஒன்பதாவது சேர்க்கியூட் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

“இத் தீர்ப்பு எனது முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி. எனது தந்தையாரின் கொலையிலிருந்து தொடர்ந்தும் அவர் தப்பியோடிக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி பதவி அவருக்குத் தற்காலிக விடுதலையை வாங்கித் தந்திருக்கலாம் ஆனால் (கொலைக்கான) பொறுப்பிலிருந்து அவரைப் பாதுகாக்க முடியாது. அவரது காட்டுமிராண்டித்தனத்துக்கும், இரத்தக்களரிக்கும் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் ஆனால் நீதிக்கான போராட்டத்தை மட்டும் நாம் ஒருபோதும் விட்டுவிடப் போவதில்லை” என அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்தார்.

” லசந்தாவின் கொலை, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் நடந்ததோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல. ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறை அரசின் சட்டபூர்வமான நடவடிக்கையாகவும் இருக்க முடியாது எனவும், இவ் வழக்கை அஹிம்சா கொண்டு வருவதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு எங்களுக்கு மகிழ்ச்சி” என சீ.ஜே.ஏ. யின் சட்டப் பணிப்பாளர் கார்மன் செங் தெரிவித்தார்.

“கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்பதாவது சேர்க்கியூட் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடையாகாது எனத் தீர்ப்பளித்தமை சரியானதே. ராஜபக்சவுக்கு, ஜனாதிபதி பதவியினால் புதிதாகக் கிடைத்த பாதுகாப்பு, அஹிம்சாவின் மேன்முறையீட்டைச் செய்யமுடியாது தடுத்திருந்தாலும், அவருக்கு தன் தந்தைக்கான நீதியைப் பெறுவதற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என அச் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த நடலீ றீட் தெரிவித்துள்ளார்.